Published:Updated:

மாண்புமிகு மாணவன் !

க.பிரபாகரன் தி.குமரகுருபரன்

##~##

''ஒரு விஷயத்தைப் பற்றி 100 முறை சொல்வதைவிட, ஒருமுறை நாமே இறங்கி செய்துகாட்ட வேண்டும். பிறகு, நாம் சொல்வதை எல்லோரும் கேட்பார்கள்''

இப்படி தத்துவமாகப் பேசுவது, தாடி வைத்த ஞானியோ, தலை நரைத்த விஞ்ஞானியோ அல்ல, ஏழாம் வகுப்பு படிக்கும் பாலமுரளி.

கடந்த நான்கு வருடங்களாக சமூக விஷயங்களுக்காகப் போராடிவருகிறார், இந்தச் சுட்டிப் புயல். சேத்துப்பட்டு, மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பாலமுரளியின் சிறந்த சேவைக்கு, அவரது பேச்சும் செயலுமே ஆயுதங்கள்.

''நான் மூணாவது படிக்கும்போது, 'நல்லோர் வட்டம்’ என்ற சமூக அமைப்பு பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். அந்த அமைப்பில் நடத்தும் 'அறிவின் அறிவி’ என்ற பேச்சுப் பயிலரங்கம், 'அதிரடி சேவை’ என்ற திட்டங்களிலும் கலந்துக்க ஆரம்பிச்சேன். நாம செய்ய நினைக்கிறதை, வீட்டில் இருந்து தொடங்கணும்னு அங்கே சொன்னாங்க'' என்கிறார் பாலமுரளி.

வீட்டில் அப்பா-அம்மாவிடம் 'கடைக்குப் போகும்போது துணிப் பையை எடுத்துட்டுப் போங்க. 'பிளாஸ்டிக் பேக்’  வேண்டாம்’ என்று வலியுறுத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் பாலமுரளியின் பேச்சை விளையாட்டாக எடுத்துக்கொண்டவர்கள், அவனது கண்டிப்பில் உள்ள நன்மையைப் புரிந்துகொண்டார்கள். இப்போது வீட்டில் பிளாஸ்டிக் பையைப் பயன்படுத்துவதே இல்லை.

இதுவே, ஆரம்பம். ''கோடம்பாக்கத்தில் உள்ள எங்கள் தெரு, ரொம்பச் சின்ன சந்து என்பதால், மாநகராட்சி ஆளுங்க குப்பை அள்ள வரவே மாட்டாங்க. எங்க அமைப்பின் மூலம் மாநகராட்சியில் முறையிட்டேன். இப்போ, எங்க தெரு ரொம்ப சுத்தமா இருக்கு. வார விடுமுறை நாட்களில் எங்க தெருப் பசங்களோடு சேர்ந்து மாநகராட்சி ஆட்களுக்கு உதவியாக நாங்களும் சுத்தம் செய்வோம். இதைப் பார்த்து அவங்க ரொம்ப சந்தோஷமா வேலை செய்றாங்க'' என்கிறார் பாலமுரளி.

மாண்புமிகு மாணவன் !

பள்ளியில் தன்னுடன் படிக்கும் நண்பர்களை ஒன்றுசேர்த்து, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டியிருக்கிறார் பாலமுரளி.

''எல்லோரும் தங்கள் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள நினைப்பது போல நாட்டையும் சுத்தமாக வெச்சுக்கணும். 'பள்ளி வளாகத்திலோ, பொது இடத்திலோ சாக்லேட் கவர், காகிதம் என ஏதாவது கிடந்தால், அதை எடுத்துட்டுப் போய் குப்பைத் தொட்டியில் போடலாம்’னு பாலமுரளி சொன்னான். அதை இப்போ நாங்க செய்றோம்'' என்கிறார்கள் நண்பர்கள்.

'' 'இது ஒரு பெரிய சேவை?’யானு சில பேர் கிண்டல் பண்ணுவாங்க. அதைப் பற்றி கவலைப்படுறதில்லை. எதையும் சின்ன விஷயத்தில் இருந்துதான் ஆரம்பிக்கணும்'' என்கிறார், இந்த மாண்புமிகு மாணவன்  பாலமுரளி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு