பூ.கொ.சரவணன்

##~## |
''இன்னைக்கு என்ன கிழிச்சே?'' என்று கேட்கிற அம்மாவிடம், ''காலண்டரைத்தான் கிழிச்சேன்' என்று கூலாகச் சொல்வோம். காலண்டர் எக்கச்சக்கமாக கிழிந்துதான் வந்திருக்கிறது.
ஆரம்பத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களைப் பார்த்து நாட்களை அடையாளம் கண்டார்கள். கடல் பயணம் போகிறவர்கள், நட்சத்திரங்கள் குறிப்பிட்ட புள்ளிகளில் இருப்பதைவைத்து காலத்தைக் கணக்கிட்டார்கள். சூரியன் எங்கே இருக்கிறது, எவ்வளவு காலம் ஒளிர்கிறது என்பதைக்கொண்டு கணக்கிட்டதுதான் சூரிய நாட்காட்டிக்கு ஆதாரப்புள்ளி.
எகிப்தியர்கள், ஓர் ஆண்டுக்கு 12 மாதங்கள், அதில் ஒவ்வொரு மாதத்துக்கும் 30 நாட்கள், ஒரு வாரத்துக்கு 10 நாட்கள் என்று வடிவமைத்தார்கள். அப்படியும் காலம் தப்பிப்போவதைப் பார்த்து, லீப் நாளைக் கொண்டுவந்தார்கள்.

பாபிலோனியர்கள், சூரியன் மற்றும் நிலவைக்கொண்டு காலண்டரை வடிவமைத்தார்கள். 12 மாதங்கள் கொண்ட அந்த நாட்காட்டியில், பிறை நிலா தோன்றுகிற நாள்தான் மாதத்தின் தொடக்கம்.
அரேபியர்கள் ஹிஜ்ரி காலண்டர் முறையை ஈடுகட்ட 30 வருடங்களுக்குள் 11 முறை ஒருநாளை கூட்டிக் கொள்வார்கள். சீனர்கள், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஒரு மாதத்தைச் சேர்த்துக்கொண்டார்கள்.
ரோமானியர்கள், ஒரு வருடத்துக்கு 10 மாதங்களையே கணக்கில் கொண்டர்கள். குளிர்காலத்தை மாதத்தின் கணக்கில் அவர்கள் சேர்க்கவே இல்லை. மார்ச் துவக்க மாதமாகவும், ஒவ்வொரு மாதத்துக்கும் 30 நாட்கள் என்று 300 நாட்களைக் கொண்டு காலண்டரை உருவாக்கினார்கள். நீண்ட வருடங்களுக்குப் பிறகே, ஜனவரி மற்றும் பிப்ரவரி சேர்க்கப்பட்டது.
ஜூலியஸ் சீசர் காலத்தில் கொண்டுவரப்பட்ட காலண்டரில்தான் 12 மாதங்கள், லீப் வருடம், பிப்ரவரியில் இன்னொரு கூடுதல் நாள் எல்லாம் இருந்தன. இந்தக் காலண்டரிலும் ஒரு குறைபாடு இருந்தது. அது, பூமியின் நாட்களைவிட 11 நிமிடங்கள் கூடுதலாக இருந்தது. அது பல நூற்றாண்டு காலம் வளர்ந்து, 11 நாட்கள் பின்தங்கி இருக்குமாறு செய்துவிட்டது. ஆகவே, 1582-ல் செப்டம்பர் நான்காம் தேதி 15-ம் தேதியாக மாற்றப்பட்டது.
இப்படி பல சோதனைகள், ஆராய்ச்சிகளைக் கடந்துதான் இன்றைய காலண்டர் உங்கள் வீட்டில் இருக்கிறது. அதை அலட்சியமாகக் கிழிக்கும் முன்பு, 'இன்றைக்கு நாம் என்ன சாதிக்கப்போகிறோம்?’ என ஒரு நிமிடம் சிந்தியுங்கள். செயலில் இறங்குங்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் சாதனைகளுக்கான ஆரம்பமாக இருக்கட்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!