தமிழகத்தில் தற்போது ஒன்பதாம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (CCE - Continuous and Comprehensive Evaluation) நடைமுறையில் உள்ளது. இந்த மதிப்பீட்டு முறை, மாணவர்களின் கல்விசார் செயல்பாடுகளுடன் கல்வி இணைச் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது.

கல்வி இணைச் செயல்பாடுகள் (Co-Scholastic Activities) நான்கு தலைப்புகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படுகின்றன. வாழ்க்கைத் திறன்கள் (Life skills) மனப்பான்மை மற்றும் மதிப்புக் கல்வி (Attitudes and values) மற்றும் பாட இணைச் செயல்பாடுகள் (Co-curricular activities) ஆகியன. இவற்றைப் பற்றியும், இவற்றின் கீழ் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்த இணைப்பில் முழுமையாகப் பார்ப்போம்.

நம்மை நாம் அறிவோம்!

நம் உடல், உள்ளம், உணர்வு ஆகியவற்றை நலமாக வைத்துக்கொள்ள நம்மை நாம் அறிவது அவசியம்.

மாணவர்களிடத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான குணங்கள் கலந்தே இருக்கும். எதிர்மறையான குணங்களை நேர்மறையாக மாற்றிடத் தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்பு, திட்டமிடுதல் அவசியம். சுய கட்டுப்பாடு, தன்னை அறிதல் மற்றும் கூரிய சிந்தனை மூலம் ஆரோக்கியமான குணநலன்கள் உருவாகும்.

மாணவர்களின் நிறைகளையும் குறைகளையும் அடையாளம் கண்டு, ஆசிரியர் அவற்றை எடுத்துச் சொல்லலாம். அவர்களுடைய குறைகளை, நிறைகளாக மாற்ற என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று கேட்டு அறிந்து ஊக்கப்படுத்தலாம்.

வகுப்பறைச் சூழலில் மாணவர்கள் எடுக்கும் முடிவினை உற்று நோக்கி, அது பற்றி உரையாடலாம். இது, எந்த ஒரு சூழலிலும் அடுத்தவர் பற்றிய தம் கருத்தையும் எண்ணங்களையும் தைரியமாகவும் தெளிவாகவும் சொல்லும் பண்பை வளர்க்க உதவும்.

ஒருவர், தன்னைத் தொடும் நோக்கத்தை அறிந்துகொள்ளச் செய்தல்.

தேவையற்ற செயல்களில் தன்னைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்.

இணக்கமான நண்பர்களையும் அவர்களின் குணங்களையும் கூறச் செய்தல்.

ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்ள சூழ்நிலைக் கதைகளை உருவாக்கலாம். கதையின் முடிவைக் கூறாமல், மாணவர்களைக் கூறச் செய்யலாம். அதன் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.

- மூ.சங்கீதா,
ஊ.ஒ.தொ.பள்ளி, புதுப்பேட்டை,
மேற்கு ஆரணி.

வாழ்க்கைத் திறன்கள்!

'வாழ்க்கைத் திறன்கள்’ என்னும் கல்வி இணைச் செயல்பாடுகளில் ,நான்கு முக்கியமான பகுதிகள் உள்ளன.

1. தன்னை அறிதல்.

2. துணிந்து உரைத்தல் மற்றும் மறுக்கும் திறன்.

3. பகுத்தறியும் திறன்.

4. சிறப்பாகத் தொடர்புகொள்ளும் திறன்.

இந்தத் திறன்களை மாணவர்களிடையே அளவிட்டு, மதிப்பீடு செய்வதும், இந்தத் திறன்கள் அனைத்தையும் சிறப்பாக மாணவர்களிடையே வளர்ப்பதும் ஒவ்வோர் ஆசிரியரின் கடமை.

தன்னை அறிதல்: ஒரு மாணவர், தன்னைப் பற்றிய விழிப்பு உணர்வைப் பெற்றிருத்தல் அவசியம். தன் நிறை குறைகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை அவர்கள் அறிந்திருத்தல் அவசியம்.

துணிந்து உரைத்தல் மற்றும் மறுக்கும் திறன்: மாணவர்கள், தாங்கள் சொல்ல விழையும் கருத்துக்கள் சரியானது என்ற தெளிவுடன் இருப்பின், அதைத் துணிவுடன் எடுத்துக் கூற வேண்டும். மற்றவர் கூறும் கருத்துகளை ஊக்குவித்தல் மற்றும் தவறான கருத்தை மறுக்கும் திறனையும் வளர்க்க வேண்டும்.

பகுத்தறியும் திறன்: சமூகத்தில் நல்லவர்களையும் தீயவர்களையும் தரம் பிரித்து, அதற்கு ஏற்றபடி நடந்துகொள்ளுதல் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்.

சிறப்பாகத் தொடர்புகொள்ளும் திறன்: 'மனிதன் ஒரு சமூக விலங்கு’ என்பர். ஆகவே, சமூகத்தில் மற்றவருடன் சுமுகமாகப் பழக, சில அடிப்படைப் பண்புகளை வளர்த்துக்கொள்ளுதல் மாணவர்களுக்கு அவசியமான ஒன்று.

இவற்றுடன், குழுச் செயல்பாடு, கணினி அறிவு ஆகியவற்றை வளர்த்தலும் ஆசிரியர்களின் முக்கிய கடமைகள்.

D.விஜயலட்சுமி,
அ.ஆ.மே.நி.பள்ளி,
கண்ணமங்கலம்.

குழு மனப்பான்மையை வளர்த்தல்!

போட்டிகள் நிரம்பிய உலகில், மாணவர்கள் கற்க வேண்டிய முதன்மையான இணைச் செயல்பாடு, குழுச் செயல்பாடு.

இது, மற்றவர்களோடு பழகுவதற்கு வாய்ப்பையும் அடுத்தவர் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கும் பண்பையும் உருவாக்கும். நேர்மறைச் சிந்தனைகளைத் தூண்டும். குழுத் தலைவனாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மாணவன், தன் குழுவில் உள்ள பிற மாணவர்களின் திறனுக்கு ஏற்ப பணிகளைப் பிரித்துக்கொடுக்கும் திறன் பெறுகிறான். படிப்பில் பின்தங்கிய மாணவன் ஒருவன், குழுவில் இணையும்போது தாழ்வு மனப்பான்மை மறையும். தன்னம்பிக்கை உடையவனாகச் செயல்பட்டு, பயமின்றி தன் கருத்துக்களை எடுத்துரைப்பான். கற்கும் திறனும் அதிகரிக்கும். நாளடைவில் அவனும் குழுத் தலைவனாகச் செயல்படும் நிலைக்கு உயர்வான்.

மாணவர்கள் இணைந்து செயல்படுவதால், வகுப்பறைச் சூழல் இனிமையுடையதாக இருக்கும். மன இறுக்கம் இன்றி, மகிழ்வுடன் கற்பதற்கு குழுச் செயல்பாடு உதவியாக இருக்கும்.

என் வகுப்பறையில், எளிய செயல் முறைகளைக் குழுக்கள் அமைத்துச் செயல்பட உதவினேன். விளைவு, மாணவர்களே வகுப்பறை பணிகளைப் பிரித்துக்கொண்டு, செயல்படத் தொடங்கிவிட்டனர். காலை வழிபாட்டுக் கூட்டம் நடக்கும். செய்தி, திருக்குறள், அறிவியல் தகவல், பழமொழி என ஒவ்வொரு நாளும் வாசிப்பவர்கள் யார் யார் என்ற பொறுப்பை ஒருவன் பார்த்துக்கொள்கிறான். வாரம் ஒரு குழு, வகுப்பறையைச் சுத்தம் செய்து பராமரிக்கும்.

குழுப் பணியினை ஆசிரியர், மாணவர்களின் தலைமைப் பண்பு, பிறர் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் பண்பு, நேர்மறைக் கருத்தோடு இயைந்துபோகும் பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடலாம்.

- க.சரவணன்,
டாக்டர் டி.திருஞானம்
தொடக்கப் பள்ளி,
கீழச்சந்தைப்பேட்டை, மதுரை.

தனித்திறனை வளர்ப்போம்!

சமச்சீர்க் கல்வியின் அடிப்படை, கற்பவர்களின் தனித்திறன்களைக் கண்டுபிடித்து வளர்ப்பது.

வகுப்பில் சில மாணவர்கள் மதிப்பெண் எடுப்பதில் சிரமப்படுவர். ஆனால், வகுப்பைத் தூய்மையாகவும், அழகாக அலங்கரிப்பவராகவும் இருப்பர். தாள்களை வெவ்வேறு வடிவங்களில் வெட்டி உருவங்களை உருவாக்குபவராகவும் இருப்பர். இவையும் திறமையே.

மாணவர்களை மதிப்பெண் மற்றும் ஞாபக சக்தியை மட்டும் வைத்து ஆசிரியர் மதிப்பிடக் கூடாது. சிறந்த கதை சொல்லி, ஓவியம் வரைபவர், ஒருங்கிணைப்பவர், பாட்டுப் பாடுபவர், தொகுப்பாளர், நடனம் ஆடுபவர், எழுத்தாளர், தூய்மையாக்குபவர், கற்பிப்பவர், திட்டமிடுபவர், செயலாற்றுபவர், அறிக்கை தயாரிப்பவர், குழு மேலாண்மை செய்பவர் எனப் பல வகையில் மாணவர்களின் திறமைகளை ஆசிரியர் கண்டுபிடிக்க வேண்டும்.

குழந்தைகள், செடி போன்றவர்கள். ஒவ்வொரு செடிக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதை ஆசிரியர் இனம் கண்டு, வளர்க்க வேண்டும். ஒரு மாணவரின் தனித்திறமைகளை மற்ற மாணவர்கள் சொல்வதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். அல்லது மாணவர் ஒவ்வொருவரின் சிறப்பையும் நன்கு கவனித்து, ஆசிரியர் ஊக்குவிக்கலாம்.

விடாமுயற்சி, ஆர்வம், கூரியசிந்தனை, படைப்புத்திறன், மன எழுச்சியைக் கட்டுப்படுத்தும் திறன், ஊக்கம் போன்ற பல திறன்களைக் கண்டறிந்து, அவர்களை முன்னேற்ற வேண்டும். எளியதாக இருந்தாலும் தெரிந்ததாக இருந்தாலும் அவர்களின் திறனை மாணவர்களின் நடுவே பாராட்ட வேண்டும்.

- ரா.தாமோதரன்,
அ.மே.நி.பள்ளி,
மெலட்டூர்.

பாராட்டும் பண்பை வளர்ப்போம்!

பள்ளிக்கூடம் என்பது பாடக் கல்வியை மட்டுமின்றி, சக மாணவர்களுடன் சேர்ந்து பயிலவும் பகிர்ந்து வாழவும் விட்டுக்கொடுக்கவும் கற்றுத்தருகிறது.

ஆசிரியர், வகுப்பைக் குழுவாகப் பிரிக்கிறார். குழுவுடன் இணைந்து செயல்பாட்டைச் செய்யும்போது, அதில் தன்னுடன் முயற்சி செய்யும் ஒரு மாணவனுக்கு, பிறர் விட்டுக்கொடுக்கும் பண்பு வளர்கிறது.

தான் படித்ததைத் தன் குழு மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்து எழுதும்போது, மேலும் அதிக மதிப்பெண் பெறுவதுடன், தான் செய்த சிறு உதவியால் மதிப்பெண் பெற்ற தன் தோழன், தோழியின் சந்தோஷத்தையும் பகிர்ந்துகொள்ள முடியும்.

குழுச் செயல்பாட்டின்போதும், தனியாகப் பழகும்போதும் மாணவர்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தன்னுடன் படிக்கும் மாணவர்கள், சிறு தவறு செய்தால், உடனே கேலி செய்து, வெறுத்து ஒதுக்காதீர்கள். தட்டிக்கொடுத்து, விட்டுக்கொடுங்கள். இதனால், அன்பான, உண்மையான நட்பைப் பெறலாம்.

நண்பர்களின் சின்னச் சின்ன விஷயங்களையும் பாராட்டுதல் நல்ல பழக்கம் ஆகும்.

ஆசிரியர்கள், மாணவர்களின் ஒவ்வொரு நற்செயலையும் உற்சாகப்படுத்த மறக்கக் கூடாது. ஆசிரியர் பாராட்டுவது மாணவர்களின் மனதில் பதியும். அவர்களும் குழுச் செயல்பாட்டின்போது, தங்கள் நண்பர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவர்.

ஒரு சின்ன பாராட்டு மேஜிக் போல பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.

- என்.கிருஷ்ணவேணி,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
நல்லம்பாக்கம்.

மனப்பான்மைகளும் மதிப்புகளும்!

மனப்பான்மைகளும் மதிப்புகளும் ஒவ்வொரு தனி நபரைப் பொருத்தும் மாறுபடும். பெற்றோருக்குப் பிடிக்கும் ஒரு விஷயம், பிள்ளைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். இதை, ஆசிரியர் நன்கு உணர வேண்டும். பள்ளிச் சூழலையும் மாணவர்களின் மனப்போக்கையும் கருத்தில்கொண்டு, அதற்கேற்ப இரண்டு தலைமுறையினரையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுவது ஆசிரியரின் கடமை.

பள்ளி அளவில் சில பண்புகள் அளவிடப்பட்டு அதற்குரிய கிரேடு வழங்கப்படுகின்றன. அந்தப் பண்புகளில் சில...

வகுப்பறையில் ஒழுக்கம்.

சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வருதல். பள்ளியின் சட்டத்திட்டங்களை மதித்தல்.

தேசிய ஒருமைப்பாட்டுச் சிந்தனை.

தேசியக் கொடியை வணங்கும் முறையை அறிந்திருத்தல், தேசியச் சின்னங்களை மதித்தல், தேசிய கீதத்தைத் தவறின்றி சரியான கால அளவில் பாடுதல்.

பள்ளியின் தூய்மை பேணல்; பள்ளி உடைமைகளைப் பாதுகாத்தல்.

ஆசிரியர்களுக்கு மதிப்பு அளித்தல்.

சக மாணவர்களிடம் நடந்துகொள்ளும் விதம்; குழுச் செயல்பாடு.

சுய மரியாதை; அடுத்தவர் உணர்வுக்கு மதிப்பளித்தல்.

பெரியோரைப் பேணுதல்.

இந்தப் பண்புகள் பற்றிய தெளிவையும் அவற்றை வளர்த்துக்கொள்வதன் அவசியம் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

D.விஜயலட்சுமி,
அ.ஆ.மே.நி.பள்ளி,
கண்ணமங்கலம்.

தொடர்புகொள்ளும் திறன் வளர்த்தல்!

நம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்த, தொடர்புகொள்ளும் திறன் மிகவும் அவசியம். மாணவர்களிடம் தொடர்புகொள்ளும் திறன்களை வளர்க்க சில வழிமுறைகள்...

பிறர் கூறும் கருத்துகளை நன்கு கவனித்தல்.

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுதல்.

சொல்லும் கருத்தில் தெளிவாக இருத்தல்.

உரையாடும்போது பிறர் கண்களைப் பார்த்து, தன்னம்பிக்கையோடு பேசுதல். இதனால், கவனம் சிதறாமல் இருக்கும்.

உரையாடும்போது முக பாவனைகள் மற்றும் உடல் அசைவுகள் அவசியம். குரல், ஏற்றத்தாழ்வுடன் சரியான வார்த்தைகளைத் தெளிவான உச்சரிப்புடன் பயன்படுத்த வேண்டும்.

தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுதல்.

பிறரின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்தல்.

புன்னகையான முகம், தொடர்புகொள்ளும் திறனின் சிறந்த ஆயுதம்.

தவிர்க்க வேண்டியவை:

அச்சம், கோபம், கூச்சம்.

பிறர் கூறும் கருத்தையோ அல்லது உடல் தோற்றத்தைப் பழித்தோ பேசக் கூடாது. இடைமறித்துப் பேசுவதையும் தவிர்க்கவும்.

தற்புகழ்ச்சி வேண்டாம்.

தவறான நடத்தைகளைத் தவிர்த்தல்.

- ஜி.கிறிஸ்டோபர்,
மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி,
கோயம்புத்தூர்.

இலக்கியமும் அறிவியலும்!

கல்வி இணைச் செயல்பாடுகளில் ஒரு பகுதியாக, தமிழ் இலக்கிய மன்றத்தை மாற்றி, மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இலக்கியம்: இலக்கிய மன்றத்தின் மூலம், சம கால இலக்கிய வெளியீடுகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். நூல்களை வாசிக்கச் செய்து, விமர்சனம் செய்யவைக்கலாம். சிறந்த விமர்சனங்களுக்கு மதிப்பெண் வழங்கலாம். மாணவர்களின் படைப்புகளைக்கொண்டு, கையெழுத்து பத்திரிகை நடத்த பயிற்சி அளித்து அதற்கும் மதிப்பெண் வழங்கலாம்.

இசை: மாணவர்களுக்கு இசைக்கருவி, வாய்ப்பாட்டு ஆகியவற்றிலும் பயிற்சி அளித்து, மதிப்பிடலாம். தமிழ் இசைப் பாடல்களைப் பாடக் கேட்டு மதிப்பிடலாம்.

நாடகம்: நாடகங்களை நிகழ்த்த மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். சிறப்பாக நடிப்பவர்களை ஊக்கப்படுத்தலாம்.

அறிவியல் மன்றம்: அறிவியல் மன்றம் மூலம் மாணவர்களுக்கு அடிப்படை அறிவியலை எளிய பரிசோதனைகள் மூலம் அறியச் செய்யலாம். அன்றாட வாழ்வில் பயன்படுத்தி, வீசி எறியும் பொருள்களைக் கொண்டு, எளிய சோதனைகளை மாணவர்களைச் செய்யவைக்கலாம். இது, மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தினை அதிகரிக்கச் செய்யும். எளிய அறிவியல் பரிசோதனைகள் உள்ள நூல்களை அறிமுகப் படுத்தலாம். தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை உருவாக்கலாம். மாணவர்களின் அறிவியல் ஆர்வத்துக்கு ஏற்ப, மதிப்பீடு அளிக்கலாம்.

- இரத்தின புகழேந்தி,
அரசு உயர்நிலைப் பள்ளி,
மன்னம்பாடி.

விழிப்பு உணர்வுப் படைகள்!

பள்ளிப் படிப்போடு, வாழும் பூமியைப் பற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் தேசிய பசுமைப்படை, செஞ்சுருள் சங்கம் ஆகியவற்றைப் பற்றி கூறி, இணைந்து செயல்பட வைக்கலாம்.

தேசிய பசுமைப்படை

பிளாஸ்டிக் பொருட்கள், காடுகள் அழிப்பு, தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவற்றால் மண்ணும் விண்ணும் மாசு அடைந்துள்ளன. இதனால், ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து, புவியின் வெப்பம் அதிகரிப்பதைப் பற்றி, விழிப்பு உணர்வு ஏற்படுத்தல். பிளாஸ்டிக்கைத் தவிர்த்து, காகிதப் பொருட்களைப் பயன்படுத்துதல், இயற்கை உரங்களைப் பயன்படுத்தல், மரக்கன்றுகளை நடுதல், உலக ஓசோன் தினம் போன்ற விழிப்பு உணர்வு தினங்களைக் கொண்டாடுதல் உள்ளிட்டவற்றைத் தேசிய பசுமைப்படை மாணவர்கள் செய்துவருகின்றார்கள்.

செஞ்சுருள் சங்கம்

தனிமனித ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு விழிப்பு உணர்வை மாணவர்களும் மற்றவர்களும் பெறும் வகையில் பள்ளிகளில் அமைக்கப்பட்டதுதான் செஞ்சுருள் சங்கம். இந்தச் சங்கம், எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.ஐ.வி., எத்தகைய வழிகளில் தொற்றக்கூடும் என்பதை அறிந்து, எச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் வாழ்வதற்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துகிறது. மேலும், எச்.ஐ.வி .தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைப் புறக்கணிக்காமல், எவ்வாறு ஆதரவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத்தருகிறது.

மாணவர்கள், இந்தப் பணிக்காக விழிப்பு உணர்வு ஊர்வலங்கள், கண்காட்சி, பேச்சு, கட்டுரை, கவிதை, வாசகப் போட்டிகள் நடத்தலாம். மாணவர்களின் பங்கேற்பு, ஆர்வம், ஈடுபாடு ஆகிவற்றை ஆசிரியர்கள் மதிப்பிடலாம்.

- த.சிங்காரவேலன்,
தருமபுரி.

சேவை புரிவோம்!

மாணவர்களுக்கு, சேவை மனப்பான்மையை வளர்க்க உதவும் படைகளில் அவர்களை ஈடுபடச் செய்தல் அவசியம். கல்வி இணைச் செயல்பாடு மதிப்பிடலுக்கு இது மிகவும் உதவும்.

சாரணர் படை: மாணவ, மாணவிகளுக்கு நல்ல பண்பு, நல்லொழுக்கம், பெரியோரை மதித்தல் ஆகியவற்றைக் கற்றுத்தருவது சாரணர் படை.

சேர்வதற்கான தகுதிகள்: சாரண உறுதிமொழி, சாரணச் சட்டம், சாரணக் குறிக்கோள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பின்பற்ற வேண்டியவை:சாரண வணக்கம், சாரணச் சீருடை அணிதல், தேசியக் கொடி மற்றும் சாரணக் கொடிகளுக்கு மரியாதை செலுத்துதல், இடது கை குலுக்கல்.

சேவைகள்: ஆபத்து நேரத்தில் முதலுதவி, பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க உதவுதல்.

பிரிவுகள்: குருளையர், சாரணர், திரிசாரணர் ஆகியவை மாணவர்களுக்கு. நீலப்பறவை, சாரணியர், திரி சாரணியர் ஆகிய பிரிவுகள், மாணவிகளுக்கு.

இளம் செஞ்சிலுவைச் சங்கம்: மனிதநேயத்துக்குச் சிகரமாகச் செயல்படுகிறது செஞ்சிலுவைச் சங்கம். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் உதவி செய்யும் குணத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டு, பள்ளித் தலைமை ஆசிரியரின் மேற்பார்வையில் செயல்படுகிறது. இதில், முதலுதவிக்கான பயிற்சியும், ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம், உடல் தானம் போன்றவை குறித்த விழிப்பு உணர்வுப் பணிகளில் ஈடுபடுவர்.

இதில் ஏதேனும் ஒரு குழுவில் சேர்ந்து செயல்படும் மாணவர்களின் ஆர்வம், நடத்தை ஆகியவற்றைக் கொண்டு ஆசிரியர்கள் மதிப்பிடலாம்.

- த.சிங்காரவேலன்,
தருமபுரி

.பாதுகாப்பு... உயிர் காப்பு!

கல்வி இணைச் செயல்பாடுகளில் பாதுகாப்பு மிக அவசியமானது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

தேசியக் கொடி மண்ணில் கிடந்தால், அதை உரிய இடத்தில் சேர்த்தல், தேசிய கீதத்தை முறையாகப் பாடுதல், பள்ளிக்கூடப் பொருட்களைப் பாதுகாத்தல், நண்பர்களின் பொருட்களைப் பாதுகாத்தல் போன்றவற்றைக் பின்பற்ற வைக்க வேண்டும். பொதுச் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை, மாணவப் பருவத்திலேயே மனதில் பதியவைப்பது ஆசிரியரின் கடமை.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடங்களில் பூமியைப் பாதுகாத்தல், பிளாஸ்டிக்கைத் தவிர்த்தல், புவி வெப்பமயமாதலைத் தடுத்தல், சுத்தம் பேணுதல், புவி மாசுபடுதல், சாலைப் பாதுகாப்பு போன்றவற்றைப் பற்றிய செயல் பாடுகள் கொடுக்கப்பட்டிருப்பதே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இதனை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, வழிநடத்துதல் அவசியம். மாணவர்கள் தம் உடலைச் சுத்தமாக வைத்திருத்தலையும் வலியுறுத்த வேண்டும்.

ஸ்லோகன் போட்டி, வில்லுப்பாட்டு, நாடகம், விவாத மேடை, குறுக்கெழுத்துப் போட்டி உள்ளிட்டவைகள் மூலம் பாதுகாப்புப் பண்புகளை வளர்க்கலாம். சாலைப் பாதுகாப்பு வாரத்தில் (ஜனவரி முதல் வாரம்), சாலை விபத்துக் குறித்த சிறு நாடகங்களை நடிக்கச் செய்யலாம்.

தாய் மொழியைப் பாதுகாத்தலில் காட்டும் அக்கறை, பெண் குழந்தைகள் பாதுகாப்புக் குறித்த எண்ணம், குழந்தைத் தொழிலாளர் பற்றிய விழிப்பு உணர்வு, அதை எதிர்கொள்ளும் மனப்பாங்கு போன்றவற்றையும் கவனித்து, மதிப்பீடு செய்யலாம்.

D.ஹேமலதா,
அரசு பெண்கள் மே.நி. பள்ளி,
கே.வி.குப்பம். வேலூர் மா

.உடல்நலம் பேணுவோம்!

'சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்’ என்பது பழமொழி. மாணவர்கள், 'தம் உடல்நலம் பேணல் அவசியம்’ என்பதை உணர்த்த வேண்டும்.

இன்று பலருக்கு, இளம் வயதிலேயே ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் வந்துவிடுகின்றன. இதில் இருந்து தற்காத்துக்கொள்ள கடைப்பிடிக்க வேண்டியவை...

உணவு: நாம் உண்ணும் உணவு சத்துள்ளதாக, ஆரோக்கியமானதாக இருத்தல் அவசியம். இன்று நம்மைக் கவர்ந்து இழுக்கும் மேலை நாட்டு பீட்சா, பர்கர் மற்றும் பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் போன்றவை, பணம் கொடுத்து நோயை வாங்கவைக்கின்றன. காய்கறிகள், பழங்கள், கொட்டைகள் போன்றவையே சிறந்த உணவுகள்.

நல்ல பழக்கங்கள்: மாணவர்கள், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நமது உடலும் மனமும் இணைந்து சிந்திக்கவும், செயல்படவும் பழக வேண்டும். உடற்பயிற்சி இன்றியமையாதது. தூய காற்று, நன்னீர், நன்கு பசித்த பின் உணவும் உண்ண வேண்டும். நமது உடல் பாகங்களின் ஆரோக்கியத்துக்கு நமது முன்னோர்கள் அளித்த யோகாசனப் பயிற்சியைக் கற்பிக்க வேண்டும்.

6ம் வகுப்பு, 'எது பண்பாடு?’ பாடத்தில் வரும் செந்தில், எப்போதும் எச்சில் துப்பும் பழக்கத்தைக் கொண்டிருப்பதைச் சொல்லி, கண்ட இடங்களில் எச்சில் துப்புவதால் ஏற்படும் அசுத்தம் பற்றியும் நோய் பரவும் தன்மையையும் கூறச்செய்து, மதிப்பீடு அளிக்கலாம். மற்ற வகுப்புகளிலும் சுகாதாரம் தொடர்பான பாடங்களில் இருந்து செயல்பாட்டை நடத்தி, மதிப்பிடலாம்.

- சி.பி.லதா, ஊ.ஒ.தொ.பள்ளி,
சமத்துவபுரம்
மேலூர் ஒன்றியம்.

பண்பாடுகளை மதிப்போம்!

'வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே இந்தியாவின் பலம் என்பதை மாணவர்கள் மனத்தில் பதிவு செய்திட, இந்த இணைச் செயல்பாடு மிகவும் உதவியாக அமையும்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் ஒரு திட்டம் இருக்கிறது. ஒரு மாநில மாணவர், வேறு மாநில மாணவர் வீட்டுக்கு விருந்தினராகச் செல்ல வேண்டும். இரு மாணவர்களுக்கும் மொழி புரியாவிடினும், வேற்று மாநில மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், இரு மாநிலங்களின் பண்பாட்டு அடிப்படையிலான ஒற்றுமைகள் ஆகியவற்றை அறிவர். பிறர் பண்பாட்டில் என்ன தனித்தன்மைகள் உள்ளன என்பதையும் அறிந்து, 'மாற்றுப் பண்பாடுகளையும் மதிக்க வேண்டும்’ என்ற உணர்வை மாணவர்கள் பெறுவர்.

இதுபோல நாமும் இணைச் செயல்பாடு செய்யலாம். ஒரு பள்ளியில் படிக்கும் வெவ்வேறு ஊர் மாணவர்களிடையே இந்தப் பரிமாற்ற நிகழ்வை ஏற்படுத்தலாம். ஒரே ஊரைச் சேர்ந்த மாணவர்கள் எனில், வேறு தெரு மாணவரை விருந்தினராக அழைக்கலாம். தெருவுக்குத் தெருவும் சில பழக்க வழக்கம் வேறுபட்டு இருக்கும்.

பள்ளிக் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும்போது, வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பிரபலமான கலை நிகழ்ச்சிகளை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம், மாற்றுப் பண்பாட்டின் கலைகளை மாணவர்கள் அறிந்துகொள்வர். புது டெல்லில் உள்ள பண்பாட்டு வளங்களுக்கான பயிற்சி மையம், ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கி, வெவ்வேறு மாநில மொழிப் பாடல்களைக் கற்றுத்தருகிறது. அவற்றை ஒலிநாடாவாகவும் வழங்குகின்றனர். அந்தப் பாடல்களை மாணவர்களுக்குப் பயிற்றுவித்து, அவற்றையும் மதிப்பிடலாம்.

- இரத்தின புகழேந்தி,
அரசு உயர்நிலைப் பள்ளி,
மன்னம்பாடி

நமக்காகக் காத்திருக்கும் நண்பர்களது அறை!

நண்பர்களே... உங்களைப் புதிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்போகிறேன்.

இதோ... அந்த இடம் வந்துவிட்டது. உஷ்ஷ்ஷ்... சத்தம் வரக் கூடாது. யாரும் பேசக் கூடாது. அங்கே பாருங்கள்... மேசைகள் மீது எத்தனை எத்தனை நாளிதழ்கள், வார, மாத இதழ்கள். இது தவிர, உயரமான அலமாரிகளில் அணிவகுத்து நிற்கும் ஆயிரம் ஆயிரம் புத்தக நண்பர்கள்.

இலக்கியம், அறிவியல், வரலாறு, தத்துவம், அரசியல் என வகை வகையாக இருக்கிறார்கள் நமது புத்தக நண்பர்கள். இதில், சிறுவர்களுக்கான விசேஷ நண்பர்கள் உங்களுக்காகக் காத்திருப்பதைக் கவனியுங்கள்.

இது, உங்கள் நண்பனை நீங்கள் தேர்ந்தெடுக்கும் நேரம். உங்களுக்குப் பிடித்தமான புத்தக நண்பன் அருகில் செல்லுங்கள். முதுகு காட்டி நிற்கும் அவனது தோளை மெதுவாகத் தொடுங்கள். உங்களுக்காகவே காத்திருந்த அவன், சட்டென முகம் மலர்ந்து, உங்களோடு உரையாடத் தொடங்குவான். ஒரேயொரு நிபந்தனைதான். சத்தம் வராமல் அவனோடு பேச வேண்டும். ஏனெனில், அந்த அறையில் அவரவர், அவரவர் நண்பர்களோடு உரையாட வேண்டுமே!

புத்தகங்களைப் படிப்பதோடு நின்றுவிடக் கூடாது. அதைப் பற்றி நண்பர்களுடன் உரையாடுங்கள். ஒரு புத்தகத்தைக் குழுவாகப் படித்துவிட்டு, அதைப் பற்றி பேசுங்கள். பிறகு பாருங்கள்... உங்களுக்குப் புதிய இறக்கைகள் முளைக்கும். புதிய புதிய உலகத்துக்குள் பயணிப்பீர்கள். புத்தகம் என்பது கசப்பு மாத்திரை அல்ல, அது உருகி வழியும் சாக்லேட் மலை எனப் புரியும்.

ஆசிரியர்களுக்கு... நூலகத்தில் தான் படித்த புத்தகத்தை மற்ற மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவைத்து, மதிப்பீடு அளிக்கலாம்.

- லிபி.ஆரண்யா

நாட்டுப்புறக் கலையும் மரபு விளையாட்டும்!

கலை ஆர்வத்தை மாணவப் பருவத்திலேயே புகட்டினால், அதன் மீது ஆர்வமும் பழங்கலைகளைப் போற்றும் எண்ணமும் உருவாகும்.

நாட்டுப்புறக் கலை

மொழிப் பாடங்களுக்கு இடை இடையே, மாணவர்களை ஏதேனும் ஒரு பாடத்தைத் தெருக்கூத்தாகவோ அல்லது பொம்மலாட்டமாகவோ சித்திரித்து நடிக்கச் செய்யலாம். களிமண்ணில் பொம்மைகள் மற்றும் நகைகள் செய்தல், வீடு கட்டுதல், நாணய மாதிரிகள் செய்தல், விலங்கு செல், தாவர செல் மாதிரி எனக் களிமண் கொண்டு எல்லாப் பாடங் களுக்கும் மாதிரி தயாரிக்கச் சொல்லலாம்.

பனை ஓலையில் கைவினைப் பொருட்கள், காகிதத்தில் உருவங்கள் தயாரித்தல் (ளிக்ஷீவீரீணீனீவீ), வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல்களை எழுதிப் பாடுதல் எனப் பல்வேறு கலைகளையும் நடனத்தையும் வளர்க்கலாம்.

மரபு விளையாட்டுகள்!

பல்லாங்குழி, அஞ்சாங்கல்லு, ஏழாங்கல்லு, குச்சி விளையாட்டு, கில்லி, பாண்டி, நாடு பிடிக்கும் ஆட்டம், கிச்சுக் கிச்சு தாம்பூலம் ...என, நம் தமிழகத்தில் விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆசிரியர்கள், அந்த விளையாட்டு களை, மாணவர்களை விளையாடச் செய்து, பாடத்தோடு தொடர்பு படுத்தலாம்.

இவற்றில் ஈடுபடும் மாணவர்களின் கைத்திறம், நேர்த்தி, புதுமை, கலை நயம், படைப்பாற்றல், விளையாட்டின் விதிமுறை பின்பற்றல், பாடக் கருத்தை விளையாட்டின் மூலம் புரிந்துகொள்ளல், வெற்றி மற்றும் தோல்வியைச் சமமாகப் பாவித்தல் ஆகியவற்றைக்கொண்டு மதிப்பிடலாம்.

ஸ்ரீ.திலீப், அ.ஆ.மே.நி.பள்ளி,
சத்தியமங்கலம்,
விழுப்புரம்.

வணக்கம்.

தமிழகப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள சி.சி.இ முறைக்கு எஃப்.ஏ. பக்கங்கள் மூலம் சுட்டி விகடன் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தொடர்ந்து உறுதுணையாக இருப்பதை அறிவீர்கள்.

இந்த மதிப்பீட்டு முறையில், ஒவ்வொரு மாணவரின் திறமைக்கும் தனித்தன்மைக்கும் வகை செய்யும் 'கல்வி இணைச் செயல்பாடுகள்’ குறித்து, விரிவாக மாணவர்கள் அறியவும், ஆசிரியர்களின் புரிதல்களை மேலும் செம்மையாக்கும் விதத்தில் இந்த இணைப்பு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குட்டிப் புத்தகத்தின் உருவாக்கத்தில் அக்கறையும் அர்ப்பணிப்பும் மிக்க ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அடங்கி இருக்கிறது.

இங்கு ஒரு விஷயத்தை மாணவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எஃப். ஏ மற்றும் எஸ்.ஏ பகுதியை உள்ளடக்கிய கல்வி சார் செயல்பாடுகளில் ஒரு மாணவர் பெறும் கிரேடுக்கும், கல்வி இணைச் செயல்பாடுகளில் அந்த மாணவர் பெறும் கிரேடுக்கும் சம்பந்தம் இல்லை. அதாவது, ஒரு மாணவர் வழக்கமான தேர்வுகளில் அசத்த முடியாமல் போனாலும்கூட, கல்வி இணைச் செயல்பாடுகளில் 'ஏ’ கிரேடு பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த முடியும்.

கல்வி இணைச் செயல்பாடுகளை மாணவர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், ஆசிரியர்கள் கூடுதல் 'டிப்ஸ்' பெறவும் இந்தப் புத்தகம் மிகவும் உதவும்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.
அன்புடன்
ஆசிரியர்.