FA பக்கங்கள்
Published:Updated:

ரிங்கா ரிங்கா டான்ஸர்ஸ் !

ந.ஆஷிகா படங்கள் : பா.காளிமுத்து, வி.சதீஸ்குமார்

சர்க்கஸில் மட்டுமே பார்த்திருக்கும் சாகசமும் நளினமும் கலந்த நடனம், ரிங் டான்ஸ். அதை மேடைகளில் அரங்கேற்றி சாதனை படைத்துவருகிறார்கள் ஐந்து மாணவிகள்.

மேலூர், ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் இவர்கள் ஐந்து பேரும், அந்தச் சுற்றுவட்டாரத்தில் பிரபலம். பள்ளி வளாகத்தில், இடுப்பில் ஒரு பெரிய வளையத்தையும் கையில் ஒரு சின்ன வளையத்தையும் வைத்துக்கொண்டு, அழகாக ஆடிக்கொண்டிருந்தார்கள்.

''போன வருஷம், 'பள்ளி ஆண்டு விழாவில், புதுசா ரிங் டான்ஸ் சேர்க்கிறோம். ஆடுறதுக்கு யாரெல்லாம் வர்றீங்க?’னு கேட்டாங்க. நாங்க, பேர் கொடுத்தோம். பமேலா ஜோவிட்டா டீச்சர்தான் டிரெய்னிங். எங்க கையில் ஆளுக்கு ஒரு ரிங் கொடுத்தாங்க. அதைப் பிடிக்கக்கூடத் தெரியலை. 'ஆகா... ஏடாகூடமா வந்து சிக்கிட்டோம்டி’னு சொன்னேன். பமேலா மிஸ் சிரிச்சுக்கிட்டே, தைரியம் சொன்னாங்க. எங்களுக்குத் தினமும் பயிற்சிகொடுத்தாங்க. முதல்ல இடுப்பில் சரியாச் சுத்துறதுக்கே ஒரு மாதம் ஆச்சு'' என்கிறார் சரண்யா.

''இடுப்பில் சுற்றப் பழகியதும் கையில், கழுத்தில் சுற்றுவதை சுலபமாகப் பழகிட்டோம். அந்த வருஷம் பள்ளி ஆண்டு விழாவில் எங்க டான்ஸ்தான் டாப்'' என்கிறார் ஹேமலதா.

ரிங்கா ரிங்கா டான்ஸர்ஸ் !

''இந்த வளையத்தில் டான்ஸைப் பழகிட்டேன். ஆனால், வீட்டில் அம்மா, அப்பாவின் எதிர்ப்பு வளையம் விழுந்துருச்சு. 'இது என்ன, தெரு டான்ஸ் மாதிரி இருக்கு? அதெல்லாம் ஆடக் கூடாது’னு சொல்லிட்டாங்க. என்ன பண்றதுனு தெரியாம, மிஸ்கிட்ட சொன்னேன். அவங்க என் வீட்டுக்கே வந்து, அம்மாகிட்ட பேசி,  சம்மதிக்க வெச்சாங்க. ஆனாலும் நாங்க ஸ்டேஜ்ல ஃபர்ஸ்ட் ஆடினப்ப, அம்மா வரலை. மறுபடியும்  'ஒரே ஒரு தடவை உங்க பொண்ணு ஆடுறதைப் பாருங்க’னு மிஸ்தான் கூட்டிட்டு வந்தாங்க. பார்த்த அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். 'ரொம்ப நல்லா ஆடினே’னு சொன்னாங்க. எனக்கு பயங்கர சந்தோஷமா இருந்துச்சு'' என்று ஃப்ளாஷ்பேக் வளையத்துக்குள் சென்றார், அழகேஸ்வரி.

''எங்க வீட்டுல வேற மாதிரி பிரச்னை. 'நீ எந்த டான்ஸ்லயாவது சேர்ந்துக்க. அது வாங்கணும் இது வாங்கணும்னு காசு மட்டும் கேட்காதே’னு சொல்லிட்டாங்க. பமேலா மிஸ்தான் எல்லாருக்கும் யூனிஃபார்ம், ரிங்ஸ் வாங்கிக் கொடுத்தாங்க'' என்கிறார் சத்தியப்பிரியா.

''இவங்களைப் பார்த்து, எனக்கும் ரிங் டான்ஸ் ஆடணும்னு ஆசையா இருந்துச்சு. மிஸ்ஸும் ஓகே சொல்லி, பயிற்சிகொடுத்தாங்க'' என்கிறார் பவதாரணி.

ரிங்கா ரிங்கா டான்ஸர்ஸ் !

ஆசிரியையும் பயிற்சியாளருமான பமேலா ஜோவிட்டா, ''இது வெறும் அழகு டான்ஸ் மட்டும் கிடையாது. உடம்பைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வெச்சுக்க உதவும். சிறுவயதில், நானும் இந்த ரிங் டான்ஸ் ஆடி இருக்கேன். இந்த ஸ்கூலுக்கு வந்ததும், 'ஆண்டு விழாவுக்கு ரிங் டான்ஸ் பண்ணலாம்’ எனதலைமையாசிரியரிடம் சொன்னேன். அவரும்  சம்மதித்தார். இந்தப் பள்ளியில் படிப்பவர்கள் பலரும் கிராமத்துல இருந்து வர்றாங்க. பெற்றோருக்குக் கூலி வேலை. அவங்களால் டான்ஸுக்கான பொருள்களை வாங்கித் தர  முடியாது. அதனால், என் சொந்தச் செலவிலேயே  வாங்கிக் கொடுத்தேன். எல்லோரும் ரொம்பச் சீக்கிரமே பழகிட்டாங்க. இப்போ, நிறைய மேடைகளில் ஆடி,  பரிசுகளோடு வரும்போது, எனக்கு ரொம்பச் சந்தோசமா இருக்கு'' என்கிறார்.

மேலூர், அரிமா சங்கம் நடத்திய நடனப் போட்டியில் பங்கேற்று, முதல் பரிசைப் பெற்றார்கள். மேலூர் வட்டத்தில் ஆல் ஓவர் சாம்பியன்ஷிப் போட்டியிலும்  வெற்றிபெற்று இருக்கிறார்கள்.

ரிங்கா ரிங்கா டான்ஸர்ஸ் !

ஒன்பது ரிங்குகளை உடம்பில் போட்டுக்கிட்டு, நான் ஸ்டாப்பாக ஆடுவதில் அழகேஸ்வரி கில்லாடி.

''சும்மா தரையில் நின்று, ரிங்கை இடுப்பில் மாட்டிக்கொண்டு விளையாடுறது மட்டுமேனு நினைச்சுடாதீங்க. இடுப்பில் வளையத்தைச் சுற்றிக்கொண்டே... நாற்காலியின் மீது ஒரு காலை ஊன்றி நின்று ஆடுவோம். கையில் குடையைப் பிடிச்சுக்கிட்டு ஆடுவோம். ரிங் டான்ஸ் ஆடிக்கிட்டே... கோலாட்டம் நடத்துவோம்'' என்று சொல்லி அசரவைக்கிறார்கள், இந்த ரிங்கா ரிங்கா டான்ஸர்ஸ்.