Published:Updated:

தோல்வியைத் தூரப் போடுங்க... வெற்றி நிச்சயம் !

தோல்வியைத் தூரப் போடுங்க... வெற்றி நிச்சயம் !

ஹலோ ஃப்ரெண்ட்ஸ்... எல்லோரும் சௌக்கியமா? புது சுட்டி ஸ்டார்களான நாங்க, இதோ பட்டையைக் கிளப்ப வந்துட் டோம். எங்களோட முதல் பேட்டியே கலகலப்பான, உற்சாகமான ஒரு மனிதரோடு அமைஞ்சது. அவர்தான் நகைச்சுவை நடிகர், 'லொள்ளு சபா மனோகர்’. நாங்க போட்டிபோட்டுக் கேட்ட பலவிதமான கேள்விகளுக்கு அவர் தந்த ஜாலியான பதில்கள்...

உங்களோட சின்ன வயசையும் பள்ளி வாழ்க்கை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்...

தோல்வியைத் தூரப் போடுங்க... வெற்றி நிச்சயம் !
##~##

நான் சின்ன வயசுலயே சேட்டைக்காரன்தான். ஸ்கூல்ல... பசங்களை பயங்கரமா கேலி செய்வேன். அவங்களும் என்னைக் கிண்டல் பண்ணுவாங்க. எல்லாத்தையும் ஜாலியா எடுத்துப்பேன். விளையாடும்போதும் அப்படித்தான். நிறைய நண்பர்கள்... கில்லி, பட்டம் விடறது இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும். என்னோட தமிழ் ஆசிரியர் மூலமா தமிழின் மேல் எனக்கு ஆர்வம் வந்துச்சு. தமிழ் இலக்கணமும் கத்துக்கிட்டேன்.

நடிப்பு மேல எப்படி ஆர்வம் வந்துச்சு?

சின்ன வயசுல இருந்தே சினிமா பார்க்கறது ரொம்பப் பிடிக்கும். நாமும் பெரிய நடிகனா ஆகணும்னு நினைச்சுப்பேன். ஆரம்பத்துல மேடை நாடகங்களில் நடிச்சேன். 'தெய்வம் தந்த வீடு’ என்ற நாடகம் என்னோட முதல் அனுபவம்.

சின்னத்திரைக்கு எப்படி வந்தீங்க?

தோல்வியைத் தூரப் போடுங்க... வெற்றி நிச்சயம் !

நான் பேங்க்ல வேலை செய்துட்டு இருந்தேன். அப்போ, சன் டி.வியில வர்ற சூப்பர் டென் நிகழ்ச்சியோட டைரக்டர் பாலாஜி அங்கே வருவார். அவரோட பழக்கம் ஏற்பட்டுச்சு. நடிக்க சான்ஸ் கேட்டேன். அவரும், அப்புறம் பார்க்கலாம்... அப்புறம் பார்க்கலாம்னு சொல்லிட்டே இருந்தார். விடாம முயற்சி செஞ்சேன். ஒருநாள் சூட்டிங் நடக்கற இடத்துக்குப் போனப்ப, ஒரே ஒரு சீன்ல வர்ற சின்ன கேரக்டரைக் கொடுத்தார். அதுல நான் நீட்டி முழக்கிப் பேசின டயலாக் சிரிப்பா இருந்துச்சு. பாலாஜி சாருக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு. அதுவே என்னோட ஸ்டைலாவும் மாறிப்போச்சு. அப்புறம், 'லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் வாய்ப்புக் கிடைச்சது. அதுல என்னோட இந்த ஸ்டைல் ரொம்ப பாப்புலர் ஆச்சு. அதன் மூலம் நான் இன்னும் ஃபேமஸ் ஆனேன்.

நீங்க அடிக்கடி காணும் கனவு என்ன?

சின்ன வயசுலன்னா... வாத்தியார் அடிக்கிறா மாதிரி அடிக்கடி கனவு வரும். இப்ப நல்லா உழைக்கிறேன். வேலை முடிஞ்சு போய் படுத்ததும் நிம்மதியா தூக்கம் வந்துடுது. அதனால, கனவு எல்லாம் வர்றதில்லே.

தோல்வியைத் தூரப் போடுங்க... வெற்றி நிச்சயம் !

நீங்க எதுவரைக்கும் படிச்சீங்க?

பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன்.

பத்தாவதுல பாஸா... பெயிலா?

அடடா... நல்லா வெவரமாதான் கேள்வி கேட்கறீங்க. உண்மையைச் சொல்லிடறேன்... பெயில்தான்.

உங்களோட பொழுதுபோக்கு என்ன?

நடிப்பும், சினிமா பார்ப்பதும்தான் என்னோட பொழுதுபோக்கு.

உங்களோட முதல் சினிமா எது?

'காதல் எஃப்.எம்’ என்ற படம்.

நீங்க சினிமாவுக்கு வர உங்க அப்பா, அம்மா ஊக்கப்படுத்தினாங்களா?

நிறைய பேர் மாதிரி அவங்களும் ஆரம்பத்துல தடுத்தாங்க. சினிமா எல்லாம் நமக்கு சரிவராதுன்னு சொன்னாங்க. ஆனா, நான் அவங்களை சமாதானம் செய்துட்டு நடிக்க வந்தேன். என்னோட நடிப்பைப் பத்தியும் என்னால பலபேர் சிரிச்சு சந்தோஷமா இருக்கிறதைப் பத்தியும் அப்பா, அம்மாகிட்டேயே நாலு பேர் சொல்றப்ப, அதை நினைச்சு சந்தோஷப்படறாங்க. இப்ப நான் சூட்டிங் போறப்ப அவங்களே வழியனுப்பி வைக்கிறாங்க. எதையும் புதுசா செய்யறப்ப, நம்மோடு இருக்கிறவங்க நம்ம மேல இருக்குற அக்கறையால தடுப்பாங்க. ஆனா, நம்ம முயற்சியை நாம விட்டுடக் கூடாது. நம்மால அதை சரியா செய்ய முடியும்னு நிரூபிச்சுட்டா அப்புறம் அவங்க பாராட்டுவாங்க. இது எல்லோருக்கும் பொருந்தும். சுட்டிங்க நீங்களும், எந்தத் துறைக்குப் போனாலும் இதை மனசுல வெச்சுக்கங்க.  

உங்களை யாராவது கிண்டல் பண்ணினா என்ன செய்வீங்க?

நானும் திரும்ப கிண்டல் பண்ணுவேன். சீரியஸா எடுத்துக்கமாட்டேன். சீரியஸா எடுத்துக்கிட்டா கோபம் வரும். அது நல்லது இல்லை. டென்ஷனை தூரப் போட்டுட்டு ஜாலியா இருக்கணும்.

உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் யார்?

நாகேஷ் சாரை ரொம்பப் பிடிக்கும். அவர் மாதிரி நகைச்சுவை நடிப்புல அசத்தறவங்க யாரும் இல்லை. சின்ன வயசுல நிறைய நாகேஷ் சார் படங்களைப் பார்த்து இருக்கேன்.

உங்களோட நடிச்சவங்க, உங்களை விட வேகமா முன்னுக்கு வந்துட்டா உங்க மனநிலை எப்படி இருக்கும்?

தோல்வியைத் தூரப் போடுங்க... வெற்றி நிச்சயம் !

சந்தோஷப்படுவேன். திறமை இருந்தா யாரும் முன்னுக்கு வரலாம். உதாரணமா, சந்தானம் சாரைச் சொல்லலாம், என்னோடு லொள்ளு சபாவுல நடிச்சுட்டு இருந்தவர்தான். சீக்கிரமே சினிமாவுல பெரிய இடத்துக்குப் போய்ட்டார். அவரை நினைச்சா பெருமையா இருக்கு. இந்த மாதிரி நடக்கறப்ப, அதை நம்ம முன்னேற்றத்துக்கான ஊக்கமா எடுத்துக்கணும். அப்படி இல்லாம முன்னேறியவங்களைப் பார்த்து பொறாமைப்பட்டா அது தப்பு. அதனால நம்மோட திறமைதான் பாதிக்கும்.

நீங்க எல்லா ஹீரோக்களுடனும் நடிக்க ஆரம்பிச்சுட்டீங்க. உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச ஹீரோ யார்?

எனக்கு எல்லோரையுமே பிடிக்கும். ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். அவங்களோடு நடிக்கும்போது, அந்த ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி நாம காமெடி செய்யணும். இதுதான் காமெடி நடிகனுக்கான சக்ஸஸ் ஃபார்முலா.  

உங்களுக்கு போட்டியா யாரை நினைக்கறீங்க?

அப்படி யாரையும் நினைக்கிறதில்லை. இருந்தாலும், மத்தவங்களுக்கு இணையா நடிக்கணும்கிற எண்ணம் எப்பவும் இருக்கும்.

லொள்ளு சபாவில் நடிக்கும்போது, இங்கே வந்து மாட்டிக்கொண்டோமே என்ற உணர்வு இருந்ததா?

எனது குருநாதர் பாலாஜிக்கு தொழில் மீது ஒரு வெறி. காட்சி நல்லா வரும்வரை விடமாட்டார். சூட்டிங் வந்துட்டா பேசக்கூடாது, அவர் கூடவே இருக்கணும். வேற எந்த வேலையும் செய்யக்கூடாது என்று நினைப்பார். அப்போ அவரிடம் வந்து மாட்டிக்கொண்டோமே என்ற உணர்வு வரும். ஆனா, எந்தத் துறையானாலும் ஈடுபாட்டோடு செயல்பட்டால் தானே வெற்றி பெறமுடியும்னு புரிஞ்சுகிட்டேன்.

நீங்க போட்ட முதல் ஆட்டோகிராஃப் ஞாபகம் இருக்கா?

ஓ! லொள்ளு சபால நடிச்சுட்டு இருந்தப்போ, நான் வேலை பார்த்த பேங்குக்கு ஒருத்தர் வந்தார். என்கிட்ட ஒரு வெள்ளை பேப்பரைக் காட்டி ஆட்டோகிராப் கேட்டார். நானும் ரொம்பப் பெருமையோடு போட்டேன். அதைப் பார்த்த மேனேஜர் 'வெள்ளை பேப்பர்ல வெறும் கையெழுத்தை மட்டும் போடாதே! அதை  தப்பா யூஸ் பண்ணலாம். எதாவது ரெண்டு வரி எழுதி, அப்புறம் கையெழுத்தைப் போடு’ அப்படின்னு சொன்னார்.

நீங்க எங்களை மாதிரி மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?

மாணவர்கள் எதுக்கும் கவலைப்படக்கூடாது. கோபப்படாமல், சந்தோசமா இருக்கணும். முடிந்ததைப் பற்றி யோசிச்சுக் கவலைப்படாதீங்க. தோல்வியைத் தூரப் போடுங்க. திரும்பத் திரும்ப முயற்சி செஞ்சா வெற்றி கிடைக்கும். வாழ்த்துகள்!

படங்கள்: கே.கார்த்திகேயன்

நீ.நிகிலானந்தன், அ.புவன், சிவ.உறுதிமொழி, வி.எஸ்.வைகவி, பி.சி.சாலை ஞானவள்ளி, சு.சுரேந்தர் சி.தாமரை, ஏ.நாராயணன், த.அம்ரிதா, சா.வி.சூர்யபிரபா, ர.பிரீத்தி, ஆர்.சுபத்ரா, ஆர்.மகேஸ்வரி,  எஸ்.அனந்த பத்மநாபன், இ.அக்ஷயா, ச.ராஜகுமாரி, ஜி.த்வஜஸ்வி, கா.அஸ்வின், ந.பிருந்தா, அ.ஷோபிகா, ஆர்.ராஜேஷ்வர், வீ.குமரவேல், ச.மரிய ரூபன், க.மீனா பிரியதர்ஷினி, ஏ.மீனா சங்கரி, இரா.ப.ஆதித்யன், க.வெங்கட்ராமன், ரா.பாலாஜி.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு