Published:Updated:

ஹோம் ரன்

ஹோம் ரன்


01-05-2008
 
ஹோம் ரன்
ரா.மு.
சூகியாட் குன் என்ற பத்து வயது சுட்டிதான் ஹீரோ.

இவனுக்கு எட்டு வயதில் ஒரு தங்கை, பெயர் மெகன். பரம ஏழையான குடும்பம் இவர்களுடையது. அப்பா ஹிவாங் வென்பாங் சிறு சிறு வேலைகளை செய்து குடும்பத்தை நடத்து பவன். அம்மா நிறைமாத கர்ப்பிணி. குன் மாலை நேரப்பள்ளியில் படிப் பவன். பெற்றோருக்கு உதவியாக இருப்பவன். தங்கையின் ஸ்கூல் சூ கிழிந்துவிட அதை ஒரு செருப்புக் கடைக்காரரிடம் கொடுத்து சரி செய்கிறான். பிறகு மளிகைக்கடையில் அரிசி வாங்க, சூ-வை வெளியே வைத்துவிட்டு உள்ளே போகிறான். அச்சமயம், தேவையற்ற பொருட் களை சேகரிக்கும் பார்வையற்ற முதியவர் ஒருவர் மெகனின் சூக்களையும் சேர்த்து எடுத்து சென்றுவிடுகிறார். சாப்பாட்டுக்கே சிரமப்படும் வீட்டுச் சூழ்நிலையில் சூ தொலைந்துபோனதைச் சொன்னால் அவ்வளவுதான்!

அன்றிரவு வியாபாரம் சரியில்லாமல் போனதால் சிடுசிடுவென்று இருக்கும் அப்பாவை பார்த்து பயந்தபடி குன்னும், மெகனும் 'ஹோம்வொர்க்' செய்தபடியே சூ பிரச்னையை நோட்டு புத்தகத்தில் மாறி மாறி எழுதி எண்ணங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். பேசினால் அப்பாவுக்கு விஷயம் தெரிந்துவிடுமே..!

"சூ போடாமல் போனால் டீச்சர் அடிப்பார்கள்..." -என்றாள் மெகன். "கவலைப்படாதே எப்படியும் கண்டுபிடித்துவிடுகிறேன். அதுவரை கொஞ்சம் பொறு..." என்று குன் சமாதானம் செய்தான். இருவரும் 'திருதிரு'வென விழிப்பதை பார்த்த அப்பா, "என்ன?" என்று கோபமாக கேட்க பயத்தில் உறைந்துபோகும் மெகன், "என்னுடைய கம் பாட்டில் உடைந்துவிட்டது" என்று சமாளிக்கிறாள். அப்பாவோ, "அதனால் என்ன, அண்ணனுடைய கம் பாட்டிலை பயன்படுத்திக்கொள்" என்கிறார். குன் மனதில் 'பளிச்'சென ஒரு ஐடியா தோன்றுகிறது.

ஹோம் ரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"நீ படிப்பதோ பகல் பொழுதில். எனக்கு மாலைதான் பள்ளி. எனவே என்னுடைய சூக்களை போட்டுக் கொண்டு ஸ்கூலுக்குப் போ. மாலை, நான் வழியில் காத்திருக்கிறேன். நீ வந்து சூக்களை தந்ததும் நான் என் ஸ்கூலுக்குப் போகிறேன். சிக்கல் தீர்ந்தது" என்றான் குன். மெகனும் சம்மதிக் கிறாள். இதன்படி அண்ணனின் சூக்களை அணிந்துகொண்டு பள்ளிக்குச் செல்கிறாள். ஆனால், சூக்கள் சற்று பெரிதாக இருக்கிறது. நடக்கும்போது அடிக்கடி கழன்று விடும். ஸ்கூலில் நடக்கும் நடன வகுப்பில், ஒரு காலைபக்க வாட்டில் உயர்த்தி காற்றில் உதைக்கிற மாதிரியான ஸ்டெப்-ஐ மிஸ் சொல்லிக் கொடுக்க, மெகனின் சூ கழன்று கழன்று விழுந்தது. வகுப்புத் தோழிகள் கொல்லென்று சிரித்தார்கள். மெகன் கவலைப் பட்டாள்.

பள்ளி விட்டதும் வேகமாக ஓடி தனக்காக காத்திருக்கும் அண்ணனிடம் சூக்களை தர வேண்டும். அப்போது தானே அவன் பள்ளிக்கு செல்ல முடியும். இடையிடையே சூ அவிழ்ந்துவிடும். கால்வாயில் விழுந்து அடித்துக் கொண்டு போகும். மெகன் எல்லாவற்றையும் சமாளிக்கிறாள்.

குன்னுக்கும் பிரச்னைதான். மெகன் வருவதற்கு தினமும் தாமதமாகி விடுவதால் குன் எவ்வளவோ வேகமாக ஓடிப் போனாலும் பள்ளிக்கு லேட் ஆகிவிடுகிறது. வெளியில் உலாவிக்கொண்டு இருக்கும் தலைமை ஆசிரியரிடம் தினமும் மாட்டிக் கொள்கிறான். ஒருநாள் அவர் அவனை தண்டிக்கிறார். அதாவது, மறுநாள் காலை 7 மணிக்கு பள்ளி வளாகத்தைப் பெருக்கி சுத்தப்படுத்த வேண்டும். இப்போது வேறொரு சிக்கல்... காலையில் அவன் வரும் போது சூக்களை அணிந்திருக்க வேண்டும். ஆனால் மெகன் என்ன செய்வாள்? வேறொரு திட்டம் தீட்டுகிறார்கள். மெகன் காயம் பட்டதுபோல் கால் பாதத்தில் சிறிய பிளாஸ்திரியை ஒட்டிக்கொண்டு செருப்பு அணிந்து பள்ளிக்குச் செல்கிறாள். ஆனால், குட்டு வெளியாகி அவளுக்கும் தண்டனை கிடைக்கிறது... "இனி பொய் சொல்லமாட்டேன்" என சொல்லியபடி நூறு தோப்புக்கரணம்! இதற்கிடையே குன்னின் பள்ளியில் டேன்பெங்ஸ¨ன் என்ற பணக்கார சிறுவன் படிக்கிறான். அவனும், அவனுடைய தோழர்களும் உருவாக்கும் கால்பந்தாட்ட அணியில் குன் மற்றும் அவனது தோழர்களை சேர்க்க சம்மதிக்கிறான். இதற்கான கால்பந்தாட்ட சூக்களை பெங்ஸ¨ன் தந்துவிடுவான். பதிலுக்கு தன்னுடைய மற்றும் தன் தோழர்களுடைய வீட்டுப் பாடங்களை குன்-அண்ட்- கோ முடித்து தரவேண்டும். போகப் போக பெங்ஸ¨ன் டீம் அளவுக்கு அதிகமான நிபந்தனைகளை போட, ஒப்பந்தம் முறிகிறது. வீட்டுப்பாடங்களை ஒழுங்காக செய்யா ததற்காக டீச்சரிடம் அடி வாங்குகிறான் பெங்ஸ¨ன்.

ஒருநாள் மெகன் தன் பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருத்தி, தன் தொலைந்த சூக்களை அணிந்திருப்பதை பார்க்கிறாள். குன்னிடம் சொல்ல, இருவரும் அவள் வீட்டுக்குப் போகிறார்கள்.

ஹோம் ரன்

அங்கே சிறுமியின் தந்தை பார்வையற்ற ஏழை என்பதை அறிந்ததும் சூக்களை திரும்ப கேட்காமல் திரும்பிவிடுகின்றனர். மற்றொரு நாள் அதே சிறுமியின் கால்களில் புது சூக்களை பார்த்த மெகன், பழைய சூ பற்றி விசாரிக்கிறாள். அவற்றைஊர் எல்லையில் கொட்டி இருக்கும் குப்பையில் போட்டு விட்டதாக அவள் சொல்ல அண்ணனும் தங்கை யும் அங்கே விரைந்து சென்று, தங்கள் ஷ§க்களை கண்டு பிடிக்கின்றனர்.ஆனால் அப்போது அங்கே ஏற்படும் கலவரத்தில் இவர்கள் கண் முன்னே ஒரு சூவை ஒருவன் கிழித்து எறிகிறான். அழுதபடியே திரும்புகின்றனர்.

தேசிய அளவிலான ஓட்டப் பந்தய போட்டிக்கான தேர்வு

நடக்கிறது. வருத்தத்தில் இருக்கும் குன், போட்டியில் சேரவில்லை. ஆனால் போட்டிக்கு சில தினங்களே இருக்கும் நிலையில், இரண்டாம் பரிசாக ஸ்கூல் சூக்கள் கிடைக்கும் என்று அறிந்ததும் போட்டியில் சேரத் துடிக்கிறான். சேர்க்க மறுக்கும் விளையாட்டு ஆசிரியரிடம் மன்றாடி சேருகிறான்.

பந்தயம் தொடங்குகிறது. ஏராளமான மாணவர்களோடு குன்னும், அவனோடு பெங்ஸ¨னும் கலந்துகொள்கின்றனர். வழியில் குன்னின் பழைய சூ சேற்றில் சிக்கிக்கொள்கிறது. இருப்பினும் தங்கைக்காக அவன் வெறுங்காலோடு ஓடுகிறான். வெற்றிக் கோட்டை தொடும் நேரத்தில் ஒரு கல் இடறி, முன்னோக்கி விழுந்து முதலிடம் பிடிக்கிறான் குன். பெங்ஸ¨னுக்கு இரண்டாவது இடம். அவனுக்கு ஸ்கூல் சூக்கள் பரிசாக கிடைக்கிறது. அதனால் அவன் தோல்வியால் கோபத்தில் கத்துகிறான். அப்போது தன் நண்பர்களோடு அவனை அணுகும் குன், "இந்த சூவுக்காகத்தான் போட்டியில் கலந்துகொண்டேன். முதல் பரிசை தந்துவிடுகிறேன், நீ சூக்களை எனக்கு தந்துவிடு" என்கிறான். ஆனால் அவனைப் புரிந்து கொள்ளாத பெங்ஸ¨ன், சூவை சேற்றில் வீசிவிடுகிறான்.

ஒரு சிறு ஓடையின் பாலத்தில் அண்ணனும், தங்கையும் அமர்ந்திருக் கிறார்கள். இருவரிடமும் சூக்கள் இல்லை. முகத்தில் உலகளவு சோகம். அப்போது இரண்டு ஜோடி புத்தம்புது வெண்ணிற சூக்கள் அவர்கள் அருகே வைக்கப்படுகிறது. இருவரும் சந்தோஷமாக நிமிர்ந்து பார்க்கிறார்கள். அங்கே பெங்ஸ¨ன்! குன்னின் உண்மையான உள்ளத்தை புரிந்து கொண்டதாகவும், அதனால் சூக்களை தருவதாகவும் கூறுகிறான்.

அண்ணனும் தங்கையும் புது சூக்களை அணிந்துகொண்டு ஓடுகிறார்கள். எதிரே பாதை முழுக்க புதைசேறாக இருப்பது கண்டு திகைத்து நிற்கிறார்கள். படம் முடிகிறது.

1965-ம் ஆண்டு மலேசியாவிலிருந்து, சிங்கப்பூர் பிரிந்தபோது கடும் வறுமையில் இருந்ததை சித்தரிக்கும் வகையில் குன் குடும்பத்தை இயக்குநர் காட்டியிருக்கிறார்.

'சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்' என்ற ஈரானிய படத்தை தழுவி, ஜாக் நியோ இயக்கிய இந்த படத்தில் நடித்த மெகன் செங்னுக்கு 2003-ம் ஆண்டின் சர்வதேச குழந்தை நட்சத்திரத்துக்கான 'கோல்டன் ஹார்ஸ்' விருது கிடைத்தது. மேலும் 'கோல்டன் ஸ்வாகன்' விருது(2003), 'ஸ்ஃபாஹன்' சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழா விருது(2003), 'மாண்ட்ரியல் திரைப்படவிழா விருது என பல விருதுகளை இப்படம் குவித்துள்ளது.