Published:Updated:

விவசாயத் தாத்தாவின் அபூர்வ அருங்காட்சியகம் !

இ.கார்த்திகேயன் படங்கள் :தி.ஹரிஹரன்

விவசாயத் தாத்தாவின் அபூர்வ அருங்காட்சியகம் !

இ.கார்த்திகேயன் படங்கள் :தி.ஹரிஹரன்

Published:Updated:

''இந்த லீவுக்கு, யாரும் பார்க்காத இடத்துக்குப் போகணும்'' என்றார்கள், வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்களில் சிலர்.

''அவ்வளவுதானே... தனி மனிதராக, 500 வருடங்களுக்கு முந்தைய பல்வேறு பொருள்களைச்  சேகரித்து, மியூஸியம் வைத்திருக்கும் ஒரு விவசாயியைச் சந்திக்கலாம் வாங்க'' என்று அத்தாளநல்லூருக்கு அழைத்துச்சென்றோம்.

''நீங்க பாடப் புத்தகங்களில் படித்த, படங்களாகப் பார்த்த பழங்காலப் பொருள்களை இங்கே பார்க்கலாம்'' என்று வரவேற்றார், முருகையா பாண்டியன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயத் தாத்தாவின் அபூர்வ அருங்காட்சியகம் !

பல்வேறு பழங்கால ஓவியங்கள் பற்றிய இவரது ஆய்வுக் குறிப்புகள் பிரமிக்கவைக்கின்றன. ''திருப்புடைமருதூரில் இருக்கும் நாறும்பூநாதசுவாமி- கோமதியம்மன் கோயிலின் உள்ளே, எல்லாச் சுவர்களிலும் மண், செம்மண், இலைச்சாறு எனப் பலவித இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி ஓவியம் வரைந்துள்ளனர். அந்த ஒவியங்கள், கி.பி 16-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் வரையப்பட்டவை. இதுபற்றி என் தாத்தா நிறையச் சொல்வார். என்னோட சின்ன வயதில் அந்த ஓவியங்களைப் பக்கத்தில் பார்த்துக் குறிப்பெடுக்க ஆரம்பிச்சேன். பெரிய புராணம், ராமாயணம், மகாபாரதம் மற்றும் இதிகாச நிகழ்வுகள், போர்ச்சுக்கீசியர்களுடன் வாணிப ஒப்பந்தம் போன்ற சரித்திரச் சான்றுகள், தமிழ்க் கலாசாரங்களை விவரிக்கும் பல வகையான ஒவியங்களையும் ஆய்வுசெய்திருக்கேன்'' எனக் காண்பித்தார்.

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ், பிராமி  எழுத்துகள், வட்டெழுத்துகளின் குறிப்பேடுகள் மற்றும் ஓலைச்சுவடிகளையும் அங்கே பார்க்க முடிந்தது.

விவசாயத் தாத்தாவின் அபூர்வ அருங்காட்சியகம் !

''இது என்ன பானையா தாத்தா?'' என்று கேட்டான் ஒரு மாணவன்.

''இதுதான் முதுமக்கள் தாழி. இறந்தவரை இதில் வைத்து, அவருக்குப் பிடித்த உணவு, நகைகள் எல்லாம் அணிவித்துப் புதைப்பார்கள். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில்தான் இதுவரை அதிகமான முதுமக்கள் தாழிகள், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதோட பேரு, மூலிகைக்குவளை'' என்று ஒன்றைச் சுட்டிக்காட்டினார்.

விவசாயத் தாத்தாவின் அபூர்வ அருங்காட்சியகம் !

''மூலிகை மருந்து தயாரிக்கும் குவளையா தாத்தா?'' என்று கேட்டாள் ஒரு மாணவி.

''மருந்துகள் அரைப்பதற்கு குழிகல்லுன்னு ஒண்ணு இருக்கு. இது வேற ரகம். அந்தக் காலத்தில் அரசர்கள் நாட்டை ஆளக் கடுமையான போட்டி இருந்தது. அரசரை விஷம்வைத்துக் கொல்வது அடிக்கடி நடக்கும். தாங்கள் சாப்பிடும் உணவில் விஷம் இருக்குமோ என்று சந்தேகித்தால், அதைக் கண்டுபிடிக்க, மூலிகையால் செய்யப்பட்ட இந்தக் குவளையில் உணவைப் போடுவாங்க. உணவில் விஷம் இருந்தால், தெரிந்துவிடும்'' என்றார்.

விவசாயத் தாத்தாவின் அபூர்வ அருங்காட்சியகம் !

70 நாடுகளின் 1000-க்கும் மேற்பட்ட நாணயங்கள், பழங்கால ஆயுதங்கள், 100 தேதிகளுடன் உள்ள கடிகாரம், ஆங்கிலேயர் பயன்படுத்திய ரிவால்வர்,  மலைவாழ் மக்களின் ஊதுகுழல், அனகோண்டா போன்ற பெரிய பாம்பின் மீது நேபாள மக்கள் அமர்ந்து, பாம்பை அடக்குவது போன்று செய்யப்பட்ட அபூர்வக்  கம்பி, இரட்டை நாக்கு மணி, அரண்மனைகளைப் பூட்டும் உழக்குப்பூட்டு, பெண்கள் கூந்தலைச் சிக்கெடுக்கும் சிக்குலி, முதுமக்கள் பயன்படுத்திய மண் இட்லிச்சட்டி என அத்தனையும் பொக்கிஷப் புதையல்கள்.

விவசாயத் தாத்தாவின் அபூர்வ அருங்காட்சியகம் !

எல்லாவற்றையும் பார்த்து முடித்த மாணவர்கள், ''இதே பகுதியில் இருந்தும், இப்படி ஒரு மியூசியம் இருப்பது நமக்குத் தெரியாமப்போச்சு. நாங்களும் இனிமேல் பழங்காலப் பொருள்களைச் சேகரிக்கப்போறோம்'' என்றார்கள் உற்சாகத்துடன்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, வீரவநல்லூரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள அத்தாளநல்லூரில் உள்ளது இந்த அருங்காட்சியகம். கடந்த 2000-ம் ஆண்டு முதல் அரசு அனுமதி பெற்று இயங்கிவருகிறது. பார்வை நேரம் காலை 10 முதல் மாலை 4 மணி. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட கட்டணம் கிடையாது. இதன் நிறுவனர் மற்றும் இயக்குநர், 72 வயதான முருகையா பாண்டியன். பி.ஏ பட்டதாரியான இவரின் தொழில், விவசாயம். இவரின் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு, இவரின் உதவியால் 90 மாணவர்கள் எம்.ஃபில் பட்டமும், 38 ஆராய்ச்சி மாணவர்கள் பிஹெச்.டி பட்டமும் பெற்றுள்ளனர். வெளிமாவட்ட, வெளிமாநில மாணவர்கள் ஆராய்ச்சிக்காக இவரைத் தேடிவந்தால், அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளையும் செய்துகொடுக்கிறார்.