ஜாலி லைட் ஹவுஸ் விசிட் !வி.எஸ்.சரவணன், ஜெ.பி.ரினி, கு.அபிநயா படங்கள் : பா.கார்த்திக், பா.ஓவியா
##~## |
''வாவ்... பூமிக்கு நீலப் போர்வை போர்த்தின மாதிரி, கடல் எவ்வளவு பெருசா விரிஞ்சிருக்கு. தூரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்கள், பொம்மை மாதிரி தெரியுது'' என்றாள் ஜீவன்யா.
''இந்தப் பக்கம் பாரு... ரோட்டில் போகும் கார், பஸ் எல்லாமே பொம்மை மாதிரிதான் தெரியுது. நாம இப்போ, 150 அடி உயரத்தில் இருக்கோம்'' என்ற விஷ்வா குரலில், த்ரில் கலந்த உற்சாகம்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான, மெரினா கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கம், 1977-ல் கட்டப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களால் 1994-ல் பார்வையாளர்கள் மேலே சென்று பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. 20 வருடங்கள் கழித்து, நவம்பர்- 2013 முதல் மீண்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னை, தி.நகர் குண்டூர் சுப்பையா பிள்ளை மே.நி.பள்ளி மற்றும் சி.ஞி.வி மே.நி.பள்ளி மாணவர்கள் சிலருடன் அங்கே ஒரு ஜாலி விசிட் அடித்தோம்.
நீண்ட நேரம் லைட் ஹவுஸ் மேல் தளத்தில் நின்று கடல் அழகை ரசித்துவிட்டு இறங்கும்போது, ''இந்த லைட் ஹவுஸ் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?'' என்று கேட்டான் கார்த்திக்.
''ஓ... சென்னையில் இது நான்காவதாகக் கட்டப்பட்ட லைட் ஹவுஸ். 1796-ல், ஜார்ஜ் கோட்டையில் முதல் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. அடுத்து, 1844-ல் பூக்கடைப் பகுதியில் 161 அடி உயரத்தில் கட்டினாங்க. 1894-ல் சென்னை, உயர்நீதிமன்றத்தில் 175 அடிகள் உயரத்தில் விளக்கு அமைச்சாங்க. அதன் பிறகு, 1977-ல் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. மொத்தம் 10 தளங்கள். 242 படிக்கட்டுகள்'' என்று தகவல் களஞ்சியமாகக் கொட்டினாள் ஹேமலதா.
''இந்தியாவிலேயே லிஃப்ட் வெச்சுக் கட்டப்பட்ட முதல் கலங்கரை விளக்கம் இதுதான்'' என்று ஃபைனல் டச் கொடுத்து முடித்தாள் யுவஸ்ரீ.

பிறகு, தரைத்தளத்தில் இருந்த புதிய அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தார்கள். அங்கே இருந்த பழங்கால விளக்குகளைப் பார்த்தார்கள். அவை எப்படி இயக்கப்பட்டன.. இன்றைய நவீன விளக்குகள் எப்படி இயங்குகின்றன என்பது போன்ற விஷயங்களைத் தெரிந்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.
''நல்லா என்ஜாய் பண்ணீங்களா?'' என்று கேட்டபோது,

''ஓ... சேப்பாக்கம் ஸ்டேடியம்கூட தெரிஞ்சது. அங்கே டோனி சிக்ஸருக்கு அடிச்ச பந்தை நான் கேட்ச் பிடிச்சேன்'' என்றான் குணசேகரன்.
''அந்தப் பந்து எங்கேடா?'' என்று அபிராமி கேட்க, ''பாவம் டோனி, அடுத்த சிக்ஸர் அடிக்கணும்னு கெஞ்சினார். பந்தை கிரவுண்டுல தூக்கி வீசிட்டேன்'' என்றவனை எல்லோரும் சேர்ந்து கடற்கரை மணலில் விரட்டினார்கள்.
