Published:Updated:

மை டியர் ஜீபா...

ஹாசிப்கான்

மை டியர் ஜீபா...

ஹாசிப்கான்

Published:Updated:

''ஹாய் ஜீபா... மனிதர்களின் ரத்தத்தில் ஏ, பி என்று பல வகை இருப்பது போல, விலங்குகளுக்கும் உண்டா?''

            - என்.கோமதி சங்கர், வீரவநல்லூர்.

''நம் ரத்தத்தில் காணப்படும் சிவப்பு அணுக்களின் மேல்பரப்பில், 'ஆன்ட்டிஜென்’ எனப்படும் காரணிகள்  உள்ளன. அந்த ஆன்ட்டிஜென் வகையைப் பொருத்து ரத்த வகை பிரிக்கப்படும். ஒருவருக்கு 'ஏ’ வகை ஆன்ட்டிஜென் இருந்தால், அவருடைய ரத்தம் 'ஏ’ குரூப். 'பி’ ஆன்ட்டிஜென் என்றால், 'பி’ குரூப். ஏ, பி என்ற இரு வகை ஆன்ட்டிஜென்களும் இருந்தால், 'ஏபி’ வகையைச் சேர்ந்தது. ரத்தத்தில் ஆன்ட்டிஜென்களே காணப்படவில்லை எனில், அது 'ஓ’ குரூப். ஆனால், விலங்குகளின் ரத்த வகை, ரத்த மூலக்கூறுகளின் கலவையாக அமைந்துள்ளது. அதை, 'குரூப் சிஸ்டம்’ என்பார்கள். ஒவ்வொரு சிஸ்டமும் பல காரணிகள் இணைந்து உருவானது. உதாரணமாக... ஆடு, மாடு போன்றவற்றின் ரத்தம், 10 வகையான குரூப் சிஸ்டங்களால் ஆனது. ஒவ்வொரு குரூப் சிஸ்டத்திலும் பல வகை ரத்தக் காரணிகள் இடம்பெற்றிருக்கும்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மை டியர் ஜீபா...

''ஹலோ ஜீபா... பூமி சுற்றும் உணர்வு நமக்கு ஏன் தெரிய மாட்டேங்குது?''

- வி.எஸ். தரணி, காவேரிப்பட்டினம்.

''பூமி, அதனுடைய சுற்றுப் பாதையில் நிலையான  வேகத்தில் சூரியனைச் சுற்றிவருகிறது. மனிதர்கள், பிற உயிரினங்கள், வானைத் தொடும் கட்டடங்கள் எல்லாமே பூமியுடன் சேர்ந்து சுற்றும் பயணிகள். கார் அல்லது விமானத்தில் போகும்போது கண்களை மூடிக்கொண்டால், நகரும் உணர்வே இருக்காது. ஃப்ளாஸ்க்கில் இருந்து டீயை ஊற்றினால்கூட, டீ பறக்காது. ஏனென்றால், ஃப்ளாஸ்க், டீ, கப், எல்லாமே வண்டியின் வேகத்தில் நகரும். அதுபோலவே, பூமியும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுழல, நாம் அதனோடு நகர்கிறோம். விமானத்தின் வேகத்தைக் குறைத்தாலோ, கூட்டினாலோ  உடலில் ஏற்படும் ஒரு சிறிய தடுமாற்றத்தின் மூலம் அதை உணர்வோம். ஒருவேளை, பூமியும் தன் வேகத்தைக்  கூட்டிக் குறைத்தால், அப்போது அதை உணரலாம்.''

மை டியர் ஜீபா...

''டியர் ஜீபா... ரயில் தண்டவாளத்துக்கு இடையில் ஏன் ஜல்லிக் கற்களைப் போடுகிறார்கள்?''

- டி. அருண், குன்னத்தூர்.

''ரயில்வே தண்டவாளங்களின் உள்ளேயும் தண்டவாளத்தைச் சுற்றியும் போடப்பட்டிருக்கும் சரளைக் கற்களின் பெயர், 'பல்லாஸ்ட்’ (Ballast).. 'ஒரு பாரத்தைச் சமப்படுத்தப் பயன்படுத்தப்படும் பாரம்’ என்று இதற்கு அர்த்தம். 'பர்மனென்ட் வே’ என்று அழைக்கப்படும் நிரந்தரமான ரயில் பாதை என்பது, இரு இரும்புத் தண்டவாளங்கள், அவற்றின் இடையே இடவெளி விட்டுப் போடப்பட்ட ஸ்லீப்பர் கட்டைகள் மற்றும் சரளைக்கற்கள் அடங்கிய ஒரு சாலைப் படுகை. தண்டவாளங்களின் மேல் ரயில் செல்லும்போது, அதன் சக்கரங்களில் இருந்து வெளிப்படும் விசை அல்லது அழுத்தம் தண்டவாளங்கள், ஸ்லீப்பர் கட்டைகள், சரளைக்கற்களின் படுகைக்கு மாற்றப்படும்போது, அந்த விசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். இந்த சரளைப் படுகைக்கு, குறிப்பிட்ட அளவில் உடைக்கப்பட்ட கற்கள் பயன்படுத்தப்படும். இந்தக் கல் படுகை அமைக்கப்படும் கனத்தைப் பொருத்தே, அந்த ரயில் பாதையின் உறுதி அமையும். பொதுவாக, அகல ரயில் பாதைகளுக்கு 25 செ.மீ. உயரத்திலும், மீட்டர் ரயில் பாதைகளுக்கு 20 செ.மீ. உயரத்திலும் சரளைக் கல் படுகை அமைக்கப்படும். கன மழையைச் சமாளிக்கும் விதமாக, 60 முதல் 72 செ.மீ. உயரம்கூடப் போடப்படுகின்றன. இந்தப் படுகைகள், ரயில்வே துறையால் அவ்வப்போது சோதனை செய்யப்படும். இந்த நவீன யுகத்தில், கல் படுகைகளை ஒழுங்குபடுத்த நவீனத் தொழில்நுட்ப இயந்திரங்களும் வந்துவிட்டன.''

மை டியர் ஜீபா...

''மை டியர் ஜீபா... நாம் கடையில் வாங்கும் பொருட்களில் டி என்ற முத்திரை உள்ளதே, அது எதற்காகப் போடுகிறார்கள்?''

- எம்.எஸ்.எச்.ஆயிஷா பர்வீன், லட்சுமாங்குடி.

''இந்தப் பொருள், சட்டப்படியாகவும் வர்த்தக ரீதியாகவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது (Registration)  என்பதைக் குறிக்கவே, அந்த முத்திரை. மேலும் ஒரு பச்சை வட்டத்தையும் (பொட்டு போன்றது)  பார்த்திருப்பீர்கள். அது, அதில் இருக்கும் பொருள், சைவ உணவு வகையைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும். அரக்கு நிறப் பொட்டு என்றால், உள்ளே இருப்பது அசைவ உணவு!

மை டியர் ஜீபா...

''டியர் ஜீபா... சூடாக இருக்கும் பாலை ஆற்றினால்,  நுரை வருவது ஏன்?''

- ரா. பாலசுப்பிரமணியன், சென்னை - 87.

பாலைக் காய்ச்சும்போது, அதில் இருக்கும் பால் புரதம் (மில்க் புரோட்டீன்), சின்னச் சின்ன நூலிழைப் பந்து களாகச் சேர்ந்து, மேலே வரும். பால் சூடாகச் சூடாக இந்தப் புரதப் பந்துகளின் அளவு அதிகமாகும். அதையே  நுரை என்கிறோம். சூடான பாலை வேகமாக ஆற்றும்போது, நீராவியும் காற்றும் சேர்ந்து பாலில் அதிக அழுத்தமாகத் தள்ளப்படுவதால், டம்ளரிலும் நுரை தோன்றுகிறது. பால் காய்ச்சிய வெகு நேரத்துக்குப் பின்னும் நுரை அப்படியே இருப்பதற்குக் காரணம், பாலின் புரதச் சங்கிலிகளின் துருவ ஈர்ப்பு. அந்தச் சங்கிலியின் ஒரு முனை தண்ணீரால் ஈர்க்கப்படும். மறுமுனை தண்ணீரால் தள்ளப்படும். இந்த ஈர்ப்பு சக்தியால்தான், பாலைக் காய்ச்சி இறக்கிய பிறகும், நுரை நீண்ட நேரம் இருக்கிறது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism