Published:Updated:

பள்ளி எங்கும் தாத்தா, பாட்டிகள்!

மா.நந்தினி செ.சிவபாலன்

பள்ளி எங்கும் தாத்தா, பாட்டிகள்!

மா.நந்தினி செ.சிவபாலன்

Published:Updated:
##~##

''இன்றைக்கு முழுக்க எங்க ஸ்கூல்ல தாத்தா, பாட்டிகளா இருப்பாங்க. ரொம்ப ஜாலியா இருக்கும்'' என்று உற்சாகத்துடன் சொல்லியவாறு, தன் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு சென்றாள், ஆறாம் வகுப்பு சிவதாரிணி.

‘Grand parents day’என்னும் அறிவிப்புடன் தோரணங்களால் வரவேற்றது சீர்காழி, சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிக் பள்ளி. உள்ளே எந்தப் பக்கம் திரும்பினாலும் தாத்தா, பாட்டிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஹாய் அனாஸ்... இதுதான் என் தாத்தா. உன்னோட தாத்தா, பாட்டி எங்கே?'' என்று ஒரு சிறுவன் கேட்க, ''அதோ இருக்காங்க பாரு. வந்த கொஞ்ச நேரத்திலேயே என் பாட்டியும் பிரியதர்ஷிணி பாட்டியும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க'' என்றான் அனாஸ்.

பள்ளி முழுக்க இப்படியான உற்சாகப் பேச்சுகள். பள்ளியின் முதல்வர் தங்கவேலு,  ''இது, எல்லாப் பள்ளிகளிலும் கொண்டாட வேண்டிய விழா. கூட்டுக் குடும்பம் என்பது குறைந்துகொண்டே வரும் இந்தக் காலத்தில் தாத்தா, பாட்டியின் முக்கியத்துவத்தைச் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்குச் சொல்லணும்'' என்றார்.

பள்ளி எங்கும் தாத்தா, பாட்டிகள்!

பாட்டிகளுக்கான கோலப் போட்டியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று நிபந்தனை. பாட்டிகள் சுறுசுறுப்புடன் புள்ளிகள் வைத்துக் கோலமிட, அவர்களுக்கு உதவினார்கள் பேத்திகள். ''பாட்டி, மஞ்சள் கலருக்குப் பக்கத்தில் சிவப்பு இருந்தா, இன்னும் எடுப்பாக இருக்கும்'' என்று தனது பாட்டிக்கு டிப்ஸ் கொடுத்தாள், ஐந்தாம் வகுப்பு பவித்ரா.

அடுத்து, தாத்தாக்களுக்கான போட்டி.  கரும்பலகையில் வரையப்பட்ட யானை உருவத்துக்கு, கண்ணைக் கட்டிக்கொண்டு சரியாக வால் வரைய வேண்டும். பேரன், பேத்தி களின் உற்சாகக் கூச்சலுடன் தாத்தாக்கள் களத்தில் இறங்கினார்கள். சற்று நேரத்தில், யானையின் உடம்பில் நிறைய வால்கள்.

பாட்டிகளின் கோலாட்டம், தாத்தாக்களின் மலரும் நினைவுக் கதைகள் என கலகலப்புடன் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. உணவு இடைவேளைக்குப் பிறகு,  தாத்தா, பாட்டிகளுக்குப் பாத பூஜை செய்து, தொட்டு வணங்கினர் பேரன், பேத்திகள். அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்த தாத்தா பாட்டிகளின் முக மலர்ச்சியினை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

பள்ளி எங்கும் தாத்தா, பாட்டிகள்!

இறுதியாக, பரிசுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. ஐந்தாம் வகுப்பு கீர்த்திகாவின் பாட்டிக்கு கோலப் போட்டியில் முதல் பரிசு. பாட்டியின் கன்னத்தைக் கிள்ளி, ''வெரிகுட்'' என்று சொன்ன தாத்தாவிடம், ''எல்லாம் நான் கொடுத்த டிப்ஸ்தான்'' என்று பெருமைப்பட்டாள் கீர்த்திகா.

அந்த அழகான தருணங்களில் இருந்து பிரிய மனம் இல்லாமல் கிளம்பினார்கள்.