Published:Updated:

தண்ணீர் நாயகி

வி.எஸ்.சரவணன் எஸ்.தேவராஜன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'ஆரஞ்சுப் பழத்துக்குள் நாடு கடக்கும் தண்ணீர்’ என்று வித்தியாசமான பார்வையில் நீர் சேமிப்புப் பற்றி பேசி, இந்திய அளவில் விருது வாங்கியிருக்கிறார் பவதாரணி.

கடலூர், கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார் பவதாரணி. இந்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'மும்பை நேரு அறிவியல் மன்றம்’ ஆண்டுதோறும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்துக் கருத்தரங்கம் நடத்திவருகிறது. இந்த ஆண்டு, 'நீர் ஒருங்கிணைப்புப் பிரச்னைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் மும்பையில் நடந்த கருத்தரங்கில், அனைத்து மாநிலங்களிலிருந்தும் 34 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் இரண்டாம் பரிசை வென்றிருக்கிறார் பவதாரணி. முதல் பரிசு, ஒடிசா மாநில மாணவி அலிவா மிஷ்ராவுக்குக் கிடைத்தது.

பவதாரணி பெற்றிருக்கும் இந்த வெற்றிக்குப் பின்னுள்ள கதையைக் கொஞ்சம் பார்ப்போமா?

ஒருநாள், ஆசிரியை கீதா ஜோஸ் 'தண்ணீர் பாதுகாப்புப் பற்றி உங்களுக்குத் தெரிந்த செய்திகளைச் சொல்லுங்கள்’ என்று கேட்டு, நன்றாகப் பேசிய சிலரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களில் ஒருவர்தான் பவதாரணி. இங்கு தொடங்கியது இவரின் பயணம். மாவட்ட, மாநிலப்  போட்டிகளில் வென்று, 'தேசிய அளவில் நடைபெற்ற போட்டிக்குத் தமிழகத்திலிருந்து செல்லும் ஒரே மாணவி’ என்ற பெருமையோடு மும்பைக்குப் பயணமானார்.

தண்ணீர் நாயகி

மும்பையில் நடந்த போட்டியில், கொடுக்கப்பட்ட ஆறே நிமிடங்களில், நீர் பாதுகாப்புப் பற்றிய  தகவல்களோடு தன் ஆய்வைச் சமர்பித்தார்.  ஊக்க சக்தியாக பவதாரணியின் உடனிருந்த ஆசிரியர் கீதா ஜோஸ், ''தான் சொல்லவந்த கருத்தைத் தெளிவாக, குறித்த நேரத்தில் சொன்னதுதான் பவதாரணியின் பிளஸ் பாயின்ட்'' என்று பெருமையோடு சொன்னார்.

இதுகுறித்து பவதாரணியிடம் கேட்டபோது... ''உலகிலுள்ள நீரில் 97 சதவிகிதம் உப்பு நீர்,         2 சதவிகிதம் பனியாக உறைந்திருக்கிறது. மீதம் உள்ள நீரிலும் 0.03 சதவிகிதம்தான் மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளது. நீரை நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் இதை நினைத்துப் பார்த்தாலே போதும். நீரை வீணாக்க மாட்டோம். உரம், தொழிற்சாலைக் கழிவு போன்றவற்றால், நீர் மாசுபடுகிறது. இதைத் தடுப்பது போலவே இன்னும் சில விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். நம் சூழலுக்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாத கருவேல மரங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மண்ணில் இதன் வேர்கள், 175 மீட்டர் ஆழம்

தண்ணீர் நாயகி

வரை சென்று, ஈரத்தை உறிஞ்சுகின்றன. இலைகள், காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகின்றன. இந்த மரத்தின் மூலம் காய், கனி என்று எதுவும் கிடைக்காது. விறகாக மட்டுமே பயன்படுகிறது. இது உறிஞ்சும் நீரின் அளவுக்குப் பயன் கிடையாது. எனவே, இவற்றை வளர்ப்பதைத் தடை செய்யலாம்.

இஸ்ரேல் நாட்டில் ஏற்றுமதிக்குத் தடை செய்யப்பட்ட பொருட்களில் ஆரஞ்சுப் பழமும் ஒன்று. காரணம், ஓர் ஆரஞ்சுப் பழத்தை விளைவிக்க, சுமார் 50 லிட்டர் நீர் செலவிடப்படுகிறது. ஓர் ஆரஞ்சை ஏற்றுமதி செய்தால், 50 லிட்டர் நீரையும் ஏற்றுமதி செய்வதாக அர்த்தம். எனவேதான் இந்தத் தடை. இதுபோல நீர்ப் பாதுகாப்பு மேற்கொள்வதை நாமும் பின்பற்றலாமே'' என்ற பவதாரணி, விவசாயத்திலும் நீரைச் சேமிக்கும் வழிகளைச் சொல்கிறார்.

''நமது நாட்டில், 70 சதவிகித நீர் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. நாம் விவசாயம் செய்யும் முறையில் மாற்றம் அவசியம். சொட்டு நீர்ப் பாசனத்தை முழுமையாகப் பயன்படுத்தினால், பெருமளவு நீரைச் சேமிக்கலாம். அதே போல நதிகள் இணைப்பின் மூலம் கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்த முடியும். ஏரி, குளம் போன்றவற்றை அடிக்கடி தூர் வாருவதன் மூலம் நீர் விரயமாவதைத் தடுக்க முடியும்'' என்கிறார் பவதாரணி.

''நாம் ஒவ்வொருவரும் ஒரு மரமாவது வளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்த்து, மண்ணிலுள்ள நீர் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும். நீர் என்பது இயற்கை தந்த சொத்து. அதைப் பத்திரமாக அடுத்த தலைமுறைக்குத் தர வேண்டியது நமது கடமை'' என்கிறார்.

வெல்டன் பவதாரணி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு