ஆமதாபாத் நகரின், சர்தார் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்... இந்தியா சமம் செய்தது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், இரண்டாவது இன்னிங்ஸில் முன்னணி வீரர்கள் பலரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி விட, இந்தியாவின் தோல்வி உறுதி என நியூஸிலாந்து இன்னும் வலுவாக பந்து வீசியது. டெஸ்ட் போட்டிகளில் எப்போதும் கை கொடுக்கும் வி.வி.எஸ்.லட்சுமணன் களத்தில் இருந்த போதிலும், அவருடன் இணைந்து ஆடி, இந்திய அணியைக் காப்பாற்ற
யாரால் முடியும் என நினைத்திருந்த வேளையில், சுழல் பந்து வீச்சில் கலக்கும் ஹர்பஜன் களம் இறங்கினார். எப்படியும் இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் ஆடிய ஹர்பஜன் சிங், டெஸ்ட் போட்டியில் 115 ரன்கள் அடித்து, தனது முதலாவது சதத்தை எடுத்தார். அதுமட்டுமல்ல, லட்சுமணனுடன் ஜோடி சேர்ந்து 163 ரன்கள் எடுத்து, இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். 88 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருந்தாலும், இப்போது தான் அவரால் சதமெடுக்க முடிந்தது. "பந்து வீச்சாளரான நான், ஒருநாள் போட்டியில் வேண்டுமானால் பேட்டிங்கிற்காக ஆட்ட நாயகன் விருதினைப் பெறுவேன் என நினைத்திருந்தேன். ஆனால், டெஸ்ட் போட்டியில் வாங்கியது எனக்கே ஆச்சர்யம் அளிக்கிறது" என்கிறார் தனக்கே உரிய அதிரடிச் சிரிப்புடன்.
|