Published:Updated:

மை டியர் ஜீபா...

ஹாசிப்கான்

மை டியர் ஜீபா...

ஹாசிப்கான்

Published:Updated:

''ஹாய் ஜீபா... குதுப்மினார் அருகில் இருக்கும் இரும்புத்தூண் துருப்பிடிக்காமல் இருப்பது எப்படி?''

- ஆர்.கிருபாகரன், பெரம்பலூர். - ஏ.சுரேந்தர் ராஜ், தேனி.

''கிட்டத்தட்ட 1,600 வருடங்களுக்கு முன்பு, நம் நாட்டின் உலோகவியல் நிபுணர்களால், தில்லியில் இந்தத் தூண் வடிவமைக்கப்பட்டது. கி.மு.320 - 540 வருடங்களில்... குப்த மன்னர்களின் ராஜ்ஜியம் நடந்தபோது, குமார குப்தர் என்னும் மன்னரால் நிறுவப்பட்டது. 7.3 மீட்டர் உயரம் உள்ள இந்தத் தூணின் அடிப்பாகம், பூமிக்குக் கீழேயும் ஒரு மீட்டர் இருக்கிறது. கான்பூர் ஐஐடி-யின் உலோகவியல் துறை நிபுணர்கள், இந்தத் தூணை ஆராய்ந்தார்கள். இரும்பு, ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் ஆகிய மூன்றும் கலந்த, 'மிஸாவைட்’ (Misawite) எனப்படும் ஒரு மெல்லிய படலம் இந்தத் தூணை துருப்பிடிக்காமல் பாதுகாப்பதைக் கண்டறிந்தார்கள். தூணை நிறுவிய மூன்று ஆண்டுகளுக்குள் இந்தப் படலம் உருவாகி, மிக மிக மெதுவாக வளர்ந்துவருவதாகவும் கூறுகின்றனர். தூண் செய்யப் பயன்படுத்திய இரும்பில் இருக்கும் அதிக அளவு பாஸ்பரஸ்தான், இந்தப் படலம் உருவாகக் காரணம்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''டியர் ஜீபா... இரும்பு ஆணியையோ, இரும்புப் பொருள்களையோ தண்ணீரில் போட்டால், உடனே மூழ்கிவிடும். ஆனால், அதிக எடையுள்ள கப்பல் கடலில் மிதப்பது எப்படி?''

- அ.தமிழ் அரும்பி, திருக்குவளை.

மை டியர் ஜீபா...

''தண்ணீருக்குள் ஒரு பொருள் விழும்போது, இரண்டு விசைகள் செயல்படுகின்றன. புவி ஈர்ப்பு விசை, அந்தப் பொருளைக் கீழ்நோக்கி இழுக்கும். மிதப்பு விசை, பொருளை மேல் நோக்கித் தள்ளும். ஆணி போன்ற சிறிய பொருள்கள் எடை குறைவாக இருப்பதால், புவி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, மூழ்கிவிடுகின்றன. எடை அதிகமான பொருள்களில் மிதப்பு விசை, புவி ஈர்ப்பு விசையைவிட அதிகமாக இருக்கும். உதாரணமாக, தண்ணீர் உள்ள பாத்டப்பில் இறங்கும்போது, அதன் நீர்மட்டம் உயரும். காரணம், நம் உடல் குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமிக்கிறது. அதேபோல, ஒரு கப்பல் நீரில் நிற்கும்போது, நீர்மட்டத்தை உயரச் செய்கிறது. அதாவது, கப்பலின் எடைக்குச் சரிசமமான அளவில் நீரை விலக்குகிறது. இடம்பெயர்ந்த நீர் அனைத்தும், ஒரே நேரத்தில் மீண்டும் அதன் இடத்துக்குத் திரும்பி வர முயற்சித்துக் கப்பலை மேல்நோக்கி உந்துகிறது. அந்த மிதப்பு விசையினால்தான் (Buoyancy force)கப்பல் மிதக்கிறது.''

மை டியர் ஜீபா...

''அன்பு ஜீபா... எனக்குப் பிடிச்ச கார்ட்டூன் மிக்கி மவுஸ். அதுக்கு ஏன் நாலு விரல்கள்தான் இருக்கு?''

- ம.யூ. அபிநயா, கரியாப்பட்டினம்.

''நீங்கள் எல்லாம் இப்படிக் கேட்பீர்கள் என்று தெரிந்துதான், வால்ட் டிஸ்னி அப்போதே இதற்கான பதிலைப் பதிவு செய்திருக்கிறார். 'ஒரு விரலை விட்டுவிட்டு, நான்கு விரல்களுடன் மிக்கி மவுஸை வடிவமைப்பது என்பது, கலையம்ச ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எங்களுக்கான மிகப் பெரிய சேமிப்பு. எப்படி என்றால், கலை ரீதியாகப் பார்க்கும்போது, ஐந்து விரல்கள் என்பது ஒரு எலிக்கு ரொம்ப அதிகம். அதன் கைகள்,  வாழைப்பழக் குலை போல இருக்கும். மேலும், ஆறரை நிமிடம் ஓடக்கூடிய ஒரு குறும்படத்துக்கு 45 ஆயிரம் கார்ட்டூன்கள் வரைய வேண்டும். அவை அனைத்திலும், ஐந்தாவதாக ஒரு விரல் போடாமல் விடுவதால், பொருளாதார ரீதியாக மில்லியன் கணக்கில் டாலர்கள் மிச்சம்’ என்கிறார் டிஸ்னி. பணத்தையும் நேரத்தையும் இன்னும் மிச்சப்படுத்த, மிக்கி மவுஸ் தன் வாலையும் இழக்க வேண்டியதாயிற்றாம்.''

''டியர் ஜீபா... ஸ்நாக்ஸ் பாக்கெட்களில் கொஞ்சம் சிப்ஸும் மீதிக்கு காற்றையும் நிரப்புவது ஏன்?''

- ஆர். அபிஷேக், தொப்பம்பட்டி.

''இதுபோன்ற சிப்ஸ் பாக்கெட்களில் நிரப்பப்படும் காற்று, நைட்ரஜன். இது, பாக்கெட்களின் எடையை உயர்த்தாது. அதே சமயம்,  உள்ளே இருக்கும் உணவின் சுவையைக் கெடாமல் பாதுகாக்கிறது. சிப்ஸ் போன்றவை நொறுங்கிவிடாமல் இருக்கவும் பயன்படுகிறது. இப்படி உணவுப் பொருள்கள் அடைக்கப்படும் பாக்கெட்டுகளில் நைட்ரஜன் வாயுவை நிரப்பும் பழக்கம், உணவியல் நிபுணர்களால் 1994-ல் கண்டுபிடிக்கப்பட்டது. 'இந்த வாயுவால் எந்தக் கெடுதலும் இல்லை. நாம் சுவாசிக்கும் காற்று, 78 சதவிகிதம் நைட்ரஜன் கலந்ததுதான்’ என்கிறார்கள் உணவு விஞ்ஞானிகள். ஆனாலும், இதுபோன்ற பாக்கெட் உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.''

மை டியர் ஜீபா...

''ஹலோ ஜீபா... கனவு நல்லதாகவோ, கெட்டதாகவோ அல்லது குழப்பமானதாகவோ வருவதற்குக் காரணம் என்ன?''

- ம.நர்மதாஸ்ரீ, பொள்ளாச்சி.

''ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதுதான் நமக்குக் கனவுகள் வரும். நாம் சென்ற இடங்கள், பார்த்த சம்பவங்கள், பெயர்கள் போன்றவை, மூளையில் ஒரு தற்காலிகமான இடத்தில் சேமிக்கப்படும். இந்தத் தகவல்கள்தான்  ஒன்றுடன் ஒன்றாக இணைந்து கனவுகளாக வருகின்றன. மூளைக்கு அடியில் உள்ள 'பான்ஸ்’ என்ற உறுப்புதான் கனவுகளைத் தூண்டிவிடுகின்றன. அந்தக் கனவுகளில் நாமும் இருப்போம். 'நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்புதான் கனவு’ என்கிறார், உலகப் புகழ்பெற்ற உளவியல் நிபுணர் சிக்மண்ட் ஃப்ராய்டு''.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism