Published:Updated:

சடையாண்டி வந்தால் சகலமும் அதிரும்ல!

உ.சிவராமன் படங்கள் : வீ.சக்தி அருணகிரி

சடையாண்டி வந்தால் சகலமும் அதிரும்ல!

உ.சிவராமன் படங்கள் : வீ.சக்தி அருணகிரி

Published:Updated:

கபடிக் குட்டிகள்

##~##

நாலு வயதுக் குழந்தையா  இருந்தப்ப நாம என்ன பண்ணினோம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்கூல்ல எல்கேஜி படிச்சுட்டு வீட்டுக்கு வந்ததும் டிவி பார்த்தோம். வீட்டுக்குள்ளேயே விளையாடினோம். ஆனா, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி  அருகே உள்ள அணைக்காரப்பட்டி குட்டிப் பசங்க, கபடியில் பின்னி எடுக்கிறாங்க. அந்தக் கபடிக் கிராமத்தில்...

பசங்களை வரிசையாக் கூட்டிட்டுப்போனார் ஹேமன்ஸ்ரீ என்ற சுட்டி. மூணு வயதில் இருந்து ஆறு வயது வரைக்கும் இருக்கிற 'சடையாண்டி’ என்கிற அந்த அணிக்கு அவர்தான் கேப்டன். மைதானத்துக்குப் போனதும் மாஸ்டருக்கு வணக்கம் வெச்சாங்க. சூரியனை வணங்கிட்டு, மைதானத்தில் தண்ணி தெளிச்சு, கோடுகளைப் போட ஆரம்பிச்சாங்க. தண்ணி தெளிக்கலைனா, விளையாடுறப்ப கீழே விழுந்து அடிபடும்னு சொன்னார் குட்டி கேப்டன்.

மாஸ்டர் சிங்கம் (பேரே அதுதாங்க), 'சின்ன வயசுல இருந்தே கபடியும் கிரிக்கெட்டும் எனக்கு உசுரு. கபடி ஆர்வம் அதிகமாகி, வெளியூர்கள்ல மற்ற அணி சார்பா விளையாடுவேன். நம்மளும் ஒரு டீம் ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சு. பசங்களுக்கு கபடி கத்துக்கொடுக்க ஆரம்பிச்சேன். இப்ப 50 பசங்க கபடி விளையாடுறாங்க.  ஆறு வயசு வரைக்கும் இருக்கிற பசங்க, சடையாண்டி (ஊர் காவல் தெய்வம்) டீம். ஆறுல இருந்து 11 வயசு வரைக்கும் உள்ள பசங்க, இளம் மான்கள் டீம். 11-ல இருந்து 16 வயசு வரைக்கும் இளம் பறவைகள். 22 வயசு வரை சடையாண்டி பாய்ஸ்'' என்றார்.

சடையாண்டி வந்தால் சகலமும் அதிரும்ல!

அப்போது, இளம் மான்கள் டீம் வந்து சேர்ந்துச்சு. விளையாட்டு ஆரம்பிச்சது. சும்மா சொல்லக் கூடாது. 'போனஸ் குளோஸ் பண்ணி ஆடு, ஆங்கிள் விடாத, முட்டித் தூக்குடா அவனை' எனச் சடையாண்டி டீம் பசங்க, இளம் மான்களை ரவுண்டு கட்டினாங்க. மைதானத்தில் புழுதி பறந்தது. அவுட் ஆவது, எதிராளியை முட்டித் தூக்குவது, கீழே விழுவது என எது நடந்தாலும் அசராமல், ரெண்டு டீமும் விளையாடி முடிக்க, ரெண்டு மணி நேரமானது.

இளம் பறவைகளின் கேப்டன் அபூர்வன், ''45 கிலோ எடை மேட்ச்ல நாங்க ரெண்டு முறை முதல் பரிசு  ஜெயிச்சோம். இன்னும் நல்லா விளையாடி, எங்க அண்ணனுங்க லெவலுக்கு வருவோம்'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய சிங்கம், ''ஆரம்பத்தில் சின்னப் பசங்களை விளையாடவைக்கிறது பெரிய சவாலா இருந்துச்சு. அடிபட்டு அழறப்ப கஷ்டமா இருக்கும். ஆனால், கொஞ்ச நாளில் அவங்களே ஆர்வமா வந்து கலந்துக்கிட்டாங்க'' என்றார்.

சும்மா, சின்னப் பசங்களை வெச்சு விளையாடுறாங்கன்னு சாதாரணமா நினைச்சுடாதீங்க. வெளியூர்களில் நடக்கும் போட்டிகளுக்குக் கூட்டிட்டுப் போய், சீனியர்கள் விளையாடுறதைப் பார்க்கிறது, டீம் பெயர் எழுதின டி ஷர்ட் போட்டுக்கிறது, பள்ளிக்கூட நாள்ல மாலையிலும் லீவு நாள்ல காலையிலும்னு பயிற்சி பக்காவாக நடக்குது.

சடையாண்டி வந்தால் சகலமும் அதிரும்ல!

''விளையாட்டு, விளையாட்டுனு படிப்பில் கோட்டை விட்டுடக் கூடாதே! என்னை நம்பி அனுப்பும் பெத்தவங்களுக்கு சங்கடம் வந்துடக் கூடாது. அதனால், பயிற்சி முடிஞ்சதும் எல்லாரும் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு, என் வீட்டுக்கு வந்துடணும். நான்   அவங்களுக்குப் பாடம் சொல்லித் தருவேன்'' என்கிறார் சிங்கம்.

பக்கத்தில் எங்கே போட்டி நடந்தாலும் பசங்களைக் கூட்டிட்டுப்போகிறார். பிஸ்கட், சாப்பாடு எல்லாம் சொந்த செலவிலேயே பாத்துக்கொள்கிறார். இவர் இல்லாத நேரத்தில் சடையாண்டி சீனியர் டீம்

சடையாண்டி வந்தால் சகலமும் அதிரும்ல!

கேப்டன், ரணதீபன்  பயிற்சி கொடுக்கிறார்.

ரணதீபன் கூறும்போது, 'நான் 15 வருஷமா கபடி விளையாடுறேன். மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்கேன். இதுல கிடைக்கிற எனர்ஜி, வலிமை வேற எந்தப் பயிற்சியிலயும் கிடைக்காது. நல்ல மூச்சுப் பயிற்சி, பசங்களுக்குள்ளே குழு ஒற்றுமை, உதவும் குணம் எல்லாம் கபடி விளையாட்டில் கிடைக்குது. சமீபத்தில், பக்கத்து ஊரில் நடந்த கபடிப்  போட்டியில நம்ம சடையாண்டி டீம் 1,250 ரூபா ஜெயிச்சுட்டு வந்தாங்க'' என்றார்.

''அந்தப் போட்டியைப் பார்க்க டிஎஸ்பி அங்கிள் வந்திருந்தார். 'ரொம்ப நல்லா விளையாடுறீங்க’ன்னு பாராட்டினார்'' என்கிற 'சடையாண்டி இளம் பாய்ஸ்’ கேப்டன் ஹேமன்ஸ்ரீ தொடர்ந்து பேசினார்.

'' 'இந்தப் பொடிப் பையன் கேப்டனா?’னு நினைச்சுடாதீங்க. இங்கே இருக்கிற பசங்க எல்லோரையும் பொறுப்பாக் கூட்டிட்டு வர்றது, வார்ம் அப் சொல்லித் தர்றது, பிரே பண்றது, கெஸ்ட் வந்தா, வீரர்களை அறிமுகப்படுத்துறது எல்லாமே நான்தான். கிரவுண்டுக்குள்ளே வந்துட்டா, கேப்டன் நான் மட்டும்தான் பேசுவேன். எங்களை யாராச்சும் கிண்டல் பண்ணா, அவுங்களை கூப்பிட்டு எங்ககூட விளையாடச் சொல்வோம். விளையாட்டுனா அடிபடத்தான் செய்யும், அதெல்லாம் பார்த்தா ஜெயிக்க முடியுமா?'' என்றார்.

விளையாட்டைப் போலவே பேச்சும் செமத்தியா இருந்துச்சு. ''நீங்க கலக்குங்க குட்டி கேப்டன்'' எனச் சொல்லிட்டுக் கிளம்பினோம்.