ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

தோள் கொடுக்கும் செல்ல நண்பன் !

சு.ராம்குமார் எஸ்.சாய் தர்மராஜ்

##~##

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், இன்னொரு பாடப் புத்தகம் போல, சுட்டி விகடன் இடம் பிடித்துக்கொண்டது. ஆம்! பள்ளி நூலகத்தின் அடையாள எண்ணுடன் ஒவ்வொரு மாணவரின் கைகளிலும் தவழ்கிறது, சுட்டி விகடன்.

''மாணவர்களுக்கு, வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த சிறுவர் இதழ்கள் படிக்கவைக்க வேண்டும் என நினைத்தபோது, சுட்டி விகடன்தான் நினைவுக்கு வந்தது. ஒரு விஷயத்தை அவங்களோட மொழியில் சொல்லும்போது, எளிதில் சென்றடையும். எனவே, சுட்டி விகடனை வாங்கி, முதலில் ஆசிரியர்கள் அனைவரையும் படிக்கச் சொன்னேன். அவர்களுக்குப் பிடித்துவிட்டது. உடனே 45 இதழ்களை வாங்கி, வகுப்புக்கு ஐந்து எனக் கொடுத்தோம். இப்போது, சுழற்சி முறையில் மாணவர்கள் படித்துவருகிறார்கள்'' என்கிறார், பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்.

இப்போது, நிறைய மாணவர்கள் தாமாகவே புத்தகங்கள் வாங்கிப் படித்துவிட்டு, பள்ளி நூலகத்துக்குக் கொடுக்கிறார்கள். முதல்நாள் சுட்டி விகடனில் படித்தவற்றை மறுநாள் பிரேயரில் பேசுகிறார்கள்.

''நான் முதன்முதலா, டீ கடையில்தான் சுட்டி விகடனைப் பார்த்தேன். 'நல்லா இருக்குப்பா’னு சொன்ன உடனே, தொடர்ந்து அப்பா வாங்கித்தந்தார். என் தங்கச்சிக்கு இதில் வரும் கதையைச் சொல்வேன். போன இதழில், 'மிக்கி மௌஸ்’ ரொம்ப நல்லா இருந்துச்சு. 'ஒருவனை முன்னேற்ற, அவனைத் தட்டிக்கொடுத்துக்கிட்டே இருக்கணும்’னு புரிஞ்சது'' என்கிறார், 7-ம் வகுப்பு படிக்கும் சொர்ணாம்பிகா.

தோள் கொடுக்கும் செல்ல நண்பன் !

''கிளாஸ் லீடரா இருக்கிற அக்கா, அண்ணன்களைப் பற்றிப் படிச்சதும் கிளாஸ் லீடரான எனக்கும் நிறையப் பொறுப்பு இருப்பதை உணர்ந்தேன். லீடராகி, தேசியக் கொடியை ஏற்றியபோது ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை'' என்கிறார், 7-ம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணவேணி.

''பொது அறிவுத் துணுக்குகளைப் படங்களோடு படிக்கும்போது, மனசுல நல்லாப் பதியுது. மை டியர் ஜீபா, ரொம்பப் பிடிக்கும். நான் பெரியவன் ஆகி நிறைய கண்டுபிடிக்கணும்னு ஆசை. அதனால, இதில் வரும் புராஜெக்ட்களை எல்லாம் படிச்சுட்டு வர்றேன்'' என்கிறார், நடராஜன் என்ற மாணவர்.

இவர்களைப் போலவே ஐந்தாம் வகுப்பு தனலட்சுமியும் ஆறாம் வகுப்பு நவீனும் ''சுட்டி விகடன் எங்களுக்கு தோளில் கை போட்டுச் செல்லும் செல்லமான நண்பன்'' என்கிறார்கள்.

''முதலில், சிறகடிக்க பசங்களுக்குச் சொல்லிக்கொடுத்துட்டாப் போதும். வானத்தைத் தாண்டியும் அவர்களால் பறக்க முடியும். அந்தச் சின்ன விஷயத்தைத்தான் நாங்க செய்திருக்கோம்'' என்றார் சொக்கலிங்கம்.

நீங்களும் சிறகடிக்க ரெடியா?