Published:Updated:

மலேசியாவில் மூன்று தமிழ்ச் சுட்டிகள் !

மலேசியாவில் மூன்று தமிழ்ச் சுட்டிகள் !

பிரீமியம் ஸ்டோரி
மலேசியாவில் மூன்று தமிழ்ச் சுட்டிகள் !

ந்தியாவில் தோன்றி, இன்று உலகமே கொண்டாடும் விஷயங்களில் ஒன்று யோகா. அந்த யோகாவில் தேசம் கடந்துசென்று,  பதக்கங்களுடன் வந்திருக்கிறார்கள் மூன்று தமிழ்ச் சுட்டிகள்.

தேனி மாவட்டம், கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ரூபன்கார்த்திக், ஜெயந்த் மற்றும் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஆசாத் ஆகியோரே அந்தச் சாதனையாளர்கள்.

சமீபத்தில், மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான யோகா போட்டியில்... முன் வளைதல், பின்னோக்கி வளைதல், நின்ற நிலை, அமரும் நிலை, படுத்த நிலை போன்ற பல பிரிவுகளில் வெற்றிபெற்று, இந்தியாவின் பெருமையை உலகுக்கு நிரூபித்திருக்கிறார்கள்.

''நான் அஞ்சாவது படிக்கும்போது யோகா பயில ஆரம்பிச்சேன். 2010-ல் மாவட்ட மற்றும் மாநிலப் போட்டிகளில் வெற்றி. 2011-ல் தேசிய அளவில் வெற்றி. இப்போது உலக அளவில் வெற்றி. எங்களின் வெற்றியை அறிவித்த அந்த நொடியில் என்னோட அப்பா, அம்மா, மாஸ்டர், எங்க ஸ்கூல் நினைவு வந்து கண் கலங்கிடுச்சு'' என்கிறார் ரூபன் கார்த்திக். இவர் 11 முதல் 14 வயதினருக்கான பின்னோக்கி வளைதலில் முதல் இடத்தைப் பிடித்தார்.

மலேசியாவில் மூன்று தமிழ்ச் சுட்டிகள் !

14 முதல் 17 வயதுப் பிரிவில் பின்னோக்கி வளைதலில் முதல் இடம் பெற்ற ஆசாத், ''தொடர் பயிற்சியும் மாஸ்டரின் வழிகாட்டுதலும் யோகா மேல ஈடுபாட்டை ஏற்படுத்திச்சு. 'நீ நிச்சயமா ஜெயிப்பே’னு அப்பா சொல்லிட்டே இருப்பார். மாஸ்டரும் ஒரு ஃப்ரெண்ட் மாதிரி அன்பா சொல்லிக்கொடுத்தார்'' என்கிறார்.

மலேசியாவில் மூன்று தமிழ்ச் சுட்டிகள் !

11 முதல் 14 வயதுப் பிரிவில் பின்னோக்கி வளைதலில் மூன்றாம் இடம் பெற்ற ஜெயந்த், ''ஒரு விஷயத்தில் ஜெயிக்கிறது பெருமையான விஷயம்தான். அதைவிட நாம கத்துக்கிட்டதை நாலு பேருக்குச் சொல்லித்தந்து அவங்களையும் உயர்த்துவதுதான் உண்மையான பெருமை. அதனால், நான் கத்துக்கிட்டதை என் ஃப்ரெண்ட்ஸ்களுக்கும் சொல்லித் தர விரும்புகிறேன்'' என்று பெரிய மனுஷனாகப் பேசுகிறார்.

இவர்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமான பள்ளியின் பயிற்சி ஆசிரியர்கள் ராஜேந்திரன் மற்றும் ரவிராம், ''யோகா கற்றுக்கொள்வதால் உடல் ஆரோக்கியமும் மன வலிமையும் உண்டாவதோடு, தன்னம்பிக்கை வளரும். எஃப்.ஏ. கல்வித் திட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதனால், மாணவ மாணவிகளின் உடல் மற்றும் மன வலிமை பெருகும்'' என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு