"நேத்து ரிகர்சல்லே இருந்த குட்டி பஃபூன் கொஞ்சம் குண்டா குள்ளமா இருந்தாரே..." என்றது ஜீபா. "ஆமா! இதுலே ரொம்ப ஒல்லியா சின்ன பையனா... புரிஞ்சுடுச்சு ஜீபா!" என்றாள் சைலா. உடனே மூவரும் பரபரப்பானார்கள். "கேமரா லைனை மானிட்டரோடு கனெக்ட் பண்ணு... சீக்கிரம்!" என்று கேமரா மேனுக்கு சொன்ன ஜீபா, மின்னலாக கேமராவை உயரே உயரே உயர்த்தியது. போலீஸ் அதிகாரியிடம் விக்கி கத்தினான், "அந்த பஃபூன் களை விடாதீங்க... பிடிங்க!" சைலா சுருக்கமாக விஷயத்தைச் சொன்னாள். "பையனுக்கு பஃபூன் வேஷத்தை மாட்டி, ஸ்கூல் வேனில் ஏத்தி அனுப்பிட்டாங்க! அந்த வேன் ஸ்கூலோட பின் கேட் வழியா போயிருக்கு..."
உடனே ஜீபா, போலீஸ் அதிகாரியைப் பார்த்து, "நான் அந்த ரோடை வீடியோலே ட்ரேஸ் பண்ணிக் காட்டறேன்... மானிட்டரில் பார்த்து ஆர்டர்ஸை கொடுங்க சார்... க்விக்!" என்றது. கூட்டத்தில் உட்கார்ந்திருந்த பஃபூன்களைச் சுற்றி வளைத்தனர். பின் கேட் வழியாக போலீஸ் ஜீப்கள் பறந்தன. எல்லா போலீஸ் அதிகாரிகளும் ஜீபா அருகில் வந்து நின்றார்கள். விஷயம் கேள்விப்பட்டு, வெளியுறவு அமைச்சரும் அவரது மனைவியும் மானிட்டர் அருகில் வந்துவிட்டார்கள். அவருடன் பள்ளியின் பிரின்ஸிபாலும் கரஸ்பாண்டன்ட்டும் வந்து சேர்ந்தார்கள்.
கேட் வழியை அப்படியே ஜீபா கேமராவில் ஃபோக்கஸ் செய்தது. மானிட்டரில் அந்த காட்சிகள் தெரியத் தெரிய போலீஸ் அதிகாரிகள் ஒயர்லெஸ்ஸில் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டே இருந்தார்கள். கேட்டைத் தாண்டி ஒரு புதர் மாதிரியான மறைவில் அந்த ‘பள்ளி வாகனம்’ நின்றிருப்பது மானிட்டரில் தெரிய, அதைச் சுற்றி வளைக்க உத்தரவு பறக்கிறது. போலீஸ் ஜீப்களைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்டு, வேன் டிரைவர் வண்டியைக் கிளப்பி வேக மெடுக்கிறார். ஆனால், போலீஸ் ஜீப்பின் வேகத்துக்கு அந்த டப்பா வேனால் ஈடுகொடுக்க முடியாமல் சிக்குகிறார். நாலா பக்கமும் போலீஸ் ஜீப்கள் சூழ்ந்துகொள்ள, வேனை விட்டுவிட்டு இறங்கி ஓட எத்தனிக்கிறான் வேன் டிரைவர். அவனை கொத்தாகப் பிடித்து, குண்டுக்கட்டாக அள்ளி ஜீப்பில் போட்டது ஒரு டீம். இன்னொரு டீம் வேனுக்குள் ‘பஃபூன்’ வேஷத்தில் இருந்த அமைச்சர் மகனை பத்திரமாக மீட்டது.
இவை அனைத்தையும் ஜீபா ஜூம் செய்து படம் பிடிக்க, அதை மானிட்டரில் பார்த்தார்கள் எல்லோரும். தங்கள் உச்சக்கட்ட சந்தோஷத்தை கைத்தட்டியும் ஹோவென கத்தியும் கொண்டாடினார்கள்.
பஃபூன்கள் ஐந்து பேரும், வேன் டிரைவரும் கைது செய்யப்பட்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்த பள்ளியின் மேனேஜர், "இவங்களாதான் இங்கே வந்து, ‘நாங்க நிகழ்ச்சி நடத்தறோமே’ன்னு கேட்டாங்க. இவங்க பெர்ஃபாமன்ஸ் நல்லா இருந்ததால ஃபிக்ஸ் பண்ணேன்... இப்படி நடந்ததுக்கு ரொம்ப ஸாரி..." என்று வருத்தப்பட்டார்.
"ரொம்ப நல்ல்ல்லா இருந்துச்சு இவங்க ‘பெர்ஃபாமன்ஸ¨’..." என்று கிண்டலாகச் சொன்னான் விக்கி. எல்லோரும் சிரித்தார்கள்.
"என் மகன் திரும்பக் கிடைச்சது உங்க திறமையாலதான் ஜீபா! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..." என்றார் பள்ளியின் பிரின்ஸிபால். அதை ஆமோதித்தவர்களாக அருகில் வந்து விக்கி, சைலா, ஜீபா மூவருக்கும் கைகொடுத்தார் அமைச்சர். அவரது மனைவி நன்றியோடு வணங்கினார்.
"எனக்கு இது வேணும்... எடுத்துக்கவா?" என்றது ஆங்கிலத்தில் ஒரு சுட்டியின் குரல். எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். போலீஸ் அதிகாரி கையில் இருந்த அமைச்சரின் மகன் கேட்டான்... அவன் கையில் பஃபூன்கள் தங்கள் மூக்கில் மாட்டிக்கொள்ளும் சிவப்பு நிற பழம் இருந்தது.
"தாராளமாக!" என்றார்கள் எல்லோரும். அவன் அதை மாட்டிக்கொள்ள, எல்லோரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். அமைச்சர் தன் குடும்பத்தோடு பள்ளியிலிருந்து கிளம்ப, வாழ்த்தி வழியனுப்பினார்கள் எல்லோரும்.
(அடுத்த அதிரடி...)
|