FA பக்கங்கள்
Published:Updated:

மை டியர் ஜீபா...

ஓவியம் : ஹாசிப்கான்

''ஹலோ ஜீபா... டி.வி.-யில் வரும் விளம்பரங்களில் 'HD’ என்று சொல்கிறார்கள். சாதாரண சேனலுக்கும் ‘HD’ சேனலுக்கும் என்ன வித்தியாசம்?''

- பி.அருண் விஷ்ணுவர்தன், திருவண்ணாமலை.

''சாதாரண டி.வி.-யில் தோன்றும் படங்களைவிட அதிகத் தெளிவாக இருப்பதுதான் ‘High Definition’ எனப்படும் HD டி.வி. மற்றும் சேனல்கள். இன்றைய நவீன   டி.வி.-யில் வரும் காட்சிகள், அதிகபட்ச பிக்ஸல்களுடன் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால், ஒளிபரப்பாகும் காட்சிகள் மிகத் தரமாக, துல்லியமாக இருக்கும். இதை, சாதாரணத் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்க முடியாது. எனவே, பலரும் HD டி.வி.கள் மற்றும் சேனல்களைத் தேர்வு செய்கிறார்கள்.''

மை டியர் ஜீபா...

''ஹாய் ஜீபா... ஆங்கிலேயர்களின் முடி ஏன் பிரவுன் அல்லது கோல்டன் கலரில் உள்ளது?''

- ஜி.ரோஹிந்த், பாப்பம்பாளையம்.

''முடியின் நிறத்துக்குக் காரணம், 'மெலனின்’ என்னும் நிறமிகள். இதில் இரண்டு வகை உண்டு. யூமெலனின் மற்றும் பியோமெலனின் (Eumelanin and Pheomelanin).இவற்றில் யூமெலனின் அதிகமாக இருந்தால், முடியின் நிறம் கறுப்பாகவும் குறைவாக இருந்தால், வெளுத்த நிறமாகவும் இருக்கும். எல்லோருடைய முடிகளிலும் பியோமெலனின் கொஞ்சமாவது இருக்கும். அதுவே அளவுக்கு அதிகமாக இருந்தால், முடியை ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறமாகக் காட்டும். யூமெலனின் நிறமியில் கருப்பு, பழுப்பு என இரு உட்பிரிவுகள் உள்ளன. இவற்றின் அளவைப் பொருத்து, பொன்னிறம் அல்லது  பழுப்பு நிறம் (Brown hair)  அமையும். இந்த யூமெலனின் குறைபாட்டால்தான் சிலருக்கு இளமையிலேயே நரைக்கிறது!''

மை டியர் ஜீபா...

''மை டியர் ஜீபா... சுறா மீன்களில் எத்தனை வகைகள் உள்ளன?''

- உ.ஜான் பிரான்சிஸ் சேவியர், திருச்சி.

''சுமார் 360 வகைகள் உள்ளன. இவற்றை எட்டு பிரிவுகளுக்குள் வகைப்படுத்தலாம். 20 சென்டிமீட்டர் முதல் 20 மீட்டர் வரையிலும் சுறாக்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, 'ஏஞ்சல் ஷார்க்’ என்ற சுறா மீன், இரண்டு மீட்டர் நீளத்தில், தட்டையான உடலமைப்பும் முதுகின் மேல் இரண்டு துடுப்புகளும் கொண்டது. கடலின் அடி ஆழத்தில் வசிக்கும் இந்தச் சுறா, மண்ணுக்குள் உடலைப் புதைத்துக்கொண்டு, கண்கள் மட்டும் வெளியே தெரியுமாறு  நாள்கணக்கில் கிடக்கும். குறிப்பிட்ட சில மீன் வகைகள் வரும்போது, பாதி உடலை மட்டும் தூக்கி, இரையைப் பிடிக்கும். ஏஞ்சல் ஷார்க் சுறாவிலேயே ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. இவற்றில் சில வகை, மனிதர்களைத் தாக்கும் அளவுக்குப் பயங்கரமானவை!''

''ஹாய் ஜீபா... உடல் எடையைக் குறைக்க, ஒரு வேளை  சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும் என்று நண்பன் கூறுகிறான். அது உண்மையா?''

- எம்.சபரீஸ்வரன், பு.புளியம்பட்டி.

''இதில், ஒரு சதவிகிதம்கூட உண்மை இல்லை. ஒரு வேளை பட்டினி கிடப்பதால், உடல் நலன்தான் கெடும். நம் வயிற்றில் ஜீரணத்துக்காகச் சுரக்கும் அமிலங்கள், ஜீரணிக்க உணவு ஏதும் இல்லாத நிலையில் வயிற்றைப் புண்ணாக்கிவிடும். அதுதான், 'பெப்டிக் அல்சர்’ (வயிற்றுப் புண்). எனவே, உங்கள் குடும்ப மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற்று, குறிப்பிட்ட உணவு, உடற்பயிற்சிகள் மூலம் எடையைக் குறைக்க முயற்சிக்கவும்!''

மை டியர் ஜீபா...

''ஹாய் ஜீபா... 'பாரத் ரத்னா’ விருது பெற்ற முதல் தமிழர் யார்?''

- த.சூரியகுமார், சென்னை.

''உங்களுக்கு 'ட்ரிபிள்’ சந்தோஷமாகச் சொல்கிறேன். 'பாரத் ரத்னா’ விருது நிறுவப்பட்ட 1954-ல், அந்த விருதுக்கு உரியவர்களாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருமே தமிழர்கள்தான். இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரான, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜாஜி (ஆங்கிலேயரின் ஆட்சியில் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல்), நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி, சர் சி.வி. ராமன் ஆகிய மூவரும்தான் 'பாரத் ரத்னா’ விருதைப் பெற்ற முதல் மூன்று தமிழர்கள். ஒரே ஆண்டில் நம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் விருதுபெற்றது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்!''