Published:Updated:

வலை உலா - விக்கி புதிர்... விடுவிக்கலாம் வாங்க!

சைபர்சிம்மன் படங்கள் : ப.சரவணகுமார்

பிரீமியம் ஸ்டோரி

விக்கிபீடியாவை நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பயனாளிகளே பங்கேற்று உருவாக்கும் கட்டற்ற களஞ்சியம் அது. இதில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்விகள் உண்டே தவிர, பயன்பாடு சிறப்பானது. விக்கிபீடியா சரி, விக்கி விளையாட்டு இருப்பது தெரியுமா?

விக்கிபீடியாவில் கட்டுரைகளைத் தேடுவதையே ஓர் இணைய விளையாட்டாக வடிவமைத்து இருப்பதுதான்  விக்கிபீடியாமேஸ் (http://wikipediamaze.com/)

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம், இந்த இணையதளத்தில்! நமக்கு ஒரு தலைப்பில் தகவல் தேவை என்றால், விக்கிபீடியாவில் தேடுவோம். அந்தத் தேடலையே விக்கி புதிராக மாற்றித்தருகிறது, விக்கிபீடியாமேஸ். இந்தத் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு விக்கிபீடியா கட்டுரையில் இருந்து, இன்னொரு விக்கிபீடியா கட்டுரைக்கு இணைப்புகளின் மூலம் செல்ல வேண்டும். எந்த அளவுக்கு குறைவான கிளிக்குகளைப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் விளையாட்டின் சவால்.

உதாரணத்துக்கு, கெவின் பைக்கன் (ஹாலிவுட் நடிகர்) விக்கிபீடியா கட்டுரையில் இருந்து கனடியன் பைக்கன் (ஒரு ஹாலிவுட் திரைப்படம்) கட்டுரைக்குச் செல்ல வேண்டும். கனடியன் பைக்கன் திரைப்படம், ஜான் கேண்டி எனும் நடிகர் நடித்தது.

வலை உலா - விக்கி புதிர்... விடுவிக்கலாம் வாங்க!

ஜான் கேண்டியும் கெவின் பைக்கனும், 'பிளேன்ஸ், ட்ரெயின்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ்’(Planes, Trains and Automobiles) என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆக, கெவின் பைக்கனின் விக்கிபீடியா கட்டுரையில் உள்ள 'பிளேன்ஸ், ட்ரெயின்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ்’ திரைப்பட இணைப்பை கிளிக் செய்யவேண்டும். பைக்கனும் கேண்டியும் இணைந்து நடித்த படம் என்ற விவரம் வரும். அதில் ஜான் கேண்டியின் கட்டுரை வழியே, கனடியன் பைக்கன் கட்டுரைக்குச் சென்றுவிடலாம். அவ்வளவுதான்... விக்கி புதிரில் வெற்றிபெற்றாகிவிட்டது.

இப்படியே, வரிசையாகப் புதிர்கள் பட்டியல் உள்ளன. இவற்றை விளையாடுவதன் மூலம் குறைந்த இணைப்புகளில் செல்வதற்கான புள்ளிகளைப் பெறலாம். ஏற்கெனவே விளையாடி வெற்றிபெற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். அதிகப் புள்ளிகளுக்கு ஏற்ப, இணையப் புத்தக்கத்தையும் இந்தத் தளம் வழங்குகிறது.

புதிர்களின் வகைகள் தனியே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து பிடித்தமான தலைப்பைத் தேர்வு செய்யலாம். அதிகப் புள்ளிகள் பெற்று, முன்னணியில் இருப்பவர்களின் பட்டியலும் முகப்புப் பக்கத்திலேயே இருக்கிறது. நீங்களேகூட இதுபோன்ற விக்கி புதிரை உருவாக்கித் தரலாம். இந்தத் தளத்தைப் பயன்படுத்த, உறுப்பினராக வேண்டும். அல்லது கூகுள் மற்றும் ஃபேஸ்புக் கணக்கையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

வலை உலா - விக்கி புதிர்... விடுவிக்கலாம் வாங்க!

தி விக்கிகேம்(http://thewikigame.com/) தளமும் இதேபோல விளையாட்டை வழங்குகிறது. பிரபலமான ஆறு கோணத் தொடர்பு தெரியுமா? 'உலகில் உள்ள யாரும், உலகின் எந்தப் பகுதியில் உள்ள எவருடனும் ஆறு தொடர்புகளில் தெரிந்தவர்களாக இருப்பார்கள்’ எனும் கோட்பாடே இது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், ஆறு தொடர்புகளில் இலக்கை அடையும் விளையாட்டு உள்ளது. விக்கிபீடியாரேஸ்(http://www.wikipediarace.com/) தளமும் இதேபோன்ற விளையாட்டை வழங்குகிறது. இதன் முகப்புப் பக்கம் மிகவும் எளிமையாக இருக்கிறது.

சிலருக்கு விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளின் ஆங்கிலம் கடினமாகத் தோன்றலாம். கவலையே படாதீர்கள், எளிமையான ஆங்கிலத்தில் விக்கிபீடியா கட்டுரைகளைப் படிப்பதற்காக, 'சிம்பிள் இங்கிலீஷ் விக்கிபீடியா’(http://simple.wikipedia.org/wiki/Main_Page ) உள்ளது. இதில், எளிமையான ஆங்கிலம் மற்றும் இலக்கணத்தில் கட்டுரைகள் உள்ளன. தகவல்களைத் தெரிந்துகொள்வதோடு, ஆங்கிலத்தையும் வசப்படுத்திக்கொள்ளலாம்.

விக்கி விளையாட்டில் ஜாலியாக ஈடுபடுங்கள். புதிய விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு