FA பக்கங்கள்
Published:Updated:

ஆல் இன் ஆல் அசத்தல் இளவரசி !

மா.அ.மோகன் பிரபாகரன் படங்கள் : ர.சதானந்த்

'ஆல் இன் ஆல் அசத்தல் இளவரசி’ என்று குந்தவிக்கு பட்டம் கொடுக்கலாம்.

கோயம்புத்தூர், சூலூரில் உள்ள அனுக்ரஹா மந்திர் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் இவர், கைகளால் காற்றைக் கிழித்து, கராத்தே மொழி பேசுகிறார். குதிரையேற்றப் பயிற்சியில், ஜான்ஸி ராணியாக வலம்வருகிறார். நீச்சல் போட்டிகளில் மீன்போல துள்ளி விளையாடுகிறார்.

''பரதநாட்டியம், யோகா வகுப்புகளுக்கு  ஆல்ரெடி போயிட்டிருக்கேன். இப்போ, மேஜிக் ஆர்வம் வந்திருக்கு. மேஜிக் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். சீக்கிரமே ஸ்டேஜ் ஷோ செய்யணும்'' என்கிறார் குந்தவி.

இவருடைய தந்தை செந்தில்குமார், ''குந்தவிக்கு ஏழு வயதில் கராத்தேவும் குதிரையேற்றமும் கத்துக்க அனுப்பினோம். 2011-ம் ஆண்டு, கோயம்புத்தூரில் நடந்த மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெண்கலம் வென்றாள். 2013-ல், கலந்துகொண்ட ஒன்பது போட்டிகளில் ஐந்தில் தங்கம் வென்றாள்'' என்கிறார்.

ஆல் இன் ஆல் அசத்தல் இளவரசி !

இந்த வருடம் ஜனவரியில், கேரளாவின் திருச்சூரில் நடைபெற்ற உலக அளவிலான ஜப்பான் கராத்தே அசோசியேஷன் போட்டியில், 10 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவுகளில் இரண்டு தங்கம் வென்றிருக்கிறார் குந்தவி. 2,000 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில், தமிழ்நாட்டின் சார்பாகத் தங்கம் வென்ற ஒரே சுட்டி, நம்ம குந்தவிதான்.

''குதிரையேற்றத்தில், 16 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் வெண்கலம் ஜெயிச்சேன். குதிரைன்னா, எனக்கு அவ்ளோ... பிடிக்கும். குதிரையும் நானும் ரொம்ப ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்'' என்று

ஆல் இன் ஆல் அசத்தல் இளவரசி !

அழகாகச் சொல்கிறார்.

''எப்படி இத்தனைக்கும் நேரம் கிடைக்குது?'' என்று கேட்டோம்.

'நாம பிளான் பண்ணினால், ஒருநாளில் இன்னும்கூட நிறையச் செய்யலாம். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நிறைய டிவி பார்ப்பாங்க. ஆனா, எனக்கு டிவி பார்க்கவே  பிடிக்காது. அதனால், என்னுடைய பொழுதுபோக்கே புதுசு புதுசா எதையாவது கத்துக்கிறதுதான்'' என்கிற குந்தவிக்கு அப்பாதான் ரோல்மாடலாம்.

''குதிரையேற்றம் கத்துக்கிட்டப்போ, நிறைய முறை கீழே விழுந்து அடிபட்டிருக்கு. அப்போ, 'பயப்படாதே... தைரியமா இரு. இப்போ இந்த வலியை நீ பொறுத்துக்கிட்டு நல்லாப் பயிற்சி செய். போட்டியில் ஜெயிக்கிறப்ப, எல்லாம் மறந்துபோயிரும்’னு அப்பா சொல்வார். நிஜமாவே அப்படித்தான் இருந்துச்சு. போட்டியில் ஜெயிச்சு, எல்லோரும் கைதட்டிப் பாராட்டும்போது, எல்லாத்தையும் மறந்துருவேன்'' என்று உற்சாகமாகச் சொல்கிறார் குந்தவி.

வில்வித்தை மற்றும் துப்பாக்கி சுடுதல் விளையாட்டுகளிலும் புகுந்து விளையாட ஆசையாம். ''ஆனா, 'அதுக்கு இன்னும் கொஞ்சம் வயதாகணும், கொஞ்சம் பொறுமையா இரு’னு சொல்லிட்டாங்க. கூடிய சீக்கிரம் அதையும் தெரிஞ்சுப்பேன். இந்தியா சார்பாக, ஒலிம்பிக்ல மெடல் வாங்குவது என் எதிர்கால லட்சியம்' என்ற குந்தவி...

''இந்தப் பொண்ணு இவ்ளோ செய்துட்டு, படிப்புல கோட்டைவிட்டுருமோனு நினைக்காதீங்க அங்கிள். அதிலும் நான் கிளாஸ் ஃபர்ஸ்ட். ஏன்னா, எல்லாத்துக்கும் முக்கியம் படிப்பு. அதில் எல்லோரும் கவனமாக இருக்கணும்'' என்கிறார்.