FA பக்கங்கள்
Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

கோவில்பட்டி, புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பாக, உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மற்றும் மாறிவரும் சூழ்நிலைகளால் அழிந்துவரும் சிட்டுக்குருவிகளைக் காக்க, ''சிட்டுக்குருவிகளைக் காப்போம், ரசாயன உரம் அல்லாத இயற்கை உரத்தில் நவதானியங்களைப் பயிர் செய்வோம், சிட்டுக்குருவிகள் கூடு கட்ட வழிவகை செய்வோம்'' என்று மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். பிறகு, சிறிய மண்பானைகளில் வைக்கோல், கம்பு, சோளம் ஆகியவற்றை வைத்தனர். அந்த மண்பானைகளை பள்ளி வளாகத்தில் உள்ள மரக்கிளைகளில் கட்டினார்கள். சிட்டுக்குருவி படங்களும் குறிப்புகளும் வழங்கப்பட்டன. விரைவில் பள்ளி வளாகத்தில் குருவிகளின் கீச் கீச் ஒலி கேட்கட்டும்!  

பென் டிரைவ் !

 மக்கள் வசிக்கும் நெருக்கடியான தெருவில் சைக்கிள், மோட்டார் பைக், கார்கள் போகும். ஆனால், ரயில் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? வியட்நாமின் ஹனோய் நகரின் குடியிருப்புப் பகுதியில் உள்ள முக்கியமான ரயில் நிலையத்துக்கு, இந்தத் தெரு வழியாக ரயில் செல்கிறது. அப்போது, வீட்டு வாசலுக்கும் ரயிலுக்கும் சில அங்குலம் இடைவேளியே இருக்கும். ரயில் வரும் நேரத்தில் தெருவாசிகள், வீட்டுக்குள் சென்றுவிடுவார்கள். ரயில் சென்றதும் வெளியே வந்து, தங்கள் வேலைகளைக் கவனிப்பார்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் இந்தத் தெரு வழியாக ரயில் செல்லும் என்பது ஆறுதலான விஷயம். குழந்தைகளை ரொம்பக் கவனமாப் பார்த்துக்கணும்!

பென் டிரைவ் !

ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த புது வகை டைனோசரின் படிமங்களை சமீபத்தில் அமெரிக்க ஆய்வியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வட அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள டக்கோட்டா (Dakota) பிரதேசத்தில், பாறைப் படிமங்களை ஆய்வு செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டன. அறிவியல் ரீதியாக, 'அன்சு’ என்று அழைக்கப்படும் இந்த டைனோசர், ஒன்றரை மீட்டர் உயரமும் 200 கிலோ எடையும் உடையது. கூரிய மூக்கு மற்றும் இறகுகள் கொண்டது. மற்ற டைனோசர்களைப்போல பற்களோ, நகங்களோ கிடையாது. இதன் உடல் அமைப்புக் காரணமாக, 'நரகத்தில் இருந்து வந்த கோழி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில், இன்னொரு டைனோசர் பார்க் படம் எடுக்க சான்ஸ் இருக்கு!

பென் டிரைவ் !

மனிதர்களுக்குப் பதிலாக ரோபோ ஒன்று, டிராஃபிக் போலீஸ் வேலையைச் செய்துவருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் (ரிவீஸீsலீணீsணீ) போக்குவரத்தைக் கட்டுப்படுத்த, மிகக் குறைவான டிராஃபிக் போலீஸ்காரர்களே இருக்கிறார்கள். இதற்குத் தீர்வு காண, ரோபோ ஒன்றை உருவாக்கி, முக்கிய சாலையில் பொருத்தி னார்கள். சுழலும் தன்மை கொண்ட இந்த ரோபோ, போக்குவரத்துக் காவலரைப் போலவே சிக்னல்களைக் காட்டி, அழகாக போக்குவரத்தைக்  கட்டுப்படுத்துகிறது. இந்த ரோபோவில், டிராஃபிக் சிக்னல்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைப் படம் பிடிக்க கேமராவும் உள்ளது. ஓய்வு அறியா இயந்திர போலீஸ்!

பென் டிரைவ் !

'இந்தியக் குழந்தைகள் நலச் சங்கம்’ என்கிற தன்னார்வ அமைப்பு, 'குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ என்ற குறுந்தகடு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இது, குழந்தைகளுக்காக வெளிவரும் குறுந்தகடுகளில் இருந்து  மாறுபட்டதாக இருந்தது. 'கும்கி’ திரைப்படத்தின் 'சொய்ங்... சொய்ங்...’ பாடலைப் பாடிய மகிழினி, ஹரிஹரசுதன், அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி எனப் பலருடன் 'சூப்பர் சிங்கர்’ புகழ் யாழினியும் பாடி இருக்கிறார். மணிமாறன் பாடல்களை எழுதி, இசை அமைத்திருக்கிறார். குழந்தைகளின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு, சுதந்திரம் ஆகியவற்றைப் பற்றியும் இளம் வயதுத் திருமணத்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் பாடல்கள் உணர்த்துகின்றன. குழந்தைகளோடு பெரியவர்களும் கேட்டு ரசித்து, கருத்துகளை மனதில் வாங்கிக்கொள்ளலாம். பாடல்களைக் கொண்டாடுவோம்!

பென் டிரைவ் !

சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் (மார்ச் 17, 1914) கணித மேதை ராமானுஜன், எஸ்.எஸ். நெவாசா என்ற கப்பலில் இங்கிலாந்துக்குப் பயணமானார். அப்போது,  சென்னைத் துறைமுகத்தில் மேலாளராகப் பணியாற்றிய நாராயண ஐயர் என்பவர் ராமானுஜத்திடம், ''உங்கள் நினைவாக, நீங்கள் பயன்படுத்தும் சிலேட்டைக் கொடுங்கள்'' என்று கேட்டார். ராமானுஜன், உடனே தனது சிலேட்டைக் கொடுத்தார். அந்த சிலேட், இப்போது நாராயண ஐயர் குடும்பத்தின் நான்காவது தலைமுறையான ஸ்ரீகாந்த்திடம் இருக்கிறது. ''மிகச் சிறந்த கணித மேதையின் பொக்கிஷம், எங்களிடம் இருப்பது பெருமையான விஷயம்'' என்கிறார், ஸ்ரீகாந்த். அற்புதமான கறுப்புப் புதையல்!