பிரீமியம் ஸ்டோரி

ஹாசிப்கான்

##~##

''ஹாய் ஜீபா... 'முயலுக்குப் பெரிய காதுகள் இருப்பதற்குக் காரணம் நாம் பிடித்துத் தூக்குவதற்குத்தான்’ என்று நண்பன் சொல்கிறான் அது உண்மையா?''

- ஆர். பாலமுருகன், மதுரை.

''உனது நண்பன், ஏதாவது நாடோடிக் கற்பனைக் கதையில் அப்படிப் படித்திருக்கலாம்.  சாதுவான பிராணியான முயலுக்கு, புலி, சிங்கம், நரி போன்ற எதிரிகள் மிக அதிகம். அவற்றின் வருகையை உணர்ந்துகொள்ளவேண்டியது மிக அவசியம். காது மடல்கள் எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு காற்றில் வரும் நுட்பமான ஒலியை உள்வாங்க முடியும். முயல் எடை குறைவாக இருப்பதால், மனிதன் அதன் காதுகளைப் பிடித்துத் தூக்குவதற்குப் பயன்படுத்திக்கொண்டான். யானைக்கும்தான் பெரிய காது மடல்கள் இருக்கின்றன. அதற்காக அதைத் தூக்க முடியுமா பாலமுருகன்?''    

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... பொருட்களில் உள்ள MRP விலையின் மேல் பேரம் பேச முடியுமா?''

  - எஸ்.சி.மோஷிதாஸ்ரீ, பென்னாகரம்.

MRP என்பதன் விரிவாக்கம் Maximum Retail Price. அதாவது, அதிகபட்ச சில்லறை விலை. ஒரு பொருள் தயாராகும் இடத்திலிருந்து வந்து சேரும் இடம் வரையான வரிகள், போக்குவரத்துச் செலவு, விநியோகம் செய்பவர்களின் கமிஷன் எனப் பல விஷயங்களைக் கடக்கவேண்டி இருக்கிறது. ஒரு பொருளை நாம் எங்கே வாங்கு கிறோம் என்பதைப் பொருத்து இது மாறுபடும். உதாரணமாக, மொத்தமாக விற்கும் பெரிய கடை களில் 10 ரூபாய் சாக்லேட் ஒன்றை ஒன்பது ரூபாய்க்கு வாங்கலாம். அதையே உன் வீட்டுக்கு எதிரில் இருக்கும் சிறிய பெட்டிக் கடையில் வாங்க முடியாது. காரணம், அவர் அந்தச் சாக்லேட்டை மொத்தமாக விற்கும் கடையிலிருந்து வாங்குவார். அதை எடுத்து வந்த செலவு, கடை வாடகை, லாபம் எனக் கணக்கிட்டு, 10 ரூபாய்க்கு விற்கும்போது அவரிடம் பேரம் பேச முடியாது. ஆனால், விஸிறி விலைக்கு மேல் கேட்கும்போது, அதை மறுக்கும் உரிமை நமக்கு உண்டு.''

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... தேவாங்கு எனப்படும் விலங்கு இப்போதும் இருக்கிறதா?''

- எம்.அர்ச்சனா, திருச்செங்கோடு.

''இருக்கிறது அர்ச்சனா. இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படும் இவை, தமிழ்நாட்டில் கொல்லிமலைப் பகுதியில் வசிக்கின்றன. காட்டில் அடர்ந்த மரங்களுக்கு மத்தியில் இவை வாழும். முன்பு வித்தை காட்டுபவர்கள் இவற்றைத் தெருத் தெருவாக எடுத்துவந்ததால், நம் கண்களில் தென்பட்டது. இப்போது வனத்துறையினரின் கடுமையான தடை இருப்பதால், அப்படி எடுத்துவருவது இல்லை.''

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... பூமியைப் போல மற்ற கிரகங்களிலும் பாலைவனம் இருக்குமா?''

  - சி.தயானந்த், ஈரோடு.

''பூமியின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவிகிதம் பாலைவனமாக இருக்கிறது. மனிதன், அடுத்துக் குடியேற முயற்சிக்கும் செவ்வாய்க் கிரகத்தில், ஆங்காங்கே பாலைவனங்கள் இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இவை, பூமியில் இருப்பதைவிட பெரியதாக இருக்கிறதாம். எனவே, வருங்காலத்தில் மனிதன் செவ்வாயில் குடியேறச் செல்லும்போது, கூடவே ஆளுக்கு ஓர் ஒட்டகத்தையும் அழைத்துச்செல்ல வேண்டியதுதான்.''

மை டியர் ஜீபா !

''ஹலோ ஜீபா... திமிங்கிலம், எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும்?''

  - எஸ்.கிஷோர், ஸ்ரீரங்கம்.

''திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன கிஷோர். இவை, பொதுவாக 70 ஆண்டுகள் வரை உயிர் வாழும். உலகின் மிகப் பெரிய பாலூட்டி, திமிங்கில வகைகளில் ஒன்றான 150 டன் எடைகொண்ட நீலத் திமிங்கிலம்தான். இன்னொரு விஷயம், திமிங்கிலங்கள் சுமார் 54 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழும் உயிரினமாகவே இருந்தது. பிறகு நீரிலும் நிலத்திலும் வாழத் தொடங்கி, இறுதியில் நீர்வாழ் உயிரினமாகவே மாறிவிட்டது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு