Published:Updated:

முடியும் என்றால் முடியும்!

உ.சிவராமன், படங்கள்: வீ.சிவக்குமார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

 சாதனை செய்ய, உடல் குறை ஒரு தடை இல்லை என்பதை ஒவ்வொரு நாளும் யாராவது நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், விஷ்ணுராம்.

பட்டிவீரன்பட்டி, என்.எஸ்.வி.வி.மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார் விஷ்ணுராம். பிறவியிலேயே வாய்பேச இயலாத, செவித்திறன் குறைபாடுடைய இவர், இப்போது தேசிய அளவிலான கூடைப் பந்து விளையாட்டில் அசத்துகிறார்.

''விஷ்ணு, சின்ன வயதில் வீட்டிலேயே எப்பவும் முடங்கிக் கிடப்பான். நான், மாநில அளவிலான கூடைப் பந்தாட்ட வீரன். அவனை இப்படிப் பார்க்கிறது மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு. அவனையும் ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக்க நினைச்சேன். அதைத் தன்னுடைய தன்னம்பிக்கையாலும் உழைப்பாலும் நிறைவேற்றி இருக்கிறான்'' என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார், தந்தை ரமேஷ் பாபு.

முடியும் என்றால் முடியும்!

விஷ்ணுராம், ஏழாம் வகுப்பு படிக்கும்போது, தினமும் காலையில் பட்டிவீரன்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு வரை 8 கிலோமீட்டர், தந்தையுடன் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தான் விளையாடச் செல்லும் இடங்களுக்கு எல்லாம் மகனையும் அழைத்துச் செல்வாராம் ரமேஷ் பாபு.

முடியும் என்றால் முடியும்!

எட்டாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளிகளுக்குகிடையே நடந்த வட்டார அளவிலான கூடைப் பந்துப் போட்டியில், விஷ்ணுராமின் பள்ளி எடுத்த 41 பாயின்ட்களில், 37 பாயின்ட்கள் விஷ்ணுராம் எடுத்தது. விரைவில், மாநில அணிக்குத் தேர்வாகி, 2011-ம் வருடம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த தேசிய கூடைப் பந்து போட்டியில் விளையாடினார்.

''அதில், தமிழ்நாடு அணி தோற்றுவிட்டாலும் 'பெஸ்ட் பிளேயர்’  விருதை விஷ்ணுராம் வாங்கினான். அதுக்குப் பிறகு, கொஞ்ச நாள் உடம்பு சரியில்லாமப்போச்சு'' என்கிறார் தந்தை.

விரைவிலேயே அதிலிருந்து மீண்டுவந்தார் விஷ்ணுராம். இப்போது, பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் சிறந்த வீரர், மாற்றுத்திறனாளிகளுக்கான கிஷிசிணிழிஞிகிஷி  சாதனை விருது என, இவரது சாதனைகளின் பட்டியல் நீள்கிறது.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் லட்சியக் கனவுடன் இருக்கும் விஷ்ணுராம், தந்தை மூலம் நமக்குச் சொன்ன செய்தி, ''முடியும்னு நினைச்சா, எதுவும் முடியும். நம் குறைகளை நினைச்சுக் கலங்குவதைவிட, முடிந்த வரை முயற்சிப்போம்னு செயலில் இறங்கணும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு