FA பக்கங்கள்
Published:Updated:

தீயாக ஒரு விசிட் !

இ.கார்த்திகேயன் படங்கள் :தி.ஹரிஹரன்

தீயாக ஒரு விசிட் !

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் தவிர்க்க முடியாதது தீப்பெட்டி. அது, எப்படித் தயாராகிறது தெரியுமா நண்பர்களே?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருக்கும் காமாட்சி மேட்ச் இண்டஸ்ட்ரிக்கு விசிட் அடித்தார்கள், கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள். அன்புடன் வரவேற்ற மேலாளர் தங்கமணி, அவர்களை ஆலையினுள் அழைத்துச் சென்றார்.

''தீக்குச்சி செய்ய எந்த மரத்தைப் பயன் படுத்துறீங்க அங்கிள்?'' என்று கேட்டாள் கவிதா.

''மலை முருங்கை, அல்பீசியா, மட்டி, பாப்புலர் ஆகிய மரங்களில் இருந்துதான் தீக்குச்சி செய்ய முடியும். இவற்றில்தான் மருந்து ஒட்டிக்கொள்ளும் தன்மை இருக்கிறது. இவற்றைத் தீக்குச்சி மரங்கள் என்றே அழைப்பார்கள். இதில், பாப்புலர் மரம் என்பது பெல்ஜியத்தில் இருந்து வருகிறது. மற்ற மூன்று வகை மரங்களும் கொடைக்கானல், மைசூர், கேரளாவில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் வரும். இவை, காடுகளில் மட்டுமே வளரும். வெயில், மழை மற்றும் கடும் வறட்சி என எந்தச் சூழ்நிலையையும் தாங்கும். மரத்தை வெட்டி, தீக்குச்சி செய்யும் முறையைப் பார்க்கலாம் வாங்க'' என்றார் தங்கமணி.

பெரிய பெரிய மரத்துண்டுகளை, மரத்தோல் உரிக்கும் ஓர் இயந்திரத்தில் செலுத்தி, டைட் செய்தார்கள். சுவிட்சை ஆன் செய்ததும், மரத்துண்டுகள் சுழன்றன. இயந்திரத்தில் உள்ள வட்ட வாள் ஒன்று, மரத்துண்டுகளின் தோலைச் சீவிச்சீவி வட்ட வடிவம் ஆக்கி... பிறகு, அவற்றை நீளப் பட்டைகளாக வெளியே தள்ளியது.

அந்தப் பட்டைகளை இன்னொரு இயந்திரத்தில் செலுத்தினார்கள். இதை 'பீலிங் மிஷின்’ என்பார்கள்.   

தீயாக ஒரு விசிட் !

''வெளியே வரும் மரப்பட்டைகளைத் தனியாகப் பிரித்து, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி,  இந்த  இயந்திரத்தில் செலுத்துவார்கள். பட்டைகள் ரோலிங் ஆகிக்கொண்டே உள்ளே செல்லும். இயந்திரத்தின் உள்ளே இருக்கும் கட்டர், மரப்பட்டைகளைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டும். அப்படி வெட்டப்பட்டு வெளியே வந்து விழுவதுதான் தீக்குச்சித் துண்டுகள்'' என்றார் தங்கமணி.

இயந்திரத்தில் இருந்து வெளியே கொட்டிய மரத் துண்டுகளை, மழைத்துளிகளைப் பிடிப்பதுபோல மாணவர்கள் குஷியாகப் பிடித்தார்கள். கை நிறைய அள்ளினார்கள்.

''அங்கிள், தீக்குச்சி மரம் பச்சையும் பிரவுனும் கலந்த நிறத்தில் இருக்கு. மரப்பட்டைகளும் தீக்குச்சியும் பழுப்பு, சாம்பல் நிறங்களில் இருக்கு. ஆனா, நாங்க வீட்டுக்கு வாங்கும் தீப்பெட்டிக் குச்சிகள், மஞ்சள் நிறத்தில்  இருக்கே எப்படி?'' என்று கேட்டாள் ரூபிகா.

தீயாக ஒரு விசிட் !

''இந்தக் குச்சிகளை, சதுர வடிவ இரும்புக் கூண்டின் மேல் பகுதியில் பரப்பிவிடுவோம். மாலையில், ஒரு மண் சட்டியில் மூன்று கிலோ சல்ஃபரை போட்டுத் தீயை மூட்டி, இரும்புக் கூண்டின் அடியில் வைப்போம். சல்ஃபர் புகை, கூண்டைவிட்டு வெளியே போகாமல் இருக்க, பிளாஸ்டிக் தாளால் இறுக்கமாகக் கட்டிவிடுவோம். மறுநாள் காலையில் திறந்து பார்த்தால், எல்லாக் குச்சிகளும் பளபள என தங்க நிறத்தில் இருக்கும். பிறகு, அவற்றைக்  களத்தில் காயவைப்போம்'' என்றார் தங்கமணி.

அப்போது அங்கே வந்தார், காமாட்சி மேட்ச் இண்டஸ்ட்ரியின் உரிமையாளர் மற்றும் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ். ''உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். வாங்க'' என்று மற்றொரு பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

''வெயிலில் காயவைக்கப்பட்ட குச்சிகளை இந்த க்ளீனிங் மிஷின் மூலமாகச் சுத்தம் செய்வோம். ஒழுங்கற்ற, அளவு குறைவான குச்சிகள் மற்றும் குச்சிகளில் உள்ள பிசிறுகள், தூசிகள் இந்த இயந்திரத்தில் இருந்து குழாய் வழியே சென்று, பிளாஸ்டிக் டிரம்மில் படியும். அதில், எப்போதும் அரை டிரம் தண்ணீர் இருக்கும். சுத்தம் செய்யும்போதும் பாலிஷ் செய்யும்போதும் வெளிவரும் புகை மற்றும் தூசிகள் காற்றில் பறந்து, மாசு ஏற்படுவதைத் தவிர்க்கவும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தூசியும் புகையும் தண்ணீர் டிரம்மில் படிந்து, தண்ணீருடன் கலந்து கெட்டியாகிவிடும். இந்தக் கழிவை வாரம் ஒருமுறை வெளியேற்றுவோம்'' என்றார்.

அடுத்து, குச்சிகளில் மருந்து பதிக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். ''இந்த இயந்திரத்தில் மொத்தம் மூன்று அடுக்குகள் உள்ளன. பாலிஷ் செய்யப்பட்ட குச்சிகள், குழாய் வழியே இந்த இயந்திரத்துக்குள் அடுக்குகளாக நுழையும். மெதுவாக நகர்ந்து, மெழுகில் முக்கி எடுக்கப்படும். அடுத்து, மருந்தில் தோய்க்கும் இடத்துக்கு நகரும். அங்கிருந்து , காய்ந்த தீக்குச்சிகளாக வந்துவிழும். மூன்றாவது அடுக்கைத் தாண்டி வரும்போதே, ஹீட்டர் மூலம் காய்ந்துவிடும். இப்படிக் காய்ந்த தீக்குச்சிகளாக வர, 45 நிமிடங்கள் ஆகும். இவற்றைப் பெட்டிகளில் அடைப்பது, அடுத்த கட்டம்'' என்றார்.

தீயாக ஒரு விசிட் !

''இந்தத் தீக்குச்சி மருந்தையும் நீங்களேதான் தயாரிக்கிறீங்களா?'' என்று கேட்டாள் அருண்குமாரி.

''ஆமா, அதையும் பார்ப்போம்'' என்று அழைத்துச் சென்றார். ''பொட்டாசியம், சல்பர் ஆகியவற்றுடன் பாஸ்பரஸ் சேர்ந்தாலே தீ பற்றிவிடும். ஆனால், இந்த மூன்று வேதிப்பொருள்களுடன் சிலிக்கான் கண்ணாடித்தூள், கேசின், ரோகனம், அமோனியா ஆகிய பொருள்களைக் கலந்து, தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் மையாக அரைக்க வேண்டும். இந்தக் கலவை, மருந்து தோய்க்கும் இயந்திரத்தில் தேவைக்கேற்ப ஊற்றப்படும். இந்த மருந்துக் கலவை கெட்டியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கெட்டியாகிவிட்டால் வெடித்துவிடும் என்பதால், மிகக் கவனமாகக் கண்காணிப்போம்'' என்றார் சுரேஷ்.  

அடுத்து, பெட்டி தயாரிக்கும் இடத்துக்குச் சென்றார்கள். ''இதன் பெயர், இன்பாக்ஸ் மிஷின். அட்டை, இயந்திரத்தின் உள்ளே சென்றதும் பெட்டியின் அளவு, பதிவு செய்யப்படும். அந்த அளவுக்கு மடக்கப்பட்டு, அடிப் பெட்டியாக வெளியே தள்ளப்படும். மேல் பெட்டியும் இதே முறையில்தான் கட்டிங் செய்யப்பட்டுகிறது. ஆனால், அது சிவகாசியில் டிசைன் செய்யப்பட்டு, பாஸ்பரஸ் மருந்து ஒட்டப்பட்டு இங்கே வரும்'' என்றார்.

''அங்கிள், ஒரு நிமிடத்துக்கு எத்தனை பெட்டிகளை இந்த இயந்திரம் தயாரிக்கும்?'' என்று கேட்டாள் அபிநயா.

''நிமிடத்துக்கு 550 பெட்டிகளைத் தயாரிக்கிறது. கடைசியாக, பேக்கிங். குச்சிகளும் பெட்டிகளும்  குடோனுக்குக் கொண்டுவரப்பட்டு அடுக்கப்படும். ஒரு பெட்டியில் 40 குச்சிகள், 10 பெட்டிகள் சேர்த்து ஒரு கட்டு. ஒரு பண்டலில் ஆறு வரிசையாக, வரிசைக்கு 10 கட்டுகள் வீதம் 600 தீப்பெட்டிகள் இருக்கும். நாங்கள் தயாரிக்கும் தீப்பெட்டிகளை குஜராத் மற்றும் டெல்லி ஆகிய ஊர்களுக்கு அனுப்புகிறோம்'' என்றார் சுரேஷ்.

தீயாக ஒரு விசிட் !

''எனக்கு ஒரு சந்தேகம் அங்கிள். நம்ம கோவில்பட்டி,  எப்படி தீப்பெட்டிக்கு ஃபேமஸ் ஆச்சு?'' என்று கேட்டாள் மகாலட்சுமி.

''முதன்முதலில் கொல்கத்தாவில் உள்ள விம்கோ என்ற நிறுவனம்தான் ஸ்வீடன் நாட்டில் இருந்து தீக்குச்சி வெட்டும் இயந்திரத்தை இறக்குமதி செய்து, தீப்பெட்டி தயாரித்தது. கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவங்க, பிழைப்புக்காக கொல்கத்தாவுக்குப் போனாங்க. அங்கேயே தங்கி, தீப்பெட்டி கம்பெனியில் வேலை பார்த்தாங்க. வேலையை நல்லாத் தெரிஞ்சுக்கிட்டு வந்து, சொந்தமா அந்தத் தொழிலைச் செய்ய ஆரம்பிச்சாங்க. இப்பத்தான் எல்லாத்துக்கும் இயந்திரம். 60 வருடங்களுக்கு முன்னாடி கையாலதான் செய்யணும். இரண்டு இஞ்ச் அளவுள்ள செவ்வக வடிவ சட்டத்துக்குள் குச்சிகளை அடுக்கணும். விறகு அடுப்பு மூட்டி மெழுகை உருக்குவார்கள். உருக்கிய மெழுகை செவ்வக வடிவ பிளேட்டில் ஊற்றுவார்கள். அதில், ஏற்கெனவே குச்சி அடுக்கிய சட்டத்தை நனைத்து, ஓர் அறையில் ஒரு நாள் முழுவதும் காய வைப்பார்கள். மறுநாள்,  மருந்துக் கலவையில் நனைத்து, மீண்டும் ஒரு நாள் முழுவதும் நிழலில் காயவைத்து, தீக்குச்சிகளைப் பெட்டியில் அடுக்குவார்கள். கோவில்பட்டி வட்டார வீடுகளில் துணியும் வத்தலும் காயுதோ இல்லையோ, தீப்பெட்டிகள் காயும். நீங்க எல்லாம் ரொம்ப ஈஸியா ஒரு தீக்குச்சியைப் பொருத்திப் போட்டு விளையாடுவீங்க. ஆனா, அந்த ஒவ்வொரு குச்சியும் பலரின் உழைப்பில்  பல நிலைகளைத் தாண்டி வருது'' என்றார் சுரேஷ்.

''புரியுது அங்கிள். தீக்குச்சியை மட்டுமல்ல, எந்தப் பொருளையுமே நாங்க வீணாக்க மாட்டோம்'' என்று ஒரே குரலில் சொன்னார்கள் மாணவர்கள்.

தீப்பெட்டியின் வரலாறு!  

தீயாக ஒரு விசிட் !

ஜான் வாக்கர் எனும் ஆங்கிலேயர், காட்டில் வேட்டையாடுவது வழக்கம். வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தும் துப்பாக்கியில், விரைவாகத் தீப்பற்ற வைப்பதற்கான ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். சில குச்சிகளில் பொட்டாஷையும் ஆன்டிமணியையும் குழைத்து, ஒரே குச்சியில் கெட்டியாகப் பூசினார். அந்தக் குச்சியின் மீது, ஜான் வாக்கர் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய இரும்புக் குண்டு தவறி விழுந்தது. குச்சி மீது இரும்புக் குண்டு உரசியதும் தீப்பிடித்து, அந்தக் குச்சி எரிவதைக் கண்டார். துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுவதை விட்டுவிட்டு, குச்சிகளில்  பொட்டாஷையும் ஆன்டிமணியையும் குழைத்துப் பூசி மிருகங்கள், பறவைகள் அதிகம் நடமாடும் இடங்களில் நட்டுவைத்து, மறைந்து நின்று கவனிப்பார். அந்த வழியாக வரும் மிருகங்கள், பறவைகளின் உடலில் இந்தக் குச்சிகள் உரசியதும் தீப்பிடித்தது. இவர், குச்சியில் தீப்பிடிக்கும் முறையைத்தான் கண்டறிந்தார். எதில் உரசினாலும் உடனே தீப்பிடிப்பதால், இதை அனைவரும் எதிர்த்தனர்.  1852-ம் ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த ஜான் மற்றும் காரல் லன்டஸ்ட்ராம் ஆகிய இருவரும், ஒரு பெட்டியின் இரு புறமும் பாஸ்பரஸைத் தடவி, அதில் குச்சியைத் தேய்த்தால் மட்டுமே தீப்பிடிக்கும் வகையில் பாதுகாப்பாக அமைத்தார்கள். இவர்கள்தான் இன்றைய 'சேஃப்டி மேட்ச்சஸ்’ எனப்படும் தீப்பெட்டியை உருவாக்கியவர்கள்.

  பள்ளியைப் பற்றி...

''கோவில்பட்டியில் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, நாடார் நடுநிலைப் பள்ளி. 1998-ல், மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறந்த பள்ளியாகச் சான்றிதழ் பெற்றது.  எங்கள் பள்ளியில் எல்லாப் பாடங்களுக்கும் மன்றம் அமைத்துள்ளோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மன்றச் செயல்பாடுகள் நடைபெறும். திருக்குறள் தேர்வு, பண்பாட்டுத் தேர்வு, கையெழுத்துப் பயிற்சி என எல்லாப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. வில்லுப்பாட்டு, தெம்மாங்கு, நாடகம், உரையாடல் ஆகியவை, பாடத்தோடு தொடர்புபடுத்திக் கற்பிக்கப்படுகின்றன. அறிவியல் மட்டுமின்றி எல்லாப் பாடங்களுக்கும் செய்முறை விளக்கம் மூலம் எளிதில் புரியவைப்போம். களப் பணிகளுக்கும் அழைத்துச் செல்வோம். அப்படித்தான் தீப்பெட்டி தயாராகும் முறையைப் புரியவைக்க அழைத்துவந்தோம்'' என்று பெருமையுடன் கூறினார், தலைமையாசிரியை செல்வி.