FA பக்கங்கள்
Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

உலகின் குள்ளமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த எட்வர்டு ஹெர்னாண்ட்ஸ். 28 வயது ஆகும் இவரின் உயரம், 2 அடி 27 அங்குலம் மட்டுமே. குழந்தைகள் உடுத்தும் உடைகள்தான் இவருக்குப் பொருந்துகின்றன. தான் குள்ளமாக இருப்பதால் வெளியே செல்வதைத் தவிர்த்துவந்த எட்வர்டு, இப்போது ரொம்ப பிஸி. ''உலகிலேயே குள்ளமான மனிதர் என்ற கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது'' என்கிறார். சீனாவைச் சேர்ந்த  2 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட பிங்பிங் என்பவரே, இந்தச் சாதனைக்குரியவராக இருந்தார். அவர் மரணம் அடைந்ததும் எட்வர்டு அந்த இடத்தைப் பிடித்துவிட்டார். வாழ்த்துகள் எட்வர்டு!

பென் டிரைவ் !

நம் ஊரில் ஓடும் நான்கு பேருந்துகளைச் சேர்த்தால் என்ன நீளம் வருமோ, அவ்வளவு பெரிய பேருந்து ஜெர்மனியில் ஓடுகிறது. இந்தப் பேருந்தின் பெயர், 'ஆட்டோ டிராம் எக்ஸ்ட்ரா கிராண்ட்’. இதன் நீளம், 201 அடிகள். இதில், நான்கு ஸ்டியரிங் ஆக்ஸில்கள் உள்ளன.

இந்தத் தொடர் பேருந்தில், 256 பேர் பயணம் செய்யலாம். இதை ஸ்டார்ட் செய்வதற்கும், நகர்த்துவதற்கும் மட்டுமே டீசல் என்ஜின் இயங்குகிறது. அதன்பின், பேட்டரியில் இயங்கும். இதை வடிவமைக்க ஆன தொகை, 10 மில்லியன் டாலர்கள். காலையில் வாக்கிங் போக நேரம் இல்லாதவங்க, இந்த பஸ்ஸிலேயே வாக்கிங் போகலாம்!

பென் டிரைவ் !

பொன்னேரியை அடுத்துள்ள பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு, சச்சின் டெண்டுல்கர்  பிப்ரவரி 26  வருகைதந்தார். அங்கே வேலம்மாள் போதி மெட்ரிக் (IIT, J.E.E.) பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி வைத்தார். பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே ஆன விளையாட்டுப் போட்டி 2016 -க்கான 'லோகோ’வை வெளியிட்டுப் பேசிய சச்சின், ''மாணவர்கள், எதிர்கால இந்தியாவின் தீட்டப்படாத வைரங்கள், எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்ற தீர்மானத்துடன் படிக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் கிடைக்கும் நண்பர்கள், விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள். வாழ்க்கையின் சவாலான நேரங்களில்தான், ஒருவர் எவ்வளவு உறுதியானவர் என்பது வெளிப்படும். ஆனால் அதற்காக, ஒருபோதும் குறுக்குவழியை நாடக் கூடாது'' என்றார். சச்சின் சொன்னா சுட்டீஸ் நிச்சயம் அதன்படி நடந்துப்பாங்க!

- கு.அபிநயா

பென் டிரைவ் !

இந்தியாவின் வட பகுதியையும் தென் பகுதியையும் இணைக்கும் ரயில் தடமான உதம்பூர் - கன்னியாகுமரி மெயின் லைன் மற்றும் கிழக்கு பகுதியையும் மேற்கு பகுதியையும் இணைக்கும் ரயில் தடமான ஹவுரா - மும்பை மெயின் லைன் ஆகியவை இந்தியாவின் மையப்பகுதியான நாக்பூரில் சந்திக்கின்றன. இந்த இரு ரயில் தடங்களும் சந்திக்கும் இடம், 'டைமண்ட் கிராசிங்’ (Diamond Crossing) என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற ரயில்வே கிராசிங், இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. இந்தியாவின் வைரம்!

பென் டிரைவ் !

வந்தவாசி அருகேயுள்ள கீழ்க்கொடுங்காலூரில் இருக்கும் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, யுரேகா கல்வி இயக்கத்தின் சார்பாக அறிவியல் விழிப்பு உணர்வு விளக்கப் படம் திரையிடப்பட்டது. இதில், பூமி தோன்றிய வரலாறு, தண்ணீர் குறித்த அறிவியல் உண்மைகள் விளக்கப்பட்டன. பிறகு, யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.முருகேஷ், மாணவிகளிடம் அறிவியல் விநாடி - வினாவை நடத்தினார். வெற்றிபெற்ற மாணவிகளுக்கு அறிவியல் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. விஞ்ஞான பூக்கள் நிறைய மலரட்டும்!