Published:Updated:

வலை உலா - நீங்களும் வானிலை நிபுணராகலாம் !

சைபர்சிம்மன் படங்கள் : ப.சரவணகுமார்

வலை உலா - நீங்களும் வானிலை நிபுணராகலாம் !

சைபர்சிம்மன் படங்கள் : ப.சரவணகுமார்

Published:Updated:
##~##

மின்னல் தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான கேள்வி. மின்னல் என்பது மின்சாரம்தான். அந்த மின்னல் எந்த அளவுக்கு வெப்பமானது தெரியுமா? மலைத்துவிடாதீர்கள், 54,000 டிகிரி ஃபாரன்ஹீட். அதாவது, சூரியனின் மேல் பகுதியைவிட ஆறு மடங்கு உஷ்ணமானது. அம்மாடியோவ்!

மின்னல் என்றதும் இடியும் நினைவுக்கு வருமே.  மேகத்தில் இருந்து மின்னல் புறப்பட்டு வரும்போது,  காற்றில் பிளவை உண்டாக்கும். மின்னல்  மறைந்ததும், காற்று அந்த இடத்தில் ஒட்டிக்கொள்வதால் உண்டாகும் ஒலியையே, இடியாகக் கேட்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மழைத் துளியின் அளவை உங்களால் சொல்ல முடியுமா?

மழைத்துளியின் அளவு, ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவானது. இதன் சுற்றளவு, ஒரு அங்குலத்தில் நூறில் ஒரு பங்கில் இருந்து (அதாவது .0254 சென்டி மீட்டர்) நான்கில் ஒரு பகுதியாக (.635 சென்டி மீட்டர்) இருக்கலாம்.  இந்த மழைத்துளி, மணிக்கு 7 முதல் 18 மைல் வேகத்தில் பூமிக்கு வந்து சேர்கிறது. அதாவது, விநாடிக்கு 3 முதல் 8 மீட்டர் வேகம்.

இந்தத் தகவல்கள் எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கிறதா? இது போல இன்னும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது, வெதர்விஸ்கிட்ஸ்(http://www.weatherwizkids.com/index.htm).வானிலையின் அடிப்படை, அதன் பின் உள்ள அறிவியல் உண்மைகளைக் கற்றுத் தருவதற்காக உருவாக்கப்பட்ட தளம் இது.

வலை உலா - நீங்களும் வானிலை நிபுணராகலாம் !

மேகம் எப்படி உண்டாகிறது.. புயல், மழை வருவது எப்படி.. காற்று எதனால் வீசுகிறது போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் தனித் தனி தலைப்புகளில் பதில்கள் உள்ளன. உதாரணத்துக்கு, காற்று என்றால் என்ன, காற்றில் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறது, காற்றாலை எப்படிச் செயல்படுகிறது போன்றவற்றைக் காற்று என்ற தலைப்பின் கீழ் தெரிந்துகொள்ளலாம்.

எல்லாம் சரி, வானிலை என்றால் என்ன? காற்று மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்தான் வானிலை. எப்படி தெரியுமா? பூமி கோள வடிவில் இருக்கிறது. இதனால், சூரியக் கதிர்கள் பூமியின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே அளவில் விழுவது இல்லை. பூமியின் மத்தியப் பகுதியில் அதிகமாக விழும். அதே நேரத்தில், துருவப் பகுதியில் குளிர் காலங்களில் குறைவாக விழுகிறது. இதன் விளைவாக, உண்டாகும் வெப்பநிலை வேறுபாடு, காற்று மற்றும் தண்ணீரில் ஏற்படும் நிலையில்லாத அசைவுகளால் உருவாகும் சுழற்சியான மாற்றங்கள்தான் வானிலை.

வலை உலா - நீங்களும் வானிலை நிபுணராகலாம் !

இந்த இணையதளத்தில் கொஞ்ச நேரம் உலா வந்தால், உங்களுக்கு வானிலை விஷயங்கள் எளிதாகப் புரிந்துவிடும். மேலும், இந்தத் தளத்தில் வானிலை தொடர்பான விளையாட்டுகளும் இருக்கின்றன. வானிலைத் துணுக்களையும் படித்து ரசிக்கலாம். வானிலைப் பாதுகாப்புக் குறிப்புகளையும் தெரிந்துகொள்ளலாம்.

அறிவியல் தளமாக இருக்கும்போது, பரிசோதனைகள் இல்லாமல் இருந்தால் எப்படி? இந்தத் தளத்தில் நிறையப் பரிசோதனைகளும் தரப்பட்டுள்ளன. கண்ணாடிக் குடுவைக்குள் சூறாவளியை உருவாக்குவது, மேகத்தை உண்டாக்குவது, மின்னலை வரவைப்பது என விதவிதமான வானிலைப் பரிசோதனைகளையும் செய்யலாம். வீட்டிலேயே அழகான வானவில்லை வரவைக்கலாம். எல்லாப் பரிசோதனைகளுக்கும் எளிய விளக்கம் இருக்கிறது. ஆனால் ஒன்று, இந்தப் பரிசோதனைகளைச் செய்யும்போது, பாதுகாப்புக்கு பெரியவர்களை அழைத்துக்கொள்ளுங்கள்.

வலை உலா - நீங்களும் வானிலை நிபுணராகலாம் !

வானிலை தொடர்பாக பி.பி.சி. செய்தித் தளமும் சுட்டீஸ்களுக்காக சிறப்புப் பகுதியை அமைத்துள்ளது.  http://www.bbc.co.uk/schools/whatisweather/aboutweather/flash_menu.shtml. இந்தப் பகுதியிலும் வானிலையை ஒரு கை பார்க்கலாம். இன்னும் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், டிஸ்கவரி சேனலின் சிறுவர் பகுதி  http://kids.discovery.com/tell-me/curiosity-corner/weather. இந்தத் தளத்தில் அழகான புகைப்படங்களுடன் வானிலை விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. வானிலைக்காக என்றே செல்போன் செயலி ஒன்றும் இருக்கிறது. http://www.kidweatherapp.com/. ஆனால், கட்டணம் உண்டு.