Published:Updated:

நாட்டுக்கொரு நல்ல செய்தி!

மா.நந்தினி, படங்கள்: செ.சிவபாலன்

##~##

 'ஒரு விஷயத்தைப் பக்கம் பக்கமா எடுத்து, மணிக்கணக்கில் பேசிடலாம். ஆனால், ஒரு வார்த்தைகூட பேசாமல் அடுத்தவங்களுக்கு ஒரு செய்தியைப் புரியவைக்கிறது சவாலான விஷயம். அதைத்தான் டெல்லியில் செஞ்சு, தேசிய அளவில் முதல் பரிசு வாங்கிட்டு வந்திருக்கோம்'' எனச் சொல்லி, பறை இசையோடு நம்மை வரவேற்றார்கள் அந்த மாணவிகள்.

இவர்கள், காரைக்கால் அருகே உள்ள ஊழியப்பத்து, அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள். தப்பாட்டம், பறை ஆட்டம், கரகம் ஆகியவற்றை டெல்லியில் அரங்கேற்றி, நமது பாரம்பரிய கலைக்கு முதல் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளனர்.

''இந்திய அரசு ஒவ்வொரு வருடமும் NCERT (National Council of Educational Research and Training) அமைப்பின் மூலம், 'குமரப் பருவக் கல்வி’ மற்றும் 'மக்கள்தொகைக் கல்வி’ என்ற திட்டத்தின்படி, தேசிய அளவிலான கிராமிய நடனப் போட்டியை நடத்துகிறது. பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு குழு, டெல்லியில் நடக்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும். அவர்கள் கொடுக்கும் தலைப்பை நமது பாரம்பரியக் கலைகள் மூலம் செய்தியாக வெளிப்படுத்தணும். அதில்தான் எங்கள் பள்ளிக்கு முதல் பரிசு'' என்று பெருமிதம் பொங்கச் சொன்னார், தலைமை ஆசிரியர் நாகராஜன்.

நாட்டுக்கொரு நல்ல செய்தி!

2013-ம் ஆண்டுக்கான இறுதிப் போட்டி டிசம்பரில் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, கோவா எனப் பல்வேறு மாநிலங்களின் பள்ளி மாணவர்கள் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர். இவர்கள் காரைக்கால் என்பதால், புதுச்சேரி சார்பாகப் பங்கேற்றார்கள்.

''ஆரம்பத்தில் டெல்லி வரைக்கும் போவோம் என்றே நினைக்கவில்லை. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்களைப் பார்த்ததும் கொஞ்சம் மிரட்சியாக இருந்தது. இறுதிப் போட்டியில், நான்கு தலைப்புகளைக் கொடுத்து, 10 நிமிடங்களில் செய்துகாட்டணும்னு சொன்னாங்க'' என்கிறார் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவிகளில் ஒருவரான ரம்யா.

''பெரியோரை மதித்தல், பிளாஸ்டிக்கைத் தவிர்த்தல், மரம் வளர்த்தல், எய்ட்ஸை விரட்டுதல் ஆகியவைதான் அந்தத் தலைப்புகள். தப்பாட்டம் மூலம் பெரியோரை மதித்தல், கரகம் மூலம் மரம் வளர்ப்பு மற்றும் பிளாஸ்டிக் தவிர்த்தல் செய்திகளை வெளிப்படுத்தினோம்'' என்கிறார் திவ்யா.

நாட்டுக்கொரு நல்ல செய்தி!

''ஒழுக்கத்தில் நெருப்பு போல இருந்தால், எய்ட்ஸை விரட்டலாம் என்பதைச் சொல்வதற்கு, தீச்சட்டி ஏந்தி நடனம் ஆடினோம். கடைசியாக, போதை என்ற அரக்கனை காளி நடனம் ஆடி அழிப்பதையும் சேர்த்து செய்தோம். பார்வையாளர்களின் கை தட்டல் நிற்க ரொம்ப நேரம் ஆச்சு'' என்று மகிழ்ச்சியுடன் அந்த நாளுக்கே சென்றார்கள் நித்யஸ்ரீ மற்றும் கார்த்திகா.

''நிகழ்ச்சிகள் முடிஞ்சதும் நாம் செஞ்ச விஷயத்தில் இருந்து, நடுவர்கள் கேள்வி கேட்பாங்க. அதுக்கும் பதில் சொல்லணும். எங்களை ஒருங்கிணைத்த முருகன் சார் ரொம்ப உதவியாக இருந்தார். கடைசியில் முடிவை அறிவிச்சாங்க. அசாம் மூன்றாம் இடம், ஹரியானா இரண்டாம் இடம்னு சொன்னவங்க, புதுச்சேரி முதல் இடம்னு சொன்னதும் சந்தோஷத்தில் ஒரு நிமிஷம் திகைச்சுட்டோம். மற்ற மாநில மாணவர்கள் எங்களைப் பாராட்டி, அவங்க கொண்டுவந்த விதவிதமான பூக்கள், பூச்செண்டுகளைக் கொடுத்தாங்க'' என்று பரவசத்துடன் சொல்கிறார் சங்கீதா.

நாட்டுக்கொரு நல்ல செய்தி!

தங்களின் இந்த வெற்றிக்குக் காரணமாக இவர்கள் கை காட்டும் ஆசிரியர் முருகன், ''பாரம்பரியக் கலைகள் என்பது வெறும் பொழுதுபோக்கு கிடையாது. ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு, முன்னோர்களின் வாழ்வியல் முறை எனப் பல விஷயங்களை அதில் தெரிஞ்சுக்கலாம். நவீன உலகுக்கு ஏற்ப, நம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் அதே சமயம், நமது பாரம்பரியக் கலைகளிலும் ஆர்வம் செலுத்தணும். அதுதான் நம்மைக் காலங்கள் கடந்தும் அடையாளம் காட்டும். நான் இவங்களுக்குச் சொல்லிக்கொடுத்து அடிப்படையை மட்டுமே. இவர்களின் ஆர்வமும் உழைப்பும்தான் இந்த வெற்றிக்குக் காரணம்'' என்கிறார்.

''இந்த வெற்றி எங்களுக்கு ரொம்பவே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கு. இந்தக் கலைகள் மூலம் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்வோம். உலகுக்கு நிறைய விஷயங்களைச் சொல்வோம்'' என்று உற்சாகத்துடன் சொன்னார்கள் சின்னக் கலைஞர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு