Published:Updated:

அசர வைத்த 1001 பொங்கல் !

உ.சிவராமன் வீ.சக்தி அருணகிரி

அசர வைத்த 1001 பொங்கல் !

உ.சிவராமன் வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
##~##

சின்னப் பசங்க, சொப்பு பாத்திரத்தில் பொங்கல் வைத்து விளையாடுறதைத்தான் கேள்விப்பட்டிருப்பீங்க...  நிஜமாகவே பொங்கல் வெச்சு அசத்தினாங்க அந்த மாணவ, மாணவிகள்.

தேனி, வேலம்மாள் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிச் சுட்டிகள் சேர்ந்து, 1001 பொங்கல் வைத்துச் சாதனை படைக்கப்போவதாகச் சொல்ல, வண்டி கட்டிக்கிட்டுக் கிளம்பினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏதோ, கோயில் திருவிழாவில் நுழைஞ்ச மாதிரி இருந்தது பள்ளி வளாகம். 1001 பொங்கல் வைக்கத் தேவையான பொருட்கள், சின்னச் சின்ன விறகுக் கட்டைகள், அடுப்புக்கான கற்கள் என பக்காவாக ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. 6 முதல் 12-ம் வகுப்பு வரையான 1,000 மாணவமணிகள் உற்சாகத்தோடு வந்தாங்க. மைதானத்தில் இடத்தைப் பிடிச்சு, கற்களால் அடுப்பு ரெடி பண்ணினாங்க. 'ஸ்டார்ட் மியூஸிக்’ என்பது மாதிரி சரியாக 8.30 மணிக்கு, அடுப்பைப் பத்தவெச்சாங்க.

இதில், பசங்களுக்கும் 40 சதவிகித இட ஒதுக்கீடு இருந்துச்சு. ஆமாங்க... 600 மாணவிகள், 400 மாணவர்கள் கலந்துக்கிட்டாங்க. திரும்பின பக்கம் எல்லாம், ''தண்ணியை ஊத்து... அரிசியை எடு...தீப்பெட்டி எங்கே?'' என ஒரே பரபரப்பு. வேடிக்கை பார்க்க வந்திருந்த பெற்றோர்கள், அடிக்கடி உதவிக்கு வந்தாங்க.

அசர வைத்த 1001 பொங்கல் !

'வீட்ல, சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்தாலே, 'உனக்கு இங்கே என்ன வேலை? போ... போ’னு விரட்டுவாங்க. திருவிழாவில் பொங்கல் வைக்கும்போதும்   நம்மளை பக்கத்திலேயே விட மாட்டாங்க. அப்படி இருக்கிறப்ப, 'நீங்களே பொங்கல் வெச்சு, எங்களுக்குக் கொடுக்க ரெடியா?’னு கேட்டால், விடுவோமா? டபுள் ஓகே சொல்லி, களத்தில் குதிச்சிட்டோம்'' என்றார் ஒரு மாணவி உற்சாகமாக.

அசர வைத்த 1001 பொங்கல் !

''பொங்கலை எப்படி வைக்கணும், அதுக்கு என்னென்ன தேவைனு ரெண்டு நாளைக்கு முன்னாடியே டீச்சர்ஸ் சொல்லிக்கொடுத்துட்டாங்க. அம்மாகிட்டேயும் டிப்ஸ் கேட்டுக்கிட்டோம். அதனால, நாங்களும் அசத்திடுவோம்'' என்றான் ஒரு மாணவன்.

முதலில் ஒரு பானை பொங்கியதும், ''பொங்கலோ பொங்கல்'' என்று ஒரு சுட்டி குரல் கொடுத்தாள். உடனே, அக்கம்பக்கம் இருந்த சுட்டிகளும் உற்சாகக் குரல் கொடுத்து, தங்களது மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினாங்க.

அசர வைத்த 1001 பொங்கல் !

ஒரு மணி நேரத்தில் எல்லோரின் பொங்கலும் பொங்கித் தயாரானது. 1001- வது பொங்கல், ஸ்பெஷல் பொங்கல். போன வருஷம் அந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் (மாநில அளவில் 4-ம் இடம்) பெற்ற ஜெய அமிர்தவர்ஷினி அந்தப் பொங்கலை வைத்தார்.

எல்லாப் பொங்கலையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து, ''பொங்கலோ பொங்கல்'' என்று உற்சாசாகக் குரல் கொடுத்தபோது பள்ளிக் கட்டடம் அதிர்ந்த ஃபீலிங் கிடைச்சது.

அடுத்து, வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சது. இளவட்டக்கல் தூக்குவது, உறியடி, சுருள் சுத்துதல், சிலம்பப் போட்டி என பெரியவங்களே அதிகம் கேள்விப்படாத சங்கதிகள், பொங்கல் விழாவை இன்னும் குஷியோடு ரகளையாக ரசிக்கவெச்சது. வேட்டி கட்டிய சுட்டிகள் போட்டிகளில் துள்ளி ஓடினதும், நடனம் ஆடினதும் கொள்ளை அழகு.

''தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகை பொங்கல். நகரங்களில் அதற்கான கொண்டாட்டம் குறைஞ்சுட்டே இருக்கு. நான்கு நாட்கள் விடுமுறை, டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சிகள், புதிய சினிமாக்கள்... இதுதான் பொங்கல் பண்டிகைனு  நினைச்சுட்டு இருக்காங்க. பொங்கல் கொண்டாடுவதன் காரணம் என்ன... பொங்கலை முறையாக எப்படி வைக்க வேண்டும்? என்பதை மாணவர்கள் மனதில் பதியவைக்கவே இந்த நிகழ்ச்சியை நடத்தினோம்.

அசர வைத்த 1001 பொங்கல் !

பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய வீர விளையாட்டுகளுக்கும் பயிற்சி கொடுத்தோம். இந்த நிகழ்ச்சியைப் பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றோடு, இந்தப் பகுதி மக்களின் விவசாயத்துக்குக் காரணமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னி குக் அவர்களுக்கும் படைக்கிறோம்'' என்றார், பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி.

1001 பொங்கல், சாதனை என்பதைவிட, நமது பாரம்பரியப் பண்டிகையைப் பற்றி மாணவர்கள் தெரிஞ்சுக்கிட்டது, சர்க்கரைப் பொங்கலை ரெண்டு கரண்டி அதிகம் சாப்பிட்ட சந்தோஷத்தைக் கொடுத்துச்சு.

கோலத்தில் சாதனை !

அசர வைத்த 1001 பொங்கல் !

கரூர், வேலம்மாள் வித்யாலயா மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தைத் திருநாளை, மற்றொரு சாதனை நாளாக மாற்றினார்கள். அந்தப் பள்ளி மாணவிகள் 100 பேர் ஒன்றுசேர்ந்து, 10 மணி நேரத்தில் 3 லட்சம் புள்ளிகள்கொண்ட பிரமாண்டமான 'சிக்குக் கோலம்’ ஒன்றை பள்ளி மைதானத்தில் உருவாக்கினார்கள். நாட்டுப்புற ஆடல் பாடல்களுடன் கலைநிகழ்ச்சிகளையும் நடத்தி அசத்தினார்கள்.

- பி.கமலா