Published:Updated:

வலை உலா - கைகொடுக்கும் மின் அட்டைகள்!

சைபர்சிம்மன் படங்கள் : ப.சரவணகுமார்

பிரீமியம் ஸ்டோரி

உங்களுக்கு மின் அட்டைகள் பற்றித் தெரியுமா? ஆங்கிலத்தில் ஃப்ளாஷ் கார்ட்ஸ் எனப்படும் மின் அட்டைகளை, வாசிப்புத் தோழன் எனலாம்.

தேர்வுக்குத் தயாராகும்போதும் புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போதும் உதவும் அட்டைகள். படித்தவற்றை நினைவில்கொள்ள, இவை சிறந்த வழி என்று நினைவாற்றல் நிபுணர்கள் சொல்கின்றனர். மணிக்கணக்கில் மனனம் செய்துகொண்டிருப்பதைவிட, இப்படி அழகாக அட்டைகளில் எழுதிவைத்துப் படிக்கையில், காலத்துக்கும் நினைவில் நிற்கும் என்று ஊக்கம் தருகின்றனர்.

இந்த மின் அட்டைகளை, இணையத்திலேயே தேவையான அளவு உருவாக்கலாம். இதற்கான அட்டகாசமான இணையதளங்கள் உள்ளன.

மின் அட்டை உருவாக்க உதவும் இணையதளங்களில் எளிதானது, கார்ட்கிவி.காம் (http://cardkiwi.com/).. இந்தத் தளத்தைப் பயன்படுத்த, முதலில் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பிறகு, நீங்கள் படிக்க விரும்பும் தலைப்பு அல்லது பாடங்களில் இணைய, அட்டைகளை உருவாக்கிக்கொள்ளலாம்.

வலை உலா - கைகொடுக்கும் மின் அட்டைகள்!

அட்டைக்கான தலைப்பைக் கொடுத்துவிட்டு, ஒரு பக்கத்தில் கேள்வி அல்லது குறிப்பை எழுதவும். மறு பக்கத்தில் அதற்கான பதிலை எழுத வேண்டும். இப்படி வரிசையாக எத்தனை கார்டுகளை வேண்டுமானாலும் உருவாக்கலாம். இந்தக் கார்டுகளைக் கொஞ்சம் இடைவெளிவிட்டு க்ளிக் செய்து, பார்க்கலாம். எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் அட்டைகள் வடிவில் பார்க்கும்போது, மனத்தில் எளிதில் பதிந்துவிடும்.

வலை உலா - கைகொடுக்கும் மின் அட்டைகள்!

மின் அட்டைகளைப் பயன்படுத்தும் முறையைப் பற்றி இந்தத் தளத்தில் வீடியோ விளக்கம் இருக்கிறது. இந்தத் தளத்தின் கூடுதல் விசேஷம், நீங்கள் உருவாக்கிய அட்டைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவை எந்த அளவுக்கு உங்கள் நினைவில் இருக்கிறது என்பதையும் அறியலாம். இதற்காகவே, கட்டைவிரலை உயர்த்தும் அல்லது கீழே காட்டும் வகையிலான செய்கைக் குறிப்புகள் உள்ளன. அவற்றை க்ளிக் செய்யலாம். அடுத்தமுறை நீங்கள் படிக்க வரும்போது, இந்தத் தளமே, உங்களுக்கு அதிகம் நினைவில் இல்லாத அட்டைகளை முதலில் காட்டும்.

நீங்கள் உருவாக்கிய அட்டைகளை, நண்பர்களோடும் இணையம் வழியாகவும் பகிர்ந்துகொள்ளலாம். இதன் மூலம் நண்பர்களிடையே கூட்டு வாசிப்பும் சாத்தியமாகும். அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் உருவாக்கிய இணையதளம் என்பது இதன் சிறப்பு!

வலை உலா - கைகொடுக்கும் மின் அட்டைகள்!

க்ராம்.காம் (http://www.cram.com/) இணையதளம் மூலமும் மின் அட்டைகளை உருவாக்கலாம். மற்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே உருவாக்கி உள்ள அட்டைகளையும்  பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் அட்டைகளை உருவாக்கி உள்ளனர். கம்ப்யூட்டர், மருத்துவம், பொது அறிவு எனப் பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையான தலைப்பைத் தேர்வுசெய்து,  பயன்படுத்தலாம்.

நாமே அட்டைகளை உருவாக்கும்போது, தலைப்பு மற்றும் பாடத்தைத் தனியே குறிப்பிட்டு, அவற்றுக்கான விளக்கத்தையும் எழுதலாம். புகைப்படங்கள் மற்றும் ஆடியோ கோப்பைச் சேர்க்கும் வசதியும் இருக்கிறது. மூன்று பக்க அட்டைகளையும் உருவாக்கலாம். நீங்கள் விரும்பினால், இந்த அட்டைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பயன்படும் செயலி வடிவங்களும் இருக்கின்றன. பொது நுழைவுத் தேர்வு தொடர்பான இணைய அட்டைகள் இந்தத் தளத்தின் சிறப்பு அம்சம்.

வலை உலா - கைகொடுக்கும் மின் அட்டைகள்!

க்ளாஸ்மின்ட் (https://www.classmint.com/) இணையதளமும் மின் அட்டைகளைத் தயாரித்துக்கொள்ள உதவுகிறது. இதுபோலவே, ஸ்டடி ஸ்டாக் (http://www.studystack.com/) தளம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எண்ணற்ற தலைப்புகளில் மின் அட்டைகளை வழங்குகிறது. பள்ளித் தேர்வுக்குத் தயாராகும்போதும் இந்த அட்டைகளைப் பயன்படுத்தலாம். நுழைவுத் தேர்வுகளுக்கும் பயன்படுகிறது. புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ளவும் கைகொடுக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு