பிரீமியம் ஸ்டோரி
பென் டிரைவ் !
##~##

உலக அமைதி தினமான செப்டம்பர் 21 அன்று, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் விவேகா மெட்ரிக் பள்ளியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் ஒரு நிகழ்ச்சியாக, அமைதியின் சின்னமான புறாவின் வடிவத்தைப் போல மாணவர்கள் நின்று, 'உலக அமைதியினைக் காப்போம்’ என உறுதிமொழி ஏற்றனர். இது, அங்கிருந்த அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

பென் டிரைவ் !

முருகப்பா குழுமம், 'சென்னை வாரம்’ என்ற கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு விநாடி-வினா போட்டி ஒன்றை நடத்தியது. இந்தப் போட்டியில் மயிலாப்பூர், பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியின் சங்கிரித், அர்ஜுன் அரவிந்த் மற்றும் நிஷாந்த் ஆகியோர் கொண்ட குழு வெற்றி பெற்றது. மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 59 பள்ளிகளைச் சேர்ந்த 242 அணிகள் கலந்துகொண்டன.

பென் டிரைவ் !

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சூ மாகாணத்தைச் சேர்ந்தவர், ஹி லிஷெங். தன்னுடைய ஐந்து வயது மகன் டுவோடுவோவை சாகசக்காரனாக மாற்ற வேண்டும் என்பதில் இவருக்கு மிகுந்த ஆர்வம். அதற்காக, தமக்குச் சொந்தமான சிறிய ரக விமானத்தில் டுவோடுவோவை பீஜிங் உயிரியல் பூங்காவின் மீது பறக்கவைத்திருக்கிறார். ஆனால், விமானம் தரையிறங்கியதும், இவ்வளவு நேரம் விமானத்தை ஓட்டியது ஐந்து வயது சிறுவன் என்பதை அறிந்து பரபரப்பு ஏற்பட்டது. விதிமுறைகளை மீறி ஐந்து வயது சிறுவனை விமானம் ஓட்டவைத்தது, சர்ச்சையை உண்டாக்கியது.

பென் டிரைவ் !

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஹிருதயேஷ்வர், ஆறாம் வகுப்பு படிக்கிறார். இவர், ஏற்கெனவே ஆறு பேர் விளையாடும் புதிய செஸ் முறையைக் கண்டுபிடித்து, அதற்குக் காப்புரிமையும் பெற்றிருந்தார்.

இப்போது, ஒரே நேரத்தில் 12 மற்றும் 60 பேர் வட்ட வடிவில் அமர்ந்து செஸ் விளையாடும் புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளார். இந்த விளையாட்டு முறைக்கும் இந்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது. இதன்மூலம் உலகிலேயே காப்புரிமை பெற்ற முதல் இளம் மாற்றுத்திறனாளி என்றும், இந்தியாவில் இளம் வயதில் காப்புரிமை பெற்றவர் என்றும் சாதனை படைத்துள்ளார்.

பென் டிரைவ் !

டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக டாக்ஸியை கூகுள் நிறுவனம் தயாரிக்கிறது. அதை, 'பொடோட்டா பிரையஸ்’ மற்றும் 'எலக்சல் ஆர்எக்ஸ்’ என்ற கார்களில் பொருத்தி, சோதனை மேற்கொண்டது. இருந்தாலும் கார் உற்பத்தித் தொழில்நுட்பங்களைக் கூகுளுக்குத் தர விரும்பாத முன்னனி நிறுவனங்கள், அதனுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. எனவே, தாமாகவே கார் உற்பத்தி செய்ய கூகுள் முடிவு செய்துள்ளது. இவை, டிரைவர் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும் திறன் படைத்தவை. இந்தக் கார்களால் சாலை விபத்துகள் குறையும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளனர்.

பென் டிரைவ் !

பூனாவைச் சேர்ந்த 21 வயது மருத்துவ மாணவர் நிஷிட் பினிவாலே, ஆஸ்திரிய நாட்டில் நடைபெற்ற அயர்ன்மேன் போட்டியில் பங்கேற்று, அதனை வெற்றிகரமாக முடித்துக்காட்டியுள்ள முதல் இந்தியர். அதென்ன IronMan போட்டி?

உலக டிரையத்லான் கார்ப்பரேஷனால் நடத்தப்படும் இந்தப் போட்டியில், 3.8 கி.மீ. நீச்சலடித்து, 180 கி.மீ. சைக்கிளில் பயணித்து, 42.195 கி.மீ. தூரத்தை மாரத்தான் ஓடி, போட்டியாளர் கடக்க வேண்டும். இவை அனைத்தையும் 17 மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும். இதில் கலந்துகொண்ட 2,900 பேரில் 700 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு கடினமாக இருந்தது அந்தப் போட்டி. ஆனால், நிஷிட் இந்தப் போட்டியை 13 மணி நேரம் 18 நிமிடங்களில் முடித்து, 'இரும்பு மனிதன்’ என்கிற பட்டத்தைப் பெற்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு