Published:Updated:

வெல்கம் சுட்டி 2011 ஸ்டார்ஸ் !

சென்னையில் நடந்த உற்சாகத் திருவிழா !பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் !

பிரீமியம் ஸ்டோரி

கே.யுவராஜன்

வெல்கம் சுட்டி 2011 ஸ்டார்ஸ் !

''நம் ஒவ்வொருவருக்கும் தாய், தந்தையைவிட நல்லது கெட்டதை எடுத்துச் சொல்பவர்கள் யாரும் இல்லை.  நீங்கள் இப்படி ஒரு நல்ல வாய்ப்பைப் பெற்று இங்கே அமர்ந்து இருப்பதற்குக் காரணமும் அவர்களே'' என்று விகடன் நிறுவனத்தின் பதிப்பாளர் கே. அசோகன் வரவேற்றுப் பேசினார்.

சுட்டி விகடனின் 'பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் பயிற்சியாளர் திட்டம்’  இந்த ஆண்டும் உற்சாகத்துடன் தொடங்கியது. இந்த ஆண்டின் சுட்டி ஸ்டார்களான 43 பேரையும் சென்னைக்கு வரவழைத்தோம். ''இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம் மனிதர்களுடன் பழகும் தன்மை, தமிழில் நன்றாக எழுதும் திறமை வளரும். பெற்றோருக்கு முக்கியமாக சொல்லிக் கொள்வது என்னவென்றால், இதனால் அவர்களின் பள்ளிப் படிப்பு எந்த விதத்திலும் பாதிக்காது'' என்றார்.

உற்சாகமாக ஆரம்பித்தது பல்சுவை விருந்து. முதல் நிகழ்ச்சியாக 'பலன்கள் ஏராளம்’ என்ற  அறிவு விருந்து. 'ஹெலிக்ஸ்’ மனிதவள மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜி.செந்தில்குமார் பேசவந்தார். இவர், மாணவர்களுக்கு ஆளுமைத் திறனை வளர்க்கும் பயிற்சிகளை நடத்திவருபவர். 'கவனிக்கும் திறன் எத்தனை முக்கியமானது. நாம் அதில் எந்த அளவுக்கு அலட்சியமாக இருக்கிறோம்’ என்பதை எளிய பயிற்சிகள் மூலம் விளக்கினார்.

##~##

''ஒரு விஷயத்தை இப்படி செய்ய வேண்டும் என்று இருந்தால், அப்படி கச்சிதமாகச் செய்து முடிக்க வேண்டும். ஆனால், நம்மில் பலர் அப்படி செய்வதில்லை. கொஞ்சம் இப்படியும் மாற்றிக் கொள்ளலாம். அப்படியும் இருக் கலாம் என்று யூகம் செய்துகொண்டு முடிக்கிறபோது எதிர் பார்த்த வெற்றி கிடைக் காமல் போய்விடுகிறது. இதைத் தவிர்க்க நமது பலம், பலவீனங்களை சரியாகத் தெரிந்துகொள்ளவேண்டும். நமக்குள் லட்சிய தீபத்தை எப்போதும் அணையாமல் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் வெற்றி நிச்சயம்'' என்றார்.

மேலும், ''ஒரு விஷயத்தில் அடுத்தவர் வந்து உதவ வேண்டும், உற்சாகமூட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். விளையாட்டு வீரர்களைக் கவனித்து இருப்பீர்கள். விக்கெட் எடுத்தாலோ, கோல் அடித்தாலோ உடனே கை முஷ்டியை மடக்கி தங்களுக்குத் தாங்களே உற்சாகப் படுத்திக்  கொள்வார்கள். அப்படி நம்மை நாமே உற்சாகம் செய்துகொள்வோம். உங்கள் படிப்பறிவைத் திறமையாக மாற்றி, அதை செயலாக வடிவமையுங்கள்'' என்றார் செந்தில்குமார்.

வெல்கம் சுட்டி 2011 ஸ்டார்ஸ் !

தேநீர் இடை வேளைக்குப் பிறகு தொடங்கியது 'கேட்டுக்கோ...தெரிஞ்சுக்கோ’ கேள்வி-பதில் விருந்து. ''சுட்ட்ட்டிங்களா எல்ல்ல்ல்லோருக்கும் வணக்க்க்கம்!'' தனது ட்ரேட் மார்க் டயலாக் டெலிவரியுடன் வந்து நின்றார் நடிகர் மனோகர். டி.வி-யில் லொள்ளு சபா உள்பட பல நிகழ்ச்சிகள், பல சினிமாக்களில் நகைச்சுவை வேடங்களில் கலக்கி வருபவர். அவரிடம் சுட்டிகள் சினிமா, நகைச்சுவை, படிப்பு என பலவிதமான கேள்விகளையும் கேட்டனர். அவரும் சளைக்காமல் பதில் சொன்னார். (இந்தப் பேட்டியை சுட்டி ஸ்டார்ஸ் உங்களுக்கு அடுத்த இதழில் வழங்க இருக்கிறார்கள்).

அதன் பிறகு கதை விருந்து, 'கதை என்பது என்ன? கதை எழுத வேண்டிய அவசியம் என்ன? ஒரு கதையை எப்படி உருவாக்குவது? என்பதை விளக்கினார் சக்தி விகடனின் முதன்மைப் பொறுப்பாசிரியர் ரவி பிரகாஷ். ஒரு சம்பவத்தைக்  கதையாக்கி, அதில் ஒரு எதிர்பாராத திருப்பத்தையும் கொடுத்து முடித்தார். ''இதுபோல் கதைகளை உருவாக்குங்கள். எதிர்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளராக வளர வாழ்த்துகள்'' என்றார். அப்போதே சில சுட்டிகள் மேடைக்கு வந்து கதைகளைச் சொல்லி அசத்தினார்கள்.

வெல்கம் சுட்டி 2011 ஸ்டார்ஸ் !

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஆரம்பித்தது, 'கைகளில் கண்ணாமூச்சி’ என்ற வித்தியாசமான விருந்து. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் சுப்பிரமணியன். ''நமது கைகளின் முக்கியத்துவத்தை நாம் உணர்வதே இல்லை. ரெண்டு கைகளையும் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் நம் மூளைக்கு பலத்தைக் கூட்டி, பல அரிய விஷயங்களைச் செய்யலாம்'' என்றார். அதற்காக, அவர் கற்றுக்கொடுத்த பயிற்சிகளைச் சுட்டிகள் மிக உற்சாகத்துடன் செய்தார்கள்.

அடுத்து ஆரம்பித்தது, 'வேட்டையாடு விளையாடு’ என்ற உற்சாகக் கொண்டாட்டம். சுட்டிகளின் உள்ளம் கவர்ந்த குழந்தை நாடக நிபுணர், டாக்டர் வேலு சரவணன் இதை நடத்தினார். முதலில் சுட்டிகளுக்கு வண்ண வண்ண ரிப்பன்களைக் கொடுத்து தலையில் கட்டிக்கொள்ளச் சொன்னார். அவருடன் சுட்டிகள் புதையல் வேட்டைக்குக் கிளம்பினார்கள். பெற்றோர்களும் சுட்டிகளாக மாறி, கூடவே சென்றார்கள்.

வெல்கம் சுட்டி 2011 ஸ்டார்ஸ் !

வேட்டை தொடங்கும் முன்பு ரவீந்தர்நாத் தாகூரின் கதை ஒன்றை நடித்துக் காட்டினார் வேலு சரவணன். தனது நடிப்பால் சோகமான சில இடங்களில் எல்லோர் மனதையும் கனமாக்கினார். சிலர், கண்களில் நீர் வழியும் அளவுக்கு உருகினார்கள். அவர்களை மீண்டும்  ஜாலி மூடுக்குக் கொண்டுவந்து, வேட்டையை ஆரம்பித்தார். நிகழ்ச்சி வளாகத்தில் பல்வேறு இடங்களில் இருந்த சீட்டுகளைக் கண்டுபிடித்து, கடைசியில் புதையலைக் கண்டெடுத்தார்கள்.

சென்ற வருடம் சுட்டி ஸ்டார்களாகி பயிற்சி பெற்ற சுட்டிகளை சான்றிதழ் வழங்குவதற்காக வரவழைத்து இருந்தோம். போன வருடத்தின் மலரும் நினைவுகளோடு அவர்களும் உற்சாகமாக வேடிக்கை பார்த்தார்கள்.

வெல்கம் சுட்டி 2011 ஸ்டார்ஸ் !

அடுத்து, சீனியர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் அளிக்கப்பட்டது. சீனியர் சுட்டிகள், தங்கள் அனுபவங்களை ஜூனியர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.  தங்களது மொழி ஆற்றல், ஒருவரை அணுகும்முறை, பேசும் திறன் எப்படி எல்லாம் வளர்ந்தது என்பதையும், சுட்டி ஸ்டார்களாகத் தேர்வானதன் மூலம் பள்ளி மற்றும் உறவுகளிடம் தங்களுக்குக் கிடைத்த   மதிப்பையும்  சொன்னார்கள். சில சீனியர் சுட்டி ஸ்டார்களின் பெற்றோர், இந்தப் பயிற்சித் திட்டம் எப்படி தங்கள் சுட்டிகளை படிப்பு மற்றும் பல திறமைகளில் மேன்மைப்படுத்தியது என்பதை பெருமிதமாய்ச் சொன்னார்கள்.

வெல்கம் சுட்டி 2011 ஸ்டார்ஸ் !
வெல்கம் சுட்டி 2011 ஸ்டார்ஸ் !
வெல்கம் சுட்டி 2011 ஸ்டார்ஸ் !

அதை எல்லாம் கேட்கும்போதே இந்த வருட சுட்டி ஸ்டார்களிடம் உற்சாகமும் தன்னம்பிக்கையும் கூடியது. 'நீங்கள் எட்டடி பாய்ந்து இருக்கீங்கன்னா... நாங்க இந்த வருஷம் முழுக்க கலக்கி, பதினாறடி பாய்ந்து காட்டறோம்’ என்பதைப்போல் உற்சாகத்துடன் தயாரானார்கள். அவர்களுக்கு அடையாள அட்டை, பேட்ஜ், பேனா ஆகியன வழங்கி  வாழ்த்தி அனுப்பினோம்.

இவர்களின் பாய்ச்சல் படைப்புகள் அடுத்த இதழில் இருந்து ஆரம்பிக்கப் போகிறது. சென்ற வருட சுட்டிகளும்  சீனியர்களாகத் தொடர்ந்து சுட்டி விகடனில் கலக்குவார்கள். அதை எல்லாம் படிக்க, ரசிக்க, சுவைக்க நீங்க ரெடியா சுட்டீஸ்?

  படங்கள்: கே.கார்த்திகேயன்,
சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு