Published:Updated:

பிரபலங்களின் திருப்புமுனைகள் !

பிரபலங்களின் திருப்புமுனைகள் !


01-05-2008
 
பிரபலங்களின் திருப்புமுனைகள்!
ல.சி.சந்தானமூர்த்தி
பிரபலங்களின் திருப்புமுனைகள் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பலூன் விற்பவரைப் பார்த்தவுடன் அந்தத் தெருவில் இருந்த சிறுமிகளும், சிறுவர்களும் சந்தோஷமாக சத்தம் போட்டுக்கொண்டே ஓடினார்கள்.

"எனக்கு பச்சைக்கலர் பலூன்தான் வேண்டும்" என்றாள் ஒரு ரெட்டை ஜடை சிறுமி. "எனக்கு மஞ்சள்... எனக்கு நீலம்" என சிறுமிகள் பலூன் வாங்க கூடிவிட்டனர். அப்பொழுது ஒரு சிறுமி மட்டும் எந்தவிதமான பரப்பரப்பும் இல்லாமல் ஓரமாக நின்றுகொண்டிருந்தாள். பலூன் விற்பவருக்கு ஆச்சரியம். "ஏம்மா, நீ மட்டும் தனியாக நிற்கிறாய்?" என்றார்.

அதற்கு அந்த சிறுமி, "எல்லாரும் வாங்கிய பின்னர் நான் கடைசியாக வாங்கிக் கொள்கிறேன்" என்றாள்.

ஆக்னஸ் பொஜாக்ஸ்க்யூ என்ற பெயர் கொண்ட ஐந்து வயது சிறுமியான அவள்தான் பின்னாட்களில் உலக மக்களால் 'அன்னை' என அன்புடன் அழைக்கப்பட்ட தெரசா!

தந்தையின் அன்புக்குரிய ஆக்னஸ், வீட்டின் இளைய மகள். படிப்பிலும், பிறருக்கு உதவுவதிலும் எப்பொழுதுமே சலிக்காத மனது அவளுக்கு. ஒவ்வொரு நாள் இரவும் அப்பாவின் கழுத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு கதை கேட்கும் அவளை தூங்க வைத்து படுக்கைக்கு கொண்டு போய்விடும் வரையிலும் அப்பா அவள் கூடவே இருப்பார். அந்தத் தெருவுக்கே செல்லப்பிள்ளை ஆக்னஸ். திடீரென ஏற்பட்ட அப்பாவின் இறப்பு அவளை சோகத்தில் ஆழ்த்தியது. அப்பொழுது ஆக்னஸுக்கு பதினெட்டு வயது. லொரேட்டோ இல்லத்தில் ஆசிரியர் பயிற்சி பெறவும், சமூக சேவைக்கான அனுபவத்தை பெறவும் அனுப்பப்பட்டாள் ஆக்னஸ்.

வரலாறு, புவியியல், வேதக்கல்வி, ஆங்கிலம் இவற்றில் புலமை பெற்ற ஆக்னஸுக்கு, 1928-ம் ஆண்டு கொல்கத்தாவிற்குச் செல்ல உத்தரவிடப்பட்டது. கொல்கத்தா வந்த அவர், அங்கிருந்த ஏழைத் தொழிலாளர்கள், பசியில் வாடும் குழந்தைகள், சாக்கடைக்கு அருகிலேயே சமையல் செய்து வாழும் குடிசைப்பகுதி மக்கள் போன்றவர்களை எல்லாம் பார்த்து வேதனைப்பட்டார். 'இதற்கு ஏதாவது வழி செய்யவேண்டும்' என யோசித்தார். 1929-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி டார்ஜிலிங் சென்று அங்குள்ள லொரேட்டோ இல்ல பள்ளியில் ஆசிரியையாக பணியாற்ற திருச்சபை ஆணை பிறப்பித்தது. மனமில்லாமல் அங்கு சென்ற ஆக்னஸ், நிம்மதி இல்லாமலே இருந்தார். டார்ஜிலிங் பள்ளியில் ஆங்கிலேயே பிரபுக்களின் குழந்தைகள், பணக்கார வீட்டுக் குழந்தைகள் படித்தனர். அங்கு குழந்தைகளை குளிப்பாட்டுவது, பாடங்களை சொல்லித்தருவது என வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் கொல்கத்தாவில் அவர் பார்த்த ஏழை மக்களை பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டு இருந்தார்.

பிரபலங்களின் திருப்புமுனைகள் !

"நான் மீண்டும் கொல்கத்தா பள்ளிக்கே செல்கிறேன்" என திருச்சபைக்கு தொடர்ந்து கடிதம் எழுதி அனுமதி பெற்று கொல்கத்தாவிற்கு மீண்டும் திரும்பினார். கொல்கத்தா லொரேட்டோ பள்ளிக்கு அருகில் உள்ள மோத்திஜில் கிராமத்திற்கு விடுமுறையில் சென்று சேவை செய்வதை வழக்கப்படுத்திக் கொண்டார்.

பள்ளிக்கூடம், குடிசை மக்களுக்கு சேவை என்று மாறிப் போனது ஆக்னஸின் வாழ்க்கை. 1942 மற்றும் 1943-களில் இரண்டாவது உலகப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. கொல்கத்தா நகரம் பஞ்சத்தில் வாடியது. விலைவாசி உயர்ந்தது. மக்கள், காசு இல்லாமல் பட்டினி கிடந்தனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என எல்லோரும் அதிக அளவில் இறந்தனர்.

மனவேதனையில் துடித்த ஆக்னஸ், தெருத்தெருவாக போய் பணம் வைத்திருப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி, பாதிக்கப்பட்ட மக்களின் பசி தீர்க்கப் போராடினார். ஆனால், 'இதுவே நிரந்தரம் இல்லை' என ஆக்னஸுக்கு தெரிந்தது. வெறும் ஐந்து ரூபாய் பணம், வெள்ளை நிறத்தில் நீல நிற பார்டர் போட்ட மூன்று புடவைகளோடு அங்கிருந்து வெளியேறினார். தன்னுடைய ஆடை, சாலைகளை சுத்தம் செய்யும் பணியாளார்கள் உடுத்துவது மாதிரியே தனதும் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். நேராக மோத்திஜில் பகுதிக்குச் சென்ற ஆக்னஸின் முதல் திட்டம் குடிசைப்பகுதிகளில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுவதுதான்! இதற்காகவே 1950-ம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிஸ் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார்.

இந்த காலகட்டம்தான் ஆக்னஸ், 'அன்னை தெரசாவாக' மாறுவதற்கு திருப்புமுனையாக அமைந்தது. அக்டோபர் 17, 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெறவும் மைல்கல்லாக இருந்தது.

பிரபலங்களின் திருப்புமுனைகள் !

"ஏழைகளுடன் ஒன்றாக வாழ்ந்து, அவர்களைப் போலவே ஆடை அணிந்து, வாழும் போதுதான் அவர்களை நெருங்கவும் ,அவர்களிடம் உண்மையான அன்பும் வைக்க முடியும்" என்று அறிவித்த அன்னைக்கு நமது இந்திய அரசும் 'பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவித்தது.

உலகம்முழுவதும் அன்னையின் அன்பை சுமந்த ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இன்றும் ஏழைகளுக்கு அன்னையின் வடிவத்தில் ஆதரவுக்கரம் நீட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.