யோகா செய்யும்போது மனம் ஒருமுகப் படுவதால் உங்கள் கவனிக்கும்
திறன் அதிகமாகும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மனதில் தேவையில்லாத
குழப்பங்கள்ஏற்படாது. தன்னம்பிக்கையுடன் எப்போதும் ஃபிரஷ்ஷாக
இருப்பீர்கள். மேலும் உடலில் நாடி நரம்புகள் எல்லாம் தூண்டப்படும்.
இதனால் சிறுநீரகம், கணையம், நுரையீரல், இதயம் போன்ற
முக்கிய உறுப்புகளின் இயக்கம் நன்றாக இருக்கும். தினமும் யோகா
செய்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். ஒற்றைத்
தலைவலி, அடிக்கடி சளி தொந்தரவு, ஆஸ்துமா பிரச்னைகளும்
விரைவில் குணமாகும். இந்த சிறிய வயதிலேயே யோகா பயிற்சிகளை
உங்களால் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். சரி, யோகா
செய்ய ஆரம்பிக்கலாமா?
யோகா செய்வதற்கு முன்பு நீங்கள் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள
வேண்டும். யோகா செய்யும்போது உங்கள் கை, கால் அல்லது
உடலில் லேசான வலி ஏற்படலாம். அப்படிப்பட்ட சமயங்களில்
யோகா செய்வதை நிறுத்தி விடுங்கள். தினமும் முயற்சி செய்து
கொஞ்சம் கொஞ்சமாக யோகா கற்றுக்கொள்ளலாம். உடலை
வருத்திக்கொண்டு யோகா செய்யக்கூடாது. ஆசனங்கள் செய்யும்
போது என்ன மாதிரியான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்
என்று சொல்லப் படுகிறதோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.
பொதுவாக அதிகாலையில் குளித்துவிட்டு யோகா செய்வது நல்லது.
இந்தக் கட்டுரைத் தொடர் உங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவே.
ஆசிரியரிடம் நேரடியாகப் பயிற்சி எடுத்துக்கொண்டு செய்வதே
நல்லது. சரி, முதல் ஆசனமாக ‘உட்கட்டாசனம்’ பற்றிப் பார்ப்போமா..?
|