பிரீமியம் ஸ்டோரி

ஆர்.ஷஃபி முன்னா

'எதிர்காலம் பற்றிய லட்சியக் கனவுகளை சிறிய வயதிலேயே காணுங்கள்.’ என  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அடிக்கடி கூறுவார். அந்த வார்த்தைகளையே கருவாக வைத்து, உருவாகி இருக்கிறது 'ஐ யம் கலாம்’ என்ற திரைப்படம்.

நான் கலாம் !
##~##

படத்தின் கதை...சோட்டு என்ற  சிறுவன் தன் குடும்ப பாரத்தைச் சுமக்க, பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு, ராஜஸ்தானின் சாலையோர  ஓட்டலில் வேலை செய்கி றான். ஒரு முறை டிவியில்  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 'சிறு வயதில் தான் கடைகளில் பேப்பர் போட்டு வளர்ந்தேன்’ என்று சொல்வதைக் கேட்கிறான். சோட்டுவும் எதிர்கால கனவில் மூழ்குகிறான். நன்கு படித்து, எதிர்காலத்தில் கோட், சூட், அணிந்து வேலைக்குச் செல்வதைபோல் கனவு காண்கிறான். தன் பெயரையும் கலாம் என்றே மாற்றி வைத்துக் கொள்கிறான். இனி, நாமும் அவனை 'கலாம்’ என்றே சொல்வோம்.

சுட்டி கலாமின் சுறுசுறுப்பு, புரிந்துகொள்ளும் திறமை, ஓட்டல் உரிமையாளரான பட்டிக்குப்  பிடித்துப் போய்விடுகிறது. சாப்பிட வருவோரிடம் கலாம் நன்கு சிரித்துப் பேசி, கவர்வதால், வாடிக்கை யாளர்கள் பெருகுகின்றனர். அந்த ஓட்டல், அங்கே ராஜ குடும்பத்தின் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ளது. ராஜ குடும்பத்தின் சிறுவனான ரண் விஜய். அந்தப் பரம்பரையின் இளவரசன் என்பதால், உடன் பிறந்த  சகோதரிகளுடன்கூட விளையாட அனுமதி இல்லை.

இதனால், தனித்து விடப்பட்ட விஜய், கலாமு டன் ரகசியமாக நட்பு வைத்துக் கொள்கிறான். ஒருநாள் உரிமையாளரான பட்டி, கலாம் மீது தவறாக திருட்டுப் பழி சுமத்துகிறார். யாருமே கலாமுக்கு ஆதரவாகப் பேசவில்லை. இதனால், ஓட்டலை விட்டு வெளியேறிவிட்டாலும் கலாமுக்கு, தன் இலட்சியக் கனவு ஒருநாள் நிறைவேறும் என்பதில் உறுதி குலையவில்லை. குட்டி கலாமின் கனவு நிறைவேறுகிறதா?

நான் கலாம் !

ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரப்போகும் இந்தப் படம், அதற்கு முன்பாகவே... ஆறு விருதுகளைப் பெற்றுவிட்டது. குறிப்பாக, படத்தின் நாயகனாக சிறப்பாக நடித்த 'ஹர்ஷ் மயார்’ சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்று இருக்கிறான்.

படத்தில் வருவதைப் போலவே நிஜத்திலும்  ஹர்ஷ் மயாருக்கு  லட்சியக் கனவு இருக்கிறது. டெல்லியின் தக்ஷின்புரி என்ற குடிசைப் பகுதியில் வசிக்கிறான். 12 வயதாகும் ஹர்ஷ் மயாருடைய அப்பா அசோக்குமார், பொது நிகழ்ச்சிகளுக்கு ஷாமியானாவை வாடகைக்கு விடும் கடையில் வேலை செய்கிறார். தாய் ரீட்டா. டெல்லி அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறான் ஹர்ஷ். அவனை ஸ்பெஷல் பேட்டி எடுத்தோம்.

''ஐ யம் கலாம் படத்தில் நடித்ததன் மூலம் என் கனவின் முதல் கட்டம் பலித்தது '' என்கிறான் ஹர்ஷ். ''சிறுவயது முதல் எனக்கு நன்றாகப் பாட்டு பாட வரும். டிவியைப் பார்த்து, சினிமா நடிகர்களைப் போல் நடிப்பேன். நானாக டான்ஸ் கற்றுக்கொண்டேன். எதிர்காலத்தில் ஒரு சிறந்த நடிகனாவது எனது லட்சியம். என் கனவை மாமா சுனில்குமார் தட்டிக் கொடுத்து, ஊக்குவித்து வருகிறார். கோடை விடுமுறைகளில் டெல்லியிலுள்ள ஸ்ரீராம் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இரண்டு வருடம் பயிற்சியும் பெற்றேன். பிரபல நடிகர் ஷாருக்கானும் இங்குதான் பயிற்சி பெற்றாராம். நான் படிப்பையும் மறந்துவிடவில்லை. வகுப்பில், எண்பது சதவிகிதத்துக்குக் குறையாமல் மார்க் வாங்குகிறேன்'' என்கிறான் ஹர்ஷ்.

டெல்லியைத் தலைமையாகக் கொண்டு செயல்படும் 'ஸ்மைல் ஃபவுண்டேஷன்’ சமூகத் தொண்டு நிறுவனம்தான் படத்தைத் தயாரித்து இருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கான விழிப்புணர்வுக்கான படம்  எடுக்கத் திட்டமிட்டது. லீலா மாத்தப் பாண்டா எனும் ஹாலிவுட்டின் பிரபல டாக்குமெண்ட்ரி இயக்குனர்தான் இந்தப் படத்தின் இயக்குனர். ஹர்ஷ் மயார் அவரிடம் நடித்துக் காட்டியதைப் பார்த்து வியந்த இயக்குனர், 'ஐ யம் கலாம்’-ல் உடனடியாக நடிக்க வாய்ப்பு அளித்தாராம்.

''எனக்கு விருது கிடைத்த தகவலை என்னுடன் ஓட்டல் முதலாளியாக நடித்த பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர், குல்ஷன் குரோவர் அங்கிள் போனில் கூறினார். அதன் முக்கியத்துவம் என்ன என்று அப்போது தெரியவில்லை. குரோவர் அங்கிள், 'நான் 400-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துக் கிடைக்காத தேசிய விருது, உனக்குக் கிடைத் திருக்கிறது’ என்று கூறியபின்தான் தெரிந்தது. பிறகு, பிரபல நடிகர் ஜாக்கி ஷெராஃப் போன் செய்து பாராட்டினார்'' என்கிறான்.

ஆனால், படம் இன்னும் திரைக்கு வராததால் ஹர்ஷின் வீட்டுப் பகுதி மற்றும் பள்ளியின் நண்பர்கள் இன்னும் பார்க்கவில்லை. அதனால், யாரும் நம்ப மறுக்கிறார்கள். 'படம் ரிலீசானதும் அழைத்துச் சென்று காட்டுவேன்’ என்கிறான்.

நான் கலாம் !

''படங்களில் நடிப்பதற்காக வேண்டி, நான் பள்ளிப் படிப்பை டிஸ்டர்ப் செய்ய மாட்டேன். ஏனெனில், அனைத்து விதமான பணிகளுக்கும் அடிப்படை சிறந்த கல்விதான் என அம்மா அடிக்கடி கூறுவார். இந்தப் படம்கூட கோடை விடுமுறையில் நடித்ததுதான். முதலில் படிப்பு... வளர்ந்த பின்பு நடிப்பு! நான் பெரியவன் ஆனதும் நடிப்புத் தொழிலுக்குத்தான் செல்வேன்.'' என உறுதியாகச் சொல்கிறான் ஹர்ஷ் மயார்.

அட்டை கணினி
வரைகலை: முத்து.

நான் கலாம் !

ஸ்மைல் ஃபவுண்டேஷன் தயாரித்த 'ஐ யம் கலாம்’, உலகளவில் பனிரெண்டுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. அதில், ஜெர்மனியின் 'லூகாஸ் இன்டர்நேஷனல் திரைப்பட’ விருது மற்றும் இன்டர் நேஷனல் சினி கிளப் ஃபெடரேஷனின் 'டான் க்யூக்சோட்’ விருது, கோவாவில் நடந்த அகில உலக திரைப்பட விழாவில் அளிக்கப்பட்ட 'யங் ஜூரி’ விருது, பார்பிகான் லண்டனின் குழந்தைகள் திரைப்பட விழாவில் அளிக்கப்பட்ட 'ஆடியன்ஸ் ஃபேவரைட்’ விருது ஆகியவை முக்கியமானவை.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு