
''ஹலோ நண்பர்களே... மதுரைக்கு சுற்றுலா என்றதும், மீனாட்சி அம்மன் கோயில், நாயக்கர் மஹால்தான் கவனத்துக்கு வரும். மதுரைக்கு மிக அருகே பார்க்க வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமும் இருக்கு, வாங்களேன்'' என்று அழைத்தார் பர்வத வர்த்தினி. இவர், 'லிட்டில்ஸ் குழந்தைகள் மையம்’ என்ற அமைப்பின் நிர்வாக அறங்காவலர்.
மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது, நாகமலை புதுக்கோட்டை. இதன் அருகே கம்பீரமாக வரவேற்கிறது, கி.பி.8-ம் நூற்றாண்டின் கீழக்குயில்குடி சமணர் மலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'லிட்டில்ஸ்’ குழந்தைகள் மையத்தின் 32 குழந்தைகளுடன் நம்மை வரவேற்றார் பர்வதவர்த்தினி. அடிவாரத்தில் இருந்த அய்யனார் கோயில், தாமரைக்குளம் மற்றும் பாதுகாக்கப்பட்ட ஆலமரங்கள், அந்த இடத்துக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.
''இந்த இடத்துக்கு என்ன விசேஷம்னா...' என்று பர்வதவர்த்தினி ஆரம்பிக்க, ''அம்மா... நாங்க சொல்றோம்... நாங்க சொல்றோம்'' என்றார்கள் சுட்டிகள்.

''அங்கிள்... இது, தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் சமணர்கள் வாழ்ந்த பகுதி. மலைக்கு மேலே சமணர்களின் பல்வேறு சிற்பங்கள், வட்டெழுத்துகளைப் பார்க்கலாம் வாங்க'' என்றவாறு, மலை மீது உற்சாகத்துடன் ஓடினார்கள். லிட்டில்ஸ் அமைப்பின் தன்னார்வலர்களான தாரிணி, ராஜாராம், கனிமொழி, ஆறுமுகம், தமிழரசன் ஆகியோர் சேர்ந்துகொண்டார்கள்.
'13-ம் நூற்றாண்டில் இங்கு சமணம் வளர்ந்துவந்தபோது, கர்நாடகாவில் உள்ள சரவணபெலகுலாவுக்கும் மதுரைக்கும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்த இடம் இது. இதைச் சுற்றியுள்ள கொங்கர் புளியங்குளம், நாகமலை, தென்பரங்குன்றம், ஓந்திமலை போன்ற படுகைகளில் சமணர்களோடு, சமணத் துறவிகளும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்தார்கள். புத்த மதத்துக்கு நாளந்தா பல்கலைக்கழகம் மாதிரி, தமிழ்நாட்டில் சமணர்களுக்கான அடையாளம் இது. இந்த மலை உச்சியில், 'பேச்சிப்பள்ளம் ஊற்று' என்ற வற்றாத ஊற்று இருக்கு'' என்றார் ராஜாராம்.

மலை மீது இருந்த சிற்பங்களைப் பார்வையிட்டோம். அந்தக் காலத்தில் வாழ்ந்த சமணர்கள், அவர்கள் படைத்த இலக்கியங்கள், சைவத்துக்கும் சமணத்துக்கும் இடையே நடந்த சண்டைகள் எனப் பல்வேறு தகவல்களை சுட்டிகளிடம் சொன்னார் தமிழரசன்.
''விடுமுறையில் மால், தீம் பார்க் போன்ற இடங்களுக்கு மட்டுமே போகாமல், இதுபோன்ற இடங்களுக்கும் வரணும். நமது முன்னோர்களின் வரலாறையும் தெரிஞ்சுக்கலாம். சுத்தமான காற்றையும் சுவாசிக்கலாம்'' என்றார் பர்வதவர்த்தினி.
பிறகு, கீழே இறங்கிவந்தோம். செட்டிபுடவு சமணர் படுகை என்ற இடத்தில் இருந்த குகையும், மகாவீரரின் சிற்பமும் அந்தக் காலத்துக்கே அழைத்துச்சென்றது. அதன் அழகை ரசித்தவாறு, கொண்டுவந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிட்ட சுட்டிகள், குப்பைகளைக் கவனமாக ஒரு பையில் சேகரித்து வைத்துக்கொண்டார்கள்.

''அங்கிள், இங்கே வர்ற சிலர், பாலித்தீன் கவர், பாட்டில்களைப் போட்டு சுற்றுப்புறத்தைக் கெடுக்கிறாங்க. அவங்க பெயர்களைக் கிறுக்கிவைக்கிறாங்க. இது மாதிரி வரலாற்று மையங்களைப் பத்திரமா பாதுகாக்கணும். நாம பார்த்து சந்தோஷப்படுற மாதிரி, நமக்குப் பின்னால வர்றவங்களும் பார்க்கணும்.' என்று பொறுப்புடன் சொல்லி, புன்னகையுடன் கையசைத்து விடைகொடுத்தார்கள் சுட்டிகள்.
லிட்டில்ஸ் குழந்தைகள் மையம் பற்றி...
குழந்தைகளுக்கான இந்த மையம், நாகமலை புதுக்கோட்டையில் 2002-ல் தொடங்கப்பட்டது. கிராமப்புற பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் முதல் தலைமுறைக் குழந்தைகளின் கல்வி நலனை முன்னிறுத்திச் செயல்படுகிறது. தற்போது, திருப்பரங்குன்றம் பகுதியில், 15 கிராமங்களில் உள்ள சுமார் 300 குழந்தைகளுக்கு, 20 தன்னார்வலர்களோடு, உள்நாட்டுக் கொடையாளர்களின் உதவியால் இயங்குகிறது. 'வாசிப்பை நேசிப்போம்’ எனக் குழந்தைகள் நூலகம், நாடகம், பொம்மலாட்டம், கதை சொல்லுதல், கவிதை, கட்டுரை எழுதுதல், படம் வரைதல், குழந்தைகள் கையெழுத்து மடல், குழந்தைகளுக்கான திரைப்படங்கள் திரையிடல் எனப் பல தளங்களில் இயங்குகிறது.