FA பக்கங்கள்
Published:Updated:

நமக்கு அருகே சில நண்பர்கள் !

யெஸ்.பாலபாரதி

நமக்கு அருகே சில நண்பர்கள் !

நீங்கள் நன்றாகப் பாடுவீர்கள்... அருமையாகப் படம் வரைவீர்கள்... கணக்கில் புலியாகப் பாய்வீர்கள். இப்படி நமது தனித் திறன்களைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். இவை எல்லாவற்றிலும் ஒவ்வொருவராலும் அதிகபட்சம் 80 சதவிகித வெற்றியையே தொட முடியும் என்பது பொதுவான கருத்து. ஆனால், ஆட்டிஸ நிலையில் இருப்பவர்கள், குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டில் 200 சதவிகித வெற்றியைத் தொடும் திறமையாளர்களாக இருப்பார்கள். அது என்ன ஆட்டிஸம்?

நம்மைப்போல எல்லோரிடமும் பழகவும், தன் எண்ணங்களைப் பகிரவும் முடியாத நிலையைத்தான் ஆட்டிஸம் என்கிறார்கள். ஒரு வாளி நிறையத் தண்ணீரை எடுத்துக் கீழே ஊற்றினால் பரவலாகப்போகுமே தவிர, வேகமாகச் செல்லாது. அதே நீரை, ஒரு குழாய் மூலமாக வெளியேற்றும்போது, தண்ணீர் வேகமாகவும்  அழுத்தத்தோடும் வெளியே பாயும். அதுபோல, ஆட்டிஸ நிலையாளர்கள் ஓரிரு விஷயங்களில் வேகமாக இருப்பார்கள். மற்றவர்களோடு பழகுவதிலும், தாங்கள் நினைப்பதைப் பகிர்ந்துகொள்வதிலும், அவர்களால் 50% சதவிகித அளவே தொட முடியும். அதுவும் கடுமையான பயிற்சிகளின் மூலம் சாத்தியமாகும். ஆட்டிஸம் பிடியில் சிக்கினாலும், உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பிய சாதனையாளர்கள் சிலர், இன்று நம் கண் முன்னே உலா வருகிறார்கள்.

நமக்கு அருகே சில நண்பர்கள் !

பறவைப் பார்வை...    

15 நிமிடங்கள், ஏரியல் வியூ என்னும் பறவைப் பார்வையில் பார்த்த காட்சிகளை, ஓவியங்களாக வரைவதில் வல்லவர், ஸ்டீபன் வில்ட்ஷைர் (Stephen Wiltshire).. இவரை, 'கேமரா பார்வை மனிதன்’ என்று உலகம் கொண்டாடுகிறது. பேச்சு, சமூகத் தொடர்புத் திறன்கள் அற்றவராக  இருந்த ஸ்டீபனின் ஓவியத் திறமை, ஐந்து வயதில் வெளிப்பட்டது. 2006-ல், இவரது கலைச் சேவையைப் பாராட்டி, பிரிட்டிஷ் அரசவையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். MBE (Member of the Order of the British Empire)160; எனப்படும்  இங்கிலாந்தின் மிகப்பெரிய விருதைப் பெற்றார். இப்போது, லண்டனிலும் நியூயார்க்கிலும் இவரது ஆர்ட் கேலரிகள், எல்லோரையும் கவர்ந்துவருகிறது.

நூறில் ஒருவர்

நமக்கு அருகே சில நண்பர்கள் !

பாஸ்டனில் பிறந்து, கொலராடோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருபவர், டெம்பிள் கிராண்டின் (Temple Grandin).இவரது இரண்டாவது வயதில், ஆட்டிஸம் இருப்பது கண்டறியப்பட்டது. பெற்றோரின் தொடர்ச்சியான கவனிப்பு, சிறந்த ஆசிரியர்களின் அரவணைப்பால், நான்கு வயதில் பேசத் தொடங்கினார். விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்றார். சிறந்த எழுத்தாளராகவும் இருக்கிறார். 2010-ம் ஆண்டு, டைம்ஸ் பத்திரிகை தேர்ந்தெடுத்த, சிறந்த 100 மனிதர்களில் கிராண்டின் ஒருவர்.

ஜொலிக்கும் எழுத்து

வீணாகும் திறமைகள் (Wasted Talent - Musings of an Autistic) என்ற புத்தகத்தின் ஆசிரியரான கிருஷ்ணா நாராயணன், அமெரிக்க இந்தியப் பெற்றோரின் மகன். 1971-ல் பாஸ்டனில் பிறந்தார். நான்காவது வயதில், கிருஷ்ணாவுக்கு ஆட்டிஸம் இருப்பது தெரிந்தது. கிருஷ்ணாவின் இசை மற்றும் இலக்கிய ஆர்வத்தைக் கண்டுகொண்ட அவரது அம்மா, புது நம்பிக்கை பெற்றார். இப்போது, கிருஷ்ணா சிறந்த எழுத்தாளர், நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார்.

அனிமேஷன் அசத்தல்

நமக்கு அருகே சில நண்பர்கள் !

சென்னையைச் சேர்ந்த பிரவீன், பிறந்த 11 மாதங்களிலேயே ஆட்டிஸக் குழந்தை என அறியப்பட்டார். பிரவீனின் அம்மா, தனது ஆசிரியர் வேலையை உதறிவிட்டு, மகனுக்காக முழு நேரத்தையும் செலவழித்தார். அப்பா, நன்றாக ஓவியம் வரையக் கூடியவர். அவரைப்போலவே ஓவியம் வரைய ஆரம்பித்தார் பிரவீன். சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். களிமண்ணில் பொம்மைகளை உருவாக்கி, அனிமேஷன் படமாகவும் தயாரித்து, எல்லோருடைய கவனத்தையும் பெற்றார். இவருடைய திறமையைக் கண்டு, லண்டன் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் வழங்கியது இங்கிலாந்து அரசு. இப்போது சொந்தமாக அனிமேஷன் ஸ்டூடியோ அமைத்து, திறன்படச் செயலாற்றிவருகிறார் பிரவீன்.

இன்று, உலகம் முழுவதும் ஆட்டிஸக் குழந்தைகள் இருக்கிறார்கள். உங்கள் பக்கத்து வீட்டில், உங்கள் பள்ளியில், உங்கள் வகுப்பிலும் இருக்கலாம். அந்த நண்பர்களைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் திறமையை நீங்களும் ஊக்குவித்தால், சிறந்த சாதனையாளராக அவர்களை மாற்றலாம். செய்வீர்களா நண்பர்களே?

நமக்கு அருகே சில நண்பர்கள் !