Published:Updated:

ஈஸியா ஒரு எடை மிஷின் !

ஈஸியா ஒரு எடை மிஷின் !

பிரீமியம் ஸ்டோரி
ஈஸியா ஒரு எடை மிஷின் !

இனிமேல் ஒரு பொருளோட எடையை  சரி பார்க்குறதுக்கு எடை மெஷினைத் தேடி அலைய வேண்டாம்... வீட்டிலயே வெயிட் செக் பண்ணிக்கிறதுக்கு வசதியாக புதுசா ஒரு எளிய வெயிட் மெஷினைக் கண்டுபிடித்திருக்கிறான் மதுரை அய்யூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்.

இவன் அய்யூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான்... இவனது இந்தக் கண்டுபிடிப்புக்கு பாஸ்கல் விதிதான் முக்கியக் காரணம். ஒரு பெரிய வண்டியோட டயர் டியூப், மெல்லிய பிளாஸ்டிக் ட்யூப், ஒரு நீண்ட ஸ்கேல், கொஞ்சம் தண்ணீர் அவ்வளவுதான் இதெல்லாம் சேர்ந்ததுதான் இவனது வெயிட் மெஷின்... இதற்கு டிஸ்போஸபிள் வெயிட் மெஷின் எனப் பெயரும் வைத்துள்ளான்...

##~##

''எங்க வீட்டுல ஏதாவது மளிகை சாமான்கள் வாங்கினாங்கன்னா, அதோட எடையை சரி பார்க்கிறதுக்கு இன்னொரு மளிகைக் கடைக்குதான் போவாங்க. அதேமாதிரி, நம்மளோட வெயிட் பார்க்கிறதுக்கு எங்க ஊருல வசதி கிடையாது. டவுனுக்குதான் போகணும்... இதுக்கு ஏதாவது வழி புதுசா கண்டுபிடிக்கணும்னு தோணுச்சு... அப்பதான் ஸ்கூல்ல பாஸ்கல் விதியைப் பத்தி நடத்துனதும் ஒரு ஐடியா கிளிக் ஆச்சு. எங்க அப்பா அம்சத் இப்ராகிம் ஒரு ஆட்டோ டிரைவர். அதனால எங்க வீட்டுல நிறைய தேவை இல்லாத டயர், டியூப் இருக்கும்... அதுல ஒரு டியூபை எடுத்து தண்ணீரை நிரப்பி, அதன் வால்வில் நீளமான கண்ணாடி பிளாஸ்டிக் குழாயைச் செருகி, அதை ஸ்கேல் உயரத்துக்கு இணைத்து விட்டு, தண்ணீர் நிரப்பிய ட்யூப் மேல ஏறி நின்னேன். அப்போ, பாஸ்கல் விதிப்படி எடைக்கு (அழுத்தத்துக்கு) ஏற்ப தண்ணீர் மெள்ள மேலே உயர்ந்து, ஸ்கேல்ல என்னோட வெயிட்டைக் காமிச்சது.''    

இவனது இந்த கண்டுபிடிப்பு, மாவட்ட அளவில் நடந்த கண்காட்சி மற்றும் சென்னை வேல்டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய அறிவியல் போட்டியிலும் முதல் பரிசைத் தட்டியுள்ளது. இதன் பயனாக வேல்டெக் பல்கலைக்கழகத்தினர்  இவனுக்கு கல்லூரிப் படிப்பை இலவசமாக வழங்க ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.

''அப்துல் கலாம்தான் எனது லட்சிய மனிதர், அவரைப் போலவே பெரிய விஞ்ஞானியாக   வர வேண்டும் என்பதே எனது லட்சியம்'' என்கிறான் அபுபக்கர்.

-உ.அருண்குமார்
படங்கள்: க.கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு