Published:Updated:

வலை உலா - தாவர ஆராய்ச்சிக்குத் தயாரா ?

சைபர்சிம்மன் ப.சரவணகுமார்

வலை உலா - தாவர ஆராய்ச்சிக்குத் தயாரா ?

சைபர்சிம்மன் ப.சரவணகுமார்

Published:Updated:

'இலைகள் ஏன் பச்சையாக இருக்கின்றன?’ என்று கேட்டால், 'இலைகளில் இருக்கும் குளோரோஃபில் எனப்படும் பச்சையம்தான் காரணம்’ என்று பளிச் பதில் சொல்வீர்கள்.

சரி, மரத்தில் இருந்து இலைகள் ஏன் உதிர்கின்றன? அப்படி உதிர்வதற்கு முன், அவை ஏன் மஞ்சளாகவும் பழுப்பாகவும் மாறுகின்றன? சில இலைகள் சிவப்பு நிறத்துக்கு மாறுவது ஏன்?

இதுபோன்ற சுவாரஸ்யமான கேள்விகள் மூலம் பதில்களைச் சொல்லி, சயின்ஸ் மேட் சிம்பிள் (http://www.sciencemadesimple.com/leaves.html)  இணையதளம் நம்மைக் கவர்ந்து இழுக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலை உலா - தாவர ஆராய்ச்சிக்குத் தயாரா ?

'இயல்பாகவே, சுட்டிகளுக்குத் தங்களைச் சுற்றியுள்ள உலகை அறிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். அந்த ஆர்வத்தினால், மனதில் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும்’ என்று குறிப்பிடும் இந்த இணையதளம், இத்தகைய கேள்விகளுக்கான பதில்களை, சின்னச் சின்ன சோதனைகள் மற்றும் கட்டுரைத் தலைப்புகள் மூலம் விளக்குகிறது.

குளிர்காலம் வருவதற்கு முன், மரங்களில் இருந்து இலைகள் உதிர்வதைப் பார்த்திருக்கலாம். ஏன் இந்த மாற்றம் என வியந்திருக்கலாம். இந்த மாற்றம் நிகழும் காலம், 'இலையுதிர் காலம்’ ஆகும். பருவ காலங்களில் இது மிகவும் முக்கியமானது. குளிர்காலம் வந்தால், நமக்கெல்லாம் நடுங்கும். மரங்களுக்கு நடுக்கம் வராது என்றாலும், வேறு விதமான பிரச்னை உண்டு. குளிர்காலத்தில் அவற்றுக்குத் தேவையான அளவு வெயில் இருக்காது.

வலை உலா - தாவர ஆராய்ச்சிக்குத் தயாரா ?

தாவரங்களுக்கு, இலைகளே உணவு உற்பத்தி ஆலைகள். பச்சையத்தைக் கொண்டு சூரிய ஒளி மூலம் உணவு தயாரிக்கின்றன. 'ஒளிச்சேர்க்கை’ (photosynthesis)  என்று சொல்லப்படும் இந்த முக்கிய நிகழ்வுக்குத் தண்ணீரும் தேவை. ஆனால், குளிர்காலத்தில் மரங்களுக்குத் தேவையான அளவு தண்ணீரும் கிடைக்காது. இந்தக் காலத்தில் இலைகள், வழக்கமான முறையில் உணவு உற்பத்தியில் ஈடுபட்டால், அதற்கேற்ப ஒளியும் நீரும் கிடைக்காமல் திண்டாடிப்போகும்.

எனவே, குளிர்காலம் வருவதற்கு முன்பாகவே பச்சையம் உற்பத்தி செய்வதை மரங்களும் செடி, கொடிகளும் நிறுத்திக்கொள்கின்றன. அதோடு, இலைகளின் காம்புப் பகுதியையும் நீர் வராமல் மூடிவிடுகின்றன. பச்சையம் இல்லாமல் இலைகளின் பச்சை நிறம் மறையும். அப்போது, இலைகளில் உள்ள மற்ற ரசாயனங்களின் நிறம் முதன்மை பெறுவதால், அவை மஞ்சளாகவோ, பழுப்பாகவோ தோன்றும். நீர் வரத்து நின்றுவிட்டதால், நாளடைவில் இலைகள் காய்ந்து விழுந்துவிடும். அதனால், மரங்களுக்குக் கவலை இல்லை. குளிர்காலம் முடிந்ததும், மீண்டும் அந்த இடங்களில் புதிய இலைகள் துளிர்க்கத் தொடங்கிவிடும். இலைகள் நிறம் மாறும் ரகசியம் இதுதான்.

அது சரி, உணவு உற்பத்தியை நிறுத்திய பின், மரம் உணவுக்கு என்ன செய்யும்?

மரங்கள் மிகவும் முன்னெச்சரிக்கையானவை. குளிர்காலம் சிக்கலானது எனத் தெரிந்து, முன் கூட்டியே உணவைத் தேக்கி வைத்துக்கொள்ளும். ஒரு சில மரங்கள் இதற்கு இலைகளையே உணவு சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தும். மரங்களின் உணவு என்பது, சர்க்கரை (Glucose)  சூரிய ஒளி மற்றும் குளிர்கால இரவுகள் இந்தச் சர்க்கரையைச் சிவப்பாக மாற்றுவதால், இலைகளின் நிறமும் சிவப்பாக மாறுகிறது. சில மரங்களில், இலைகளின் கழிவுகள் பழுப்பு நிறமாக மாறும்.

ஒரு சில மரங்களின் இலைகள், விசேஷத் தன்மை கொண்டவையாகவும் குளிர் மற்றும் ஈரப்பத இழப்பை எதிர்ப்பவையாகவும் இருக்கின்றன. இந்த வகையான மரங்கள், பசுமை மாறா ரகத்தைச் சேர்ந்தவை. இன்னும் சில மரங்கள் ஊசி போன்ற இலைகளைப் பெற்று இருக்கின்றன.

வலை உலா - தாவர ஆராய்ச்சிக்குத் தயாரா ?

ஒரே இடத்தில் அசையாமல் இருப்பதாலே, மரங்கள் சும்மா நிற்பது இல்லை. அவை சுறுசுறுப்பாகவும்  பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாகவும் இருக்கின்றன.

இப்படி, மனதில் தோன்றும் ஒரு சுவாரஸ்யமான கேள்வியில் தொடங்கி, மரங்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம். இந்த இணையதளத்தில் இன்னும் பல விஞ்ஞான விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

இதுபோன்ற கேள்விகளுக்கு ஹைலைட்ஸ்கிட்ஸ்(https://www.highlightskids.com/science-questions/how-and-why-do-leaves-fall-trees) இணையதளமும் ரத்தினச் சுருக்கமாகப் பதில் அளிக்கிறது. இந்தத் தளத்தில், அறிவியல் தொடர்பான வேறு துறைக் கேள்விகளுக்கும் பதில்களைத் தெரிந்துகொள்ளலாம்.

http://dnr.wi.gov/eek/veg/trees/treestruecolor.htm என்ற தளத்திலும் இலைகளைப் பற்றியும் நாம் வாழும் பூமி பற்றியும் அடிப்படையான விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்தத் தளங்களில் ஒருமுறை வலம் வந்தால், தாவரவியலில் நிபுணர் ஆகிவிட்ட உணர்வு ஏற்படுவது நிச்சயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism