FA பக்கங்கள்
Published:Updated:

கோடை சாப்பாடு கொஞ்சம் உஷாரு !

சின்னச் சின்னக் குறிப்புகள் பிரேமா நாராயணன் படஙகள் :ஜெ.வேங்கடராஜ்

சம்மர் லீவு வருது! நண்பர்களோடு விளையாட்டு,  சுற்றுலா, சம்மர் கிளாஸ்... என இனிமே உங்க ராஜ்ஜியம்தான். இந்த ஜாலியில் உடம்பையும் கவனிச்சுக்கணும். முக்கியமாக, உணவு விஷயத்தில் உஷாராக இருக்கணும். நேரம்கெட்ட நேரத்துக்குச் சாப்பிடுவது, டூர் போகிற இடங்களில் விதவிதமாகச் சாப்பிடுவது எல்லாம் உடம்பைக் கெடுத்துடும். அதனால், உங்க சம்மர் சாப்பாடு எப்படி இருக்கணும்னு சின்னச் சின்ன டிப்ஸ் கொடுக்கிறார், டயட்டீஷியன் யசோதரை கருணாகரன்.

சக்தி தரும் மாவுச்சத்து!

விடுமுறை நாட்களில் விளையாடியே களைச்சுப் போகும் உங்களுக்கு, உடலுக்கு சக்தி கொடுக்கும் மாவுச்சத்து, தினசரி உணவில் 70 சதவிகிதம் இருக்கணும். தேன், வெல்லம், கோதுமை மாதிரியான தானியங்கள், கிழங்குகளைச் சேர்த்துக்கங்க.

வளர்ச்சிக்கு உதவும் புரதம்!

தினமும் 15 சதவிகிதம் புரதம் உங்க உணவில் இருக்கணும். பால், தயிர், மோர், வேர்க்கடலை, பருப்பு வகைகள், பாசிப்பயறு, கொண்டைக்கடலை, முட்டை, மீன், இறைச்சி போன்றவற்றில் அதிகப் புரதம் இருக்கு.

கோடை சாப்பாடு கொஞ்சம் உஷாரு !

கொழுப்பு ஜாக்கிரதை!

விடுமுறையில் கொழுப்புச் சத்து நிறைய இருக்கிற சாப்பாட்டைச் சாப்பிட்டு, ரெண்டு மாதத்துல வெயிட் போட்டுடுவீங்க. அப்புறம், ஸ்கூலுக்குப் போனா, நண்பர்கள் கிண்டல் செய்து ஒரு வழி பண்ணிடுவாங்க. அதனால், எண்ணெயில் பொரித்த உணவுகள்,  பலகாரங்கள், சீஸ், வெண்ணெய், இனிப்பு வகைகளிடம் ஜாக்கிரதையா இருங்க.

பச்சைக் கலரு ஜிங்குச்சா!

பச்சை, மஞ்சள், சிவப்பு என உங்க உணவு, தினமும் ஐந்து வண்ணங்களில் இருக்கணும். அப்படியான உணவுகள்... கேரட், பீட்ரூட், கீரை, ஆரஞ்சு, பப்பாளி, தக்காளி, இன்னும் பல. கலர்ஃபுல்லான காய்கறி, பழங்களில் வைட்டமின்கள் நிறைஞ்சு இருக்கு. இது, உடல் சுறுசுறுப்புக்கு உதவும். வெயிலில் விளையாடினாலும் உங்க தோல் பாதுகாக்கப்படும்.

தேவை... தாது உப்புக்கள்!

கொளுத்தும் கோடையில், பெரியவங்களைவிட உங்களுக்குத்தான் தாது உப்புக்கள் (மினரல்ஸ்) அதிகம் தேவை. கோதுமை, கம்பு, ராகி, பால், தயிர்... இதெல்லாம் உங்க சாப்பாட்டில் அவசியம் இருக்கணும்.

   தண்ணீர் முக்கியம்!

என்னதான் பிஸியாக விளையாடிட்டு இருந்தாலும் தண்ணி குடிக்க  மறந்துடாதீங்க. ஒரு நாளைக்கு ரெண்டு அல்லது மூணு லிட்டர் (10-15 டம்ளர்) தண்ணீர் குடிக்கணும். உடம்பில் இருக்கிற நச்சுப் பொருள்களை வெளியேற்றவும் தண்ணீர் ரொம்ப அவசியம். இளநீர், மோர், பழச்சாறுகளை அடிக்கடி குடிங்க. பிக்னிக் அல்லது டூர் போகும்போது, வீட்டில் இருந்தே தண்ணீரை எடுத்துட்டுப்போயிடுறது நல்லது. இது, பலவகை நோய்த் தொற்றுகளைத் தவிர்க்கும்.

  கடன்களை மறக்காதீங்க!

உணவு உண்பதைப்போல சிறுநீர் கழிப்பதும் மலம் கழிப்பதும் மிகவும் முக்கியம். விளையாட்டு மும்முரத்தில், இந்தக் கடன்களை மறக்காதீங்க. பேரீச்சம்பழம், வாழைப்பழம், மாதுளம்பழம் சாப்பிடுவது மலச்சிக்கலைத் தவிர்க்கும்.

தவிர்க்க வேண்டியவை

காலை உணவைத் தள்ளிப்போடுவது.

ஒரே இடத்தில் உட்கார்ந்து, எதையாவது கொறிச்சுக்கிட்டே டி.வி.பார்க்கிறது.

செயற்கை நிறம் மற்றும் மணம் சேர்த்த  சாஃப்ட் டிரிங்க்ஸ், பீட்ஸா, பர்கர், நெய் நிறைந்த இனிப்பு வகைகள்.

சீக்கிரம் செரிக்காத, எண்ணெயில் பொரித்த மற்றும் மசாலா சேர்த்த உணவுகளை இரவில் சாப்பிடுவது.

கை, கால்களைச் சரியாகக் கழுவாமல் சாப்பிடுவது.  

முதல்நாள் சமைத்த உணவுகள்... குறிப்பாக, அசைவ உணவுகளை நிச்சயம் தொடக் கூடாது.

சாப்பாடு விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருங்க... சம்மர் லீவை ஜாலியா என்ஜாய் பண்ணுங்க!