Published:Updated:

இசையால் மயக்கும் இரட்டையர் !

இசையால் மயக்கும் இரட்டையர் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இன்று பல சுட்டிகள் பலவிதமாக சாதனைகள் புரிந்து வருகின்றனர். அந்த வரிசையில் இதோ, இரு சாதனைச் சுட்டிகள். நாகஸ்வரம் என்பது இசைப்பதற்கு மிகவும் கடினமான இசைக்கருவி. அதை அருமையாக வாசிக்கிறார்கள் தாட்சாயணி - தாரணி சகோதரிகள். இதுவரை 40 கச்சேரிகளுக்கு மேல் செய்துள்ளனர். மன்னார்குடி அருகிலுள்ள எட அன்னவாசலைச் சேர்ந்த, தாட்சாயணிக்கு வயது பத்து. 6-ஆம் வகுப்பு படிக்கிறார். தாரணி 3-ஆம் வகுப்பு. கேட்ட கேள்விகளுக்கு இருவரும் மாறி மாறி அளித்த பதில்கள்...

நாகஸ்வரத்தைக் கற்றுக்கொள்ள எப்படி ஆர்வம் வந்தது?

இசையால் மயக்கும் இரட்டையர் !
##~##

தாட்சாயணி: எங்கள் குடும்பம் நான்கு தலைமுறையாக ஓர் இசைக் குடும்பம். தாத்தா ஏ.பி. மணிசங்கர், தந்தை ஏ.பி.எம். சுதாகரன் ஆகியோர் மிருதங்க வித்வான்கள். அப்பாதான் எங்களுக்கு  நாகஸ்வரத்தைக் கற்றுக்கொள்ள ஊக்குவித்தார்.

எத்தனை வயதில் பயிற்சியை ஆரம்பித்தீர்கள்?

தாட்சாயணி: இருவரும் ஒரே சமயத்தில் ஆரம்பித் தோம். அப்போது, நான் நான்காம் வகுப்பும் தாரணி ஒன்றாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தோம்.

உங்களுடைய குருநாதர் யார்?

தாரணி: நீடாமங்கலம் ரமேஷ் அவர்கள்.

உங்கள் பள்ளியில் ஊக்குவிப்பார்களா?

தாரணி: எட மேலையூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறோம். இந்த இளம் வயதில் நாங்கள் நன்றாக வாசிப்பதாகப் பாராட்டுவார்கள்.

உங்கள் இசை ஆர்வம் பள்ளிப் படிப்பை பாதிக்காதா?

தாட்சாயணி: பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் தலைமை ஆசிரியர், காலையில் நிகழ்ச்சி இருந்தால் அதை முடித்துவிட்டு மதியம் பள்ளி வர அனுமதிக்கிறார்.

முதன் முதலில் மேடையேறி வாசித்தபோது  பயமாக இருந்ததா?

தாரணி: இல்லை. எங்களுக்கு எப்போதுமே பயம் இருந்தது இல்லை.

பெரிய வித்வான்களுடன் வாசித்த அனுபவம்?

தாட்சாயணி: ஆதிச்சபுரம் ராமதாஸ், நீடாமங்கலம் முருகதாஸ் போன்ற வித்வான்கள் எங்களுக்கு மிருதங்கம் வாசித்து இருக்கிறார்கள்.

படித்து வேறு துறையில் ஈடுபட ஆசை உண்டா?

தாரணி: இல்லை. நாங்கள் படித்து முடித்தாலும், எதிர்காலத்தில் இதே நாகஸ்வர இசையில்தான் சாதிக்க விரும்புகிறோம்.

நீங்கள் சிறுமிகளாக இருப்பதால் வாசிப்பதில் ஏதும் சிரமம் இருக்கிறதா? குறிப்பாக மூச்சை இழுத்துப் பிடித்து வாசிக்க வேண்டுமே?

தாட்சாயணி: இல்லை. ஆனால், நாகஸ்வரத்தைப் பிடித்து வாசிக்கும்போது... எட்டு விரல்களாலும் துளைகளை மூடித் திறக்க வேண்டும். அதனால் முழு நாகஸ்வர எடையையும் இரு கட்டை விரல்களே தாங்க வேண்டும். அது சற்று சிரமமாக இருக்கும். வெகு நேரம் நாகஸ்வரத்தைத் தூக்கிப் பிடித்தபடி வாசிக்க முடியாது. இதுவும் நாங்கள் சற்று வளர்ந்தவுடன் சரியாகிவிடும்.

வாசிக்க சிரமமாக இருக்கும் கீர்த்தனை எது?

தாரணி: நகுமோ என்கிற தியாகய்யர் கீர்த்தனையும், இந்தோளமும் சற்று சிரமமாக இருக்கும். இது பெரியவர்களுக்கே சற்று சிரமம் என்பார் குருநாதர். ஆனாலும், இதையும் வாசித்துவிடுவோம்.

உங்களுக்கு பாராட்டைப் பெற்றுத் தருவது?

தாட்சாயணி: 'சிங்கார வேலனே தேவா’தான். அதன் கடைசியில் வரும் ஸ்வரம் சற்று கஷ்டமானது. அதை நாங்கள் வாய்ப் பாட்டிலும் பயிற்சி பெற்றிருப்பதால் நன்கு வாசிப்போம். கச்சேரிகளில் அதைக் கேட்டுவிட்டு, பலபேர் மேடையேறி வந்து பாராட்டிப் பரிசும் அளித்திருக்கிறார்கள்.

வரும் காலத்தில் குறிப்பிடத்தக்க கச்சேரி ஏதும் வாசிக்க இருக்கிறீர்களா?

தாரணி: ஆடியில் நடைபெறும், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் முத்துப் பல்லக்கு உற்சவ நிகழ்ச்சிக்கு எண்பது வருட பாரம்பரியம் உண்டாம். இந்த வருடம் அதில் எங்களை வாசிக்க அழைத்திருக்கிறார்கள். அதில், எங்களுக்கு புகழ்பெற்ற வித்வான்கள் மிருதங்கம் வாசிக்க இருக்கிறார்கள். இது, மிகப் பெரிய பெருமைக்குரிய விஷயம்!

இந்த நாகஸ்வர சகோதரிகளில் இளையவரான தாரணி, ஆறு வயதிலேயே நாகஸ்வர கச்சேரிகள் செய்ய ஆரம்பித்து விட்டார். அநேகமாக இது ஒரு உலக சாதனையாக இருக்கக்கூடும். அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது உண்மையானால், வருங்கால கின்னஸ் சாதனையாளராக தாரணி ஜொலிப்பார்.

இசையால் மயக்கும் இரட்டையர் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு