Published:Updated:

கணிதப் புலிகள்: ப்ளாட்டோ

இரா.சிவராமன்

பிரீமியம் ஸ்டோரி

பண்டைய காலத்தில் கல்விச்சாலை அமைத்து, அதிக ஆண்டுகள் கல்வியின் தரத்தை மேம்படுத்திய மேதை, ப்ளாட்டோ. கி.மு. 427 முதல் கி.மு. 347 வரை வாழ்ந்தவர்.

கணிதப் புலிகள்: ப்ளாட்டோ

ப்ளாட்டோவின் இயற்பெயர், 'அரிஸ்டாகில்ஸ்’ என இருந்ததாகவும் பின்னர், விரிந்த தோள்களும் அழகான உடலமைப்பும் பெற்றிருந்ததால், ('பரந்து விரிந்த’ எனப்  பொருள்படும் விதத்தில்) ப்ளாட்டோ என்ற  பெயர் நிலைத்ததாகவும் கூறப்படுகிறது. எகிப்து, சிசிலி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்று, உலக அனுபவங்களையும் அறிவுத் திறனையும்  வளர்த்துக்கொண்டார் ப்ளாட்டோ. குறிப்பாக, இத்தாலியில் பைத்தாகோரியன்ஸ் (பைத்தாகரஸ் வழி வந்த சீடர்கள்) குழுவிடம் கணிதம் பயின்றார். கணிதத்தில் நீங்காத பற்று ஏற்பட்டு, 'கணிதத்தின் துணைகொண்டு அறிவியல் சார்ந்த அனைத்துச் செய்திகளையும் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்'' என்றார்.

சாக்ரடீஸ் உடன் நெருங்கிய தொடர்புகொண்டு, பல தத்துவச் சிந்தனைகளைப் பறிமாறிக்கொண்டார். ஏதன்ஸ் அரசியலில் விருப்பம் ஏற்பட்டது. ஆனால், கி.மு.399-ல் சாக்ரடீஸ் மாண்டுபோன நிகழ்வைக் கண்டு, அரசியல் ஆசையைத் துறந்தார். பல்துறை அறிஞர்களிடம் நெருங்கிய நட்புகொண்டு, பெரிய அளவில் தனது தத்துவ, கணிதச் சிந்தனையை வெளிப்படுத்தினார்.

ப்ளாட்டோவை, கணிதத்தில் அவர் பெயரில் அமைந்த கன உருவங்கள் (றிறீணீtஷீஸீவீநீ sஷீறீவீபீs) மூலம் நினைவுகொள்கிறோம். அந்த ஐந்து கன உருவங்களில், முதல் மூன்று கன உருவங்களைப் பற்றி பைத்தாகரஸ் விளக்கி இருந்தாலும் மற்ற இரு  கன உருவங்களின் தன்மைகளையும் பஞ்ச பூதங்கள் எனப்படும் நீர், ஆகாயம், காற்று, நெருப்பு மற்றும் இந்தப் புவியைக் குறிப்பதாக ஒப்பிட்டு, ஐந்து கன உருவங்களின்  மூல அர்த்தத்தையும் முதன்முதலில் உலகுக்கு எடுத்துரைத்தவர் ப்ளாட்டோ. இதனாலேயே அதனை, 'ப்ளாட்டோ கன உருவங்கள்’ என்று அழைக்கிறோம்.

கி.மு. 387 காலகட்டத்தில் ஏதன்ஸ் நகரில், 'ப்ளாட்டோ கல்விச்சாலை’ என்ற மாபெரும் கல்வி நிலையத்தைத் தொடங்கினார்.  இறுதி நாள் வரை அந்தக் கல்விச்சாலையில் கணிதத்துக்கு அதிகக் கவனம் கொடுக்கப்பட்டது. ''கணிதம் கற்பதன் மூலமே மனித மனம் சிறந்த பயிற்சி பெறும்'' என்று போதித்தார் ப்ளாட்டோ. இதன் விளைவாகவே, 'ஜியோமிதி அறியாதவர்களுக்கு இங்கு இடம் இல்லை’ என்ற வாசகத்தைக் கல்விச்சாலை நுழைவாயில் அமைத்ததாகக் கூறப்படுகிறது.

கணிதப் புலிகள்: ப்ளாட்டோ

இவரது கல்விச்சாலையில் பயின்ற பலர், பிற்காலத்தில் அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, கிரேக்க நாட்டு வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தனர். புகழ்பெற்ற தத்துவ மேதையான அரிஸ்டாட்டில், ப்ளாட்டோவின் கல்விச்சாலையில் கி.மு. 367 முதல் 20 ஆண்டுகள் பயின்றார். கி.பி. 529 வரை கிட்டத்தட்ட 900 வருடங்களுக்கும் மேலாக நீடித்த அந்தக் கல்விச்சாலை, உலகின் நீண்டநாள் கல்வி போதித்த கல்விச்சாலை எனப் பெயர் பெற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு