FA பக்கங்கள்
Published:Updated:

மை டியர் ஜீபா...

ஹாசிப்கான்

''ஹாய் ஜீபா... ரூபாய் நோட்டுக்களை எந்த வகைக் காகிதத்தில் தயாரிக்கிறார்கள்?''

- எஸ்.சௌமியா, தேவனாங்குறிச்சி.

''சீனர்கள்தான் முதன்முதலில் ரூபாய் நோட்டுகளைக் காகிதத்தில் தயாரித்தனர். சீன ரூபாய் தயாரிக்க, மல்பெரி மரத்தின் காகிதம் பயன்படுத்தப்பட்டது. நம் நாட்டின் ரூபாய் நோட்டுகள், பருத்தி மற்றும் பால்சம் எனப்படும்  தாவரங்களின் கூழ் மற்றும் விசேஷமான சாயம் கலந்து தயாரிக்கப்படுகின்றன. போலியாகத் தயாரிக்க முடியாத அளவுக்கும் கவனத்துடன், விசேஷ மூலப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. சாதாரண காகிதம், மரத்தின் செல்லுலோஸ் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஆனால், ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்க ஸ்டார்ச் காகிதமும் துணி நெய்வதற்கான நூலும் பயன்படுத்தப்படுகின்றன. அச்சிடும் நேரத்தில், பல ஆயிரம் டன் விசை அழுத்தத்தில் உருவாக்கப்படுவதால், கரன்சி மிக மிக மெலிதாக மாறுகிறது. ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து தொட்டுப் புழங்கும் வங்கிக் காசாளர், வியாபாரி போன்றவர்கள் ரூபாயின் ஸ்பரிசம் மூலம் வித்தியாசத்தை உணர்ந்துகொள்வார்கள்.''

மை டியர் ஜீபா...

''ஹலோ ஜீபா... மனிதர்கள் போல விலங்குகளுக்கு வியர்வை ஏற்படுமா?''

- ஜி.விக்னேஷ், பெரியநாயக்கன்பாளையம்.

''ஆமாம் விக்னேஷ். பெரும்பாலான விலங்குகளுக்கு,  முக்கியமாக பாலூட்டிகளுக்கு, வியர்ப்பது உண்டு. உடலில் இருக்கும் யூரியா போன்ற வளர்சிதை மாற்றக் கழிவுகளை அகற்றுவதற்கும், உடலின் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கவும் இந்த 'வியர்த்தல்’ உதவுகிறது. நாய்களுக்கு வியர்வைச் சுரப்பிகள் மிகக் குறைவு என்பதால், வேகமாக மூச்சிரைத்தலின் மூலம் அவை உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். பூனை, தன் கால் பாதங்களை நக்கிக்கொடுப்பதன் மூலமும் யானைகள், தன் பெரிய காதுகளை அசைப்பதன் மூலமும் உடல் வெப்பத்தைக் குறைத்துக்கொள்ளும். காண்டாமிருகத்தின் வியர்வை சிவப்பு நிறத்தில் இருக்கும். இது, 'சன் ஸ்கிரீன்’ போலச் செயல்பட்டு, அதன் உடலைக் குளிர்ச்சியாகப் பராமரிக்கிறது. பன்றிக்கும், மீன் போன்ற நீர் நில வாழ்வனவற்றுக்கும் வியர்ப்பது இல்லை.''

''டியர் ஜீபா... நாள்தோறும் கீரையை உட்கொண்டால் ஞாபகசக்தி வளரும் என்கிறார்களே உண்மையா?''

 - ஆ.வல்லரசன், அய்யூர் அகரம்.

''கீரையில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் ஏராளமான தாதுச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்துள்ளதால், பொதுவாகவே கீரை சாப்பிடுவது, உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. குறிப்பாக,வல்லாரைக் கீரை, நினைவாற்றலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஞாபகசக்திக்கு மட்டுமல்ல, வாரத்தில் ஒன்றிரண்டு முறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்தால், உணவு செரிமானத்துக்கும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும்  நல்லது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.''

மை டியர் ஜீபா...

''பெட்ரோலில் ஓடும் வாகனத்தில் டீசல் ஊற்றி ஓட்டினால் என்ன ஆகும் ஜீபா?''

- டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

''பெட்ரோல் இன்ஜினில், கார்புரேட்டர் மூலம் பெட்ரோல் காற்றுடன் கலந்து, காற்று பெட்ரோல் கலவையாக இன்ஜின் சிலிண்டருக்குள் செல்லும். பிஸ்டன் மூலம் இந்தக் கலவை அழுத்தப்பட்டு, ஸ்பார்க் ப்ளக் வெளியிடும் தீப்பொறியால், பெட்ரோல் காற்றுக் கலவை வெடித்து, பிஸ்டனைக் கீழே தள்ளுகிறது. இதுதான் சுழல் சக்தியாக நமக்குக் கிடைக்கிறது.

டீசல் இன்ஜினில், காற்று மட்டுமே இன்ஜின் சிலிண்டருக்குள் செல்லும். பிஸ்டன் மூலம் அழுத்தப்படும் காற்று சூடாகிறது. இந்தச் சமயத்தில் டீசல், உயரழுத்தம் கொண்ட பம்ப் மூலம் இன்ஜினுக்குள் நேரடியாகச் செலுத்தப்படும்போது வெடித்து, பிஸ்டனைக் கீழே தள்ளுகிறது. பெட்ரோல் இன்ஜினுக்கு அதிகக் காற்றழுத்தம்  தேவையில்லை. மேலும், பெட்ரோல் விரைவாக ஆவியாவதுடன் சுலபமாகத் தீப்பிடிக்கும் என்பதால், இலகுவாகவும் இன்ஜின் சத்தம் குறைவாகவும் இருக்கிறது. டீசல் ஆவியாவது இல்லை. மேலும் இதைச் சூடாக்கினால்தான் எரியும். எனவே, டீசல் இன்ஜினுக்கு அதிகக் காற்றழுத்தம் தேவைப்படுவதுடன், உயரழுத்தத்தில் டீசலும் சூடாக்கப்படுவதால் தீப்பிடித்து வெடிக்கிறது. சத்தமும் அதிகமாக இருக்கிறது. பெட்ரோல் இன்ஜினில் டீசலையோ அல்லது டீசல் இன்ஜினில் பெட்ரோலையோ ஊற்றினால், இரு எரிபொருளும் இன்ஜினுக்குள் செல்லும் வழிமுறை வேறு என்பதால், இன்ஜின் இயங்காது. அப்படி முயற்சி செய்வது, இன்ஜினை செயலிழக்கச் செய்வதுடன் இன்ஜின் பாகங்கள் பாதிக்கும் வாய்ப்பும் ஏற்படும்.''

''டியர் ஜீபா... அதிக அளவு வெப்பம் தாங்கும் உலோகம் எது? அது எங்கு பயன்படுகிறது?''

- சி.ஸ்ரீதரன், கோவை.

''டங்க்ஸ்டன் என்ற உலோகம்தான், அதிக அளவு வெப்பம் தாங்கும் பொருள். அதன் உருகுநிலை, 3,422 டிகிரி சென்டிகிரேடு. கொதிநிலை, 5,555 டிகிரி சென்டிகிரேடு. இதன் அதிகமான வெப்பம் தாங்கும் இயல்பால், மின்சார பல்பு இழைகள் தயாரிப்பில் பயன்படுகிறது. டங்க்ஸ்டன் கலந்த உலோகக் கலவைகள், எக்ஸ்ரே குழல்கள், எலெக்ட்ரான் டியூப்கள், டி.வி. பிக்சர் டியூப், வெல்டிங் மற்றும் ராணுவத் தளவாடங்கள் போன்று எங்கெல்லாம் அதிக வெப்பம் செலுத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது.''