Published:Updated:

கடைசியா எப்போ சிந்திச்சீங்க ?

கே.யுவராஜன், க.பாலாஜி ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார்

கடைசியா எப்போ சிந்திச்சீங்க ?

கே.யுவராஜன், க.பாலாஜி ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார்

Published:Updated:
##~##

'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே’ என்று பாட்டுப் பாடாத குறைதான். கடந்த முறை சந்தித்த அதே சென்னை, மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி... அதே அரங்கம்... நம்ம சுட்டி ஸ்டார்கள்.

சுட்டி விகடனின் 'பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் 2013-14’ திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த எட்டு மாதங்களாக தங்களது படைப்புகளால் கலக்கிக்கொண்டிருக்கும் 55 சுட்டி ஸ்டார்களின் ஒரு நாள் முகாம், பிப்ரவரி 2-ல் நடந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் நிகழ்ச்சியாக, ஹெலிக்ஸ் மனிதவள மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சேர்மன் ஜி.செந்தில்குமார் மைக் பிடித்தார்.

சிந்திக்கலாம் வாங்க!

''நீங்க எல்லாம் கடைசியா எப்போ சிந்திச்சீங்க?'' என்று கேட்க, எல்லோரும் தலையை ஒரு பக்கமாக சாய்த்து, விட்டத்தைப் பார்த்தார்கள்.

''இதோ, இப்போகூட சிந்திக்கிறோமே'' என்று ஒரு சுட்டி ஸ்டார் பவுன்சர் போட, ''தெரியுமே... இதைச் சொல்வீங்கன்னு தெரியுமே. இது சிந்தனை கிடையாது. மறந்ததை ஞாபகப்படுத்திக்கிறது'' என்று அந்த பவுன்சரை, சிக்ஸருக்கு அடித்தார் செந்தில்குமார்.

கடைசியா எப்போ சிந்திச்சீங்க ?
கடைசியா எப்போ சிந்திச்சீங்க ?

''பல பேர் இப்படித்தான் 'இன்னிக்கி காலையில இட்லி சாப்பிட்டோமா... பொங்கல் சாப்பிட்டோமா? அதுக்கு தொட்டுக்கிட்டது தக்காளி சட்னியா... தேங்காய் சட்னியா?’னு ஞாபகம் வெச்சுக்கிறதையே சிந்தனைனு நினைக்கிறாங்க. சிந்தனை என்பது நம்மிடமோ, நம்மைச் சுற்றியோ ஏதாவது ஒரு மாற்றத்தை உருவாக்குவது. நம்ம நாட்டில் சிந்திப்பதற்கு தனியா ஒரு கல்விமுறை இல்லை. அப்படி ஒரு கல்விமுறை தேவை. சிந்திக்கிறது வாழ்க்கையில் ரொம்ப முக்கியம். புதுசா ஒரு விஷயத்தைச் சிந்திக்கிறப்ப 'நம்மைச் சுற்றி இருக்கிறவங்க என்ன சொல்வாங்களோ... இது சரியா?’னு தயங்க வேண்டாம். உங்களை நீங்க முதல்ல நம்புங்க. அப்போதான் புதிய சிந்தனைகள், புதிய மாற்றங்கள் உருவாகும்'' என்றார் செந்தில்குமார்.

கடைசியா எப்போ சிந்திச்சீங்க ?

அடடே ஃ

சுவாரஸ்யமான ஒரு பயிற்சி எனச் சொல்லி, எல்லோரையும் தமிழ் ஆய்த எழுத்தான 'ஃ’ எழுதச் சொன்னார். ''இந்த எழுத்தைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன எல்லாம் தோணுதோ, அதை எழுதுங்க. குறைஞ்சது 20 வார்த்தைகள், பொருட்களின் பெயர்கள் இருக்கணும்'' என்றார்.

கடைசியா எப்போ சிந்திச்சீங்க ?

சற்று நேரத்தில் இட்லித் தட்டு, கேடயம், ப்ளக் பாயின்ட், வாஷ்பேசினில் தண்ணீர் இறங்க போடப்படும் வடிகட்டி எனப் பெரிய பட்டியல் சுட்டிகளின் தாள்களில் இருந்தன.

''இவ்வளவு நாளா இதை ஒரு எழுத்தாக மட்டுமே பார்த்தீங்க. இப்போ, இதற்குள் எத்தனை பொருட்கள் இருக்குனு தெரியுது. இப்படித்தான் எந்த விஷயத்தையும் பல கோணங்களில் பார்க்கணும்'' என்றவர், சிந்தனையை வளர்த்துக்கொள்ளும் விதம், வருங்காலத்தில் நாம் சந்திக்கப்போகும் சவால்கள், நமக்காகக் காத்திருக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றை எளிமையாக விளக்கினார்.

கடைசியா எப்போ சிந்திச்சீங்க ?

''மறுபடியும் ஒரு ஜாலிப் பயிற்சி. உங்க எல்லோருக்கும் சார்ட் கொடுக்கிறோம். அதில் உங்கள் பெயர், உங்கள் பலம், பலவீனம், எதிர்கால ஆசை ஆகியவற்றை சொல்லணும். ஆனால், ஒரு எழுத்துகூட இருக்கக் கூடாது. ஓவியங்கள் மூலமோ, படங்களை ஒட்டியோ புரியவைக்கணும்'' என்றார்.

சவாலில் சுறுசுறுப்புடன் இறங்கியது சுட்டி ஸ்டார் பட்டாளம். ஒரு மணி நேரத்தில் ஓவியங்கள், புகைப்படங்களால் தங்கள் சார்ட்களை வண்ணப்படுத்தினார்கள். அந்த சார்ட்கள் அரங்கத்தில் வரிசையாக அலங்கரிக்கப்பட்டன.

கடைசியா எப்போ சிந்திச்சீங்க ?

சிலம்பம் சுற்றிய ஸ்டார்கள்!

உணவு இடைவேளைக்குப் பிறகு அவுட்டோர் நிகழ்ச்சி. 'கிராமத்துக் கலைகள் அறிவோம்’ என்ற தலைப்பில் சிலம்பாட்டம். சென்னை, ஸ்ரீ.வி.பாட்ஷா ரெட்டி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். அவர்களுடன் வந்திருந்த பயிற்சியாளர் சையத் ஹமித், ''நமது பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் முக்கியமானது சிலம்பம். மாணவர் கடத்தல், பட்டப்பகலில் வழிபறி என்று அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்கிறோம். இதில் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள தற்காப்புக் கலையை ஒவ்வொருவரும் கற்க வேண்டும். இவர்கள் எல்லோருமே சிலம்பத்தில் தேசிய அளவில் பரிசு பெற்றவர்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களே. உங்களாலும் இந்தச் சாதனையைச் செய்யமுடியும்'' என்றார். சில சுட்டி ஸ்டார்களை அழைத்துச் சிலம்பம் சுழற்றவைத்தார்.

கடைசியா எப்போ சிந்திச்சீங்க ?

மீண்டும் அரங்கத்தில் நுழைந்த சுட்டி ஸ்டார்களை வரவேற்றார் செந்தில்குமார். அவர்கள் வரைந்திருந்த கொலாஜ் சார்ட்களைக் காட்டிப் பேசினார். சில சுட்டி ஸ்டார்களை அழைத்து, தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திய முறையை விளக்கச் சொன்னார். இறுதியாக, ''உங்களின் பெயர்களை, எண்ணங்களை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இப்படித்தான் எல்லோரும் செய்யும் ஒரு விஷயத்தையே நாம் வித்தியாசமாக வெளிப்படுத்தும்போது, உலகத்தால் கவனிக்கப்படுவோம். இது எல்லாத் துறைகளுக்குமே பொருந்தும். இன்று பல்வேறு துறைகளில் வெற்றி நாயகர்களாக வலம்வரும் அனைவருமே இப்படி சிந்தித்துச் செயல்படுபவர்களே. நீங்களும் எதிர்காலத்தில் உங்கள் துறையில் சிறந்து விளங்குங்கள்'' என்றார்.

பின்னி எடுங்க நண்பர்களே!

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த சேதுராமன், கலகலப்பான 'மந்திரமா... தந்திரமா?’ மேஜிக் நிகழ்ச்சியை நடத்தினார். வெறும் கையில் திருநீறு வரவைப்பது, குளிர்பானத்தைக் காதுகள் வழியே குடிப்பது, பந்தை மறையவைப்பது என சுட்டி ஸ்டார்களையும் நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்தார். முடிவில், ''இது எல்லாம் தந்திரமே'' எனச் சொல்லி, அறிவியல் விளக்கங்களை அளித்தார்.

நிறைவாக, விழா நாயகர்களான சுட்டி ஸ்டார்ஸ்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. ஒருநாள் முழுவதும் அதே உற்சாகத்துடன் வளைய வந்த சுட்டிகள்,''பேனா பிடிப்போம் பின்னி எடுப்போம்'' என அரங்கம் அதிர முழங்கினார்கள்.

  பெற்றோருக்கும்...

சுட்டி ஸ்டார்கள், தங்கள் பெயர், ஆசைகள், எண்ணங்களை 'கொலாஜ்’ மூலம் வெளிப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில், பெற்றோர்களை வேறு ஒரு அறையில் சந்தித்தார் செந்தில்குமார். ''இன்னும் சற்று நேரத்தில் உங்கள் பிள்ளைகளின் கனவுகள், ஆசைகள் என்ன என்பதை அங்கே பார்க்கப்போகிறோம். அதே நேரம், உங்கள் பிள்ளைகள் பற்றி உங்களுக்கும் நிறைய கனவுகள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதில் எது சரி... அதற்கான அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் எனப் பார்ப்போம்'' என்றார்.

கடைசியா எப்போ சிந்திச்சீங்க ?

பிள்ளைகள் அடம்பிடிக்கிறார்கள், எதிர்த்துப் பேசுகிறார்கள் எனக் கோபம்கொள்ளாமால், அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் உள்ள வேலைவாய்ப்புகள், அதற்குத் தயார்படுத்தும் விதம், அவர்களின் ஆசைகளுக்கும் கற்பனைகளுக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் பற்றியும் விவாதித்தார்கள்.