தௌஜிதா பானு பா.காளிமுத்து
ஒரு வீட்டில் அக்கா, தம்பி என இரண்டு பேர் இருந்தால், பொதுவாக என்ன நடக்கும்?
வேற என்ன... பென்சில், பேனாவில் ஆரம்பிச்சு பல விஷயங்களுக்கு அடிக்கடி செல்லச் சண்டைகள் நடக்கும். ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டு, தரையில் விழுந்து கட்டிப்புரண்டு... ஜிம்னாஸ்டிக்ஸ் பார்க்கிற மாதிரி இருக்கும். சோனா - ரோஹித் வீட்டிலும் அதேதான்.
''ஹலோ ஃப்ரெண்ட்ஸ்... எங்களுக்கும் சின்னச் சின்ன சண்டை நடக்கும். ஆனா, நாங்க செய்றது நிஜமாவே ஜிம்னாஸ்டிக்ஸ்'' என்கிறார்கள்.
மதுரை, சித்து மெட்ரிகுலேஷன் பள்ளியில் சோனா 9-ம் வகுப்பும் ரோஹித் 7-ம் வகுப்பும் படிக்கிறார்கள்.
''எங்க அப்பா கருணாகரன் ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர். நிறையப் பேருக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி அளிக்கிறார். 1996-ல் திருப்பரங்குன்றம் மலையில் இருந்து படிக்கட்டுகளில் தலைகீழாக இறங்கி, லிம்கா சாதனை செய்தார். அவரைப் பார்த்து எங்களுக்கும் சின்ன வயசிலேயே ஆர்வம் வந்தது'' என்கிறார் சோனா.

''எல்.கே.ஜியில் சேர்ந்து ஏ,பி,சி,டி. படிக்கும்போதே, இன்னொரு பக்கம் ஜிம்னாஸ்டிக்ஸில் இறங்கிட்டோம். சமீபத்தில் நடந்த டிவிஷனல் லெவல் போட்டிகளிலும் சௌத் ஸோன் போட்டிகளிலும் ரெண்டு பேருமே முதல் இடத்தைப் பிடிச்சோம். மே 2013-ல் நடந்த நேஷனல் லெவல் போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடிச்சோம்'' என்கிறார் ரோஹித்.
இப்போது, ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் தென் இந்திய அளவில் 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட சிறந்த எட்டு மாணவர்கள் பட்டியலில் இந்த அக்கா - தம்பி இருக்கிறார்கள்.

''தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்னு சொல்வாங்களே... அதை நாங்க நிரூபிக்கணும். எங்க அப்பா பெயர் லிம்காவில் வந்துடுச்சு. நாங்க அவரைத் தாண்டி, கின்னஸில் இடம்பிடிக்கிற மாதிரி சாதனை செய்யணும்... செய்வோம்'' என்று நம்பிக்கையுடன் சொல்லும் சோனா, படிப்பிலும் கவனமாக இருக்கிறார்.

''நானும்தான். அக்காவுக்கு இன்ஜினியர் ஆகணும்னு ஆசை. எனக்கு சயின்டிஸ்ட் ஆசை. அதையும் ஒரு கை பார்த்துடுவோம்'' என்கிறார் ரோஹித்.
கலக்குங்க ஃப்ரெண்ட்ஸ்!