Published:Updated:

இது ஆண்ட்ராய்டு அசத்தல் !

வி.எஸ்.சரவணன் படங்கள் : ஆர்.முத்துக்குமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அந்தச் சாலையில் நடந்துசெல்பவர்கள் குறிப்பிட்ட இடம் வந்ததும் மூக்கைப் பொத்துகிறார்கள். காரணம், பல நாட்கள் சேர்ந்துபோன குப்பையால் கெட்ட நாற்றம் வீசுகிறது. கழிவுநீர்க் கால்வாய் திறந்துகிடக்கிறது. எல்லோரும் வேகமாகக் கடந்து, உடனே மறந்துவிடுகிறார்கள்.

''ஆனால், என்னால் அதை மறக்க முடியலை. ஸ்கூலுக்கு வந்ததும் டீச்சர்கிட்டே பேசினேன். 'இதுக்கு நாம ஏதாவது செய்யணும்’னு சொன்னேன். அப்படி உருவானதுதான், 'கிட்ஸ் ஜர்னலிஸ்ட் ஆண்ட்ராய்டு’ கண்டுபிடிப்பு'' என்கிறார் ஐஸ்வர்யா.

சென்னை, பெரம்பூர் கே.ஆர்.எம். பப்ளிக் பள்ளியில் படிக்கிறார் ஐஸ்வர்யா. சக மாணவர்களுடன் சேர்ந்து ஒரு குழுவை அமைத்தார். அவர்கள் உருவாக்கியதுதான் இந்த மென்பொருள்.

''நாம் அன்றாடம் இதுபோன்ற பிரச்னைகளை ஒரு புகைப்படம் எடுத்து, சென்னை மாநகராட்சியின் குறை தீர்க்கும் பகுதிக்கு உடனடியாக அனுப்ப, இந்த மென்பொருள் பயன்படும்'' என்கிறார் ஐஸ்வர்யா.

இது தவிர, 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள், ஏழு குழுக்களாகப் பிரிந்து, ஏழு விதமான மென்பொருளை உருவாக்கி இருக்கிறார்கள். 7-ம் வகுப்பு மாணவி பிரீத்தா மற்றும் ஃபைசா பாத்திமா, கணிதத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ளும் வகையில், 'மேத் ஆப்’ உருவாக்கி உள்ளனர். இதேபோல, 'வொண்டர் ஆப்’ எனும் மென்பொருள், உலகின் ஏழு அதிசயங்கள், இந்தியாவின் மாநிலங்கள் என்று மாணவர்களின் பொது அறிவுக்குப் பெரும்தீனியாக அமைந்துள்ளது.

இது ஆண்ட்ராய்டு அசத்தல் !

''சாலை விபத்துகளுக்குக் காரணம், சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காததுதான். இதுக்கு எங்களால் முடிந்த சின்ன விஷயம் இது'' என்கிறார் ஃபர்ஹத்ஷா. இவரது குழு உருவாக்கி இருக்கும் மென்பொருள், சாலை விதிகளையும் பாதுகாப்பான சாலைப் பயன்பாடு பற்றியும் தெரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிறது.

''எங்கள் பள்ளியில், 80 மாணவர்களுக்கு ஜாவா புரோகிராம் பயிற்சியை நான்கு மாதங்கள் அளித்தோம். அதில் தேர்வு செய்த 30 மாணவர்களே, இந்த ஏழு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை உருவாக்கினார்கள்'' என்றார், பள்ளியில் முதல்வர் சிவசக்தி பாலன்.

மாணவர்களின் இந்த முயற்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த பள்ளியின் கணினிப் பொறியாளர் ஆர்.ஜே. தாயுமானசாமி, ''இந்த மென்பொருளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக இறக்கம் செய்து பயன்பெறலாம்'' என்றார்.

இது ஆண்ட்ராய்டு அசத்தல் !

மென்பொருளை உருவாக்கிய ஒவ்வொரு குழுவும் அதுபற்றி எளிமையாக மற்றவர்களுக்கு விளக்கிக் கூறுகிறார்கள். மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களை உடனே தீர்த்துவைக்கிறார்கள்.

''வீடியோ கேம், படங்கள் பார்ப்பது என தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொழுதுபோக்காக மட்டும் இன்றி சமூகத்துக்குப் பயன்தரும் விதத்தில் நாங்கள் பயன்படுத்துவோம்'' எனப் பெருமிதத்துடன் சொல்கிறார்கள், ஆண்ட்ராய்டு மாணவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு