Published:Updated:

மை டியர் ஜீபா...

ஹாசிப்கான்

மை டியர் ஜீபா...

ஹாசிப்கான்

Published:Updated:

''ஹலோ ஜீபா... உலகிலேயே மிகக் கொடிய பூச்சி எது?''

- எஸ்.நிதிஸ்குமார், லாலாப்பேட்டை.

''இதற்கு முடிவான பதிலைச் சொல்வது மிகவும் கஷ்டம் நிதிஸ். ஏனெனில், உலகில் உள்ள அனைத்து விலங்குகளில், பூச்சி வகைகளே மிக அதிகம். இந்தப் பரந்த பூமியில், பல கோடி பூச்சி வகைகள் உள்ளன. இன்னும் அறியப்படாத பூச்சி இனங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன என்கிறார்கள் விலங்கியல் நிபுணர்கள். மிகக் கொடிய எறும்பு, அதி பயங்கர சிலந்தி, விஷக் குளவி, உயிர் பறிக்கும் தேனீ என்று பூச்சிகளைப் பல பிரிவுகளில் பட்டியல் போட வேண்டும். எறும்பு வகைகளில் தீ எறும்பு (Fire ant), தேனீயைப் போல கொட்டும் ஈ வகைகளில் ஒன்றான, டிஸிடிஸி (Tsetse fly), மிகக் கொடிய விஷச் சிலந்தி என்று கின்னஸ் புத்தகத்தில் (2010) இடம்பெற்ற, பிரேசிலியன் வாண்டரிங் சிலந்தி (Brazilian Wandering Spider), மலேரியாவைப் பரப்பி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்லும் அனோப்லேஸ் கொசு (anopheles mosquito) என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். சினிமா, விளையாட்டுகளில் டாப் 10 ரேட்டிங், ஏறி இறங்குவது போலத்தான் இது.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மை டியர் ஜீபா...

''ஹாய் ஜீபா... எனக்கு ஒரு டவுட். நெய் சாப்பிட்டால் உடல் பருமன் ஆகுமா?''

- எம்.வினோத், திருச்சி.

''மக்களிடம் சமீப காலமாக இருக்கும் தவறான கருத்துகளில் இதுவும் ஒன்று. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, நமது ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் நெய் முக்கியமான மருந்துப் பொருளாக இருந்துள்ளது. மருந்தைக் கெடாமல் வைத்திருக்க நெய் பயன்படுகிறது.உடலுக்கு நன்மை செய்யும் ஒமேகா 3 என்ற கொழுப்பு, நெய்யில் இருக்கிறது. இது, உடல் பருமனைக் குறைக்குமே தவிர, பெருக்கவைக்காது. உயிர்ச்சத்து ஏ, டி, இ போன்றவை சரிவிகிதமாக இருப்பது நெய்யில்தான். மீன் எண்ணெய் மற்றும் நெய் தவிர, வேறு எதிலும் இப்படி நன்மை செய்யும் கொழுப்புச்சத்து அதிகம் கிடையாது. செரிமானக் கோளாறு, உடல்சோர்வை நீக்குவது, உடலுக்குக் குளிர்ச்சி தருவது, கண் பார்வை நரம்புகளுக்கு ஊட்டம் அளிப்பது, அல்சர் போன்ற பலவற்றுக்கும் அற்புத மருந்து, நெய். தினமும் சிறிதளவு தூய்மையான நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதில் தவறே இல்லை.''

மை டியர் ஜீபா...

''டியர் ஜீபா... பியானோ இசைக்கருவி, எந்த நாட்டில் தோன்றியது?''

- ஏ.பாலகுமரன், பொள்ளாச்சி.

''பார்க்கவே கம்பீரமாக, மன்னர் போல அமர்ந்திருக்கும் பியானோ, இத்தாலியில் பிறந்தது. பியானோஃபோர்டே (Pianoforte) என்பது இதன் முழுப் பெயர். 1700-ல் கிறிஸ்டிஃபோரி (Cristifori) என்ற இசைக்கருவிக் காப்பாளரால் இது உருவாக்கப்பட்டது. இத்தாலிய எழுத்தாளர் மாஃபெய் என்பவர் 1711-ல் ஒரு கட்டுரை யில்... பியானோவின் வடிவமைப்பு பற்றி எழுதி, பிரபலப்படுத்தினார். அதைப் படித்த வியன்னாவைச் சேர்ந்த ஸில்பெர்மேன் என்பவர், பியானோவை இன்னும் மேம்படுத்தினார். 1790 முதல் 1860 வரை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தது. பியானோவின் நரம்புகள், எஃகினால் பொருத்தப்பட்டது. இப்போது, மிக நவீன வடிவங்களில் பியானோக்கள் வந்துவிட்டன.''

''ஹலோ ஜீபா... முசிறியில் உள்ள தந்தை பெரியார் பாலம் எப்போது கட்டப்பட்டது?''

- எஸ்.டி.ராஜேந்தர், முசிறி.

''முதலில் உங்களுக்கு ஒரு சபாஷ் ராஜேந்தர். உங்கள் ஊரில் இருக்கும் ஒரு இடத்தின் வரலாறைத் தெரிஞ்சுக்க நினைச்சதுக்கு. இது போன்ற ஆர்வம் ஒவ்வொருவருக்கும் வரணும். தமிழ்நாட்டின் மூன்றாவது நீளமான பாலமாக இருக்கிறது முசிறி, தந்தை பெரியார் பாலம். இதன் நீளம் 1.2 கிலோமீட்டர். காவிரி ஆற்றின் மேலே, குளித்தலை - முசிறியை இணைக்கும் இந்தப் பாலத்துக்கு 1971-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 1979-ல் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டது. அப்போது இந்தப் பாலத்தைக் கட்ட செலவான தொகை, 75 லட்சம்.''

மை டியர் ஜீபா...

''அன்பு ஜீபா... மண்ணில் புதைக்கப்படும் (மனித உடல், காய்கறிக் கழிவுகள்) மட்கும்போது, விதைகள் மட்டும் எப்படி முளைத்து வருகின்றன?''

- தா.நா.யோகஜெய், ராசிபுரம்.

''அருமையான கேள்வி யோகஜெய். தாவரவியல் ரீதியாக பதில் சொல்ல வேண்டுமானால், மகரந்தச்சேர்க்கையில் ஆரம்பித்து, வித்தக விளையம், விதைத் துறை என விளக்கமாகச் சொல்ல வேண்டும். மனித உடல், காய்கறிக் கழிவுகள் என்பது இறந்த அல்லது ஒரு பொருளில் இருந்து பிரிந்த, செயலற்ற பகுதி. ஆனால், விதை என்பது அப்படி இல்லை. அது ஓர் உயிர். ஒரு பெரிய மரத்தில் பிறந்த குழந்தைப் பருவம். ஒரு குழந்தைக்குள் மூளை, குரோமோசோம்கள், செல்கள் எல்லாமே இருக்கும். செல்களின் பெருக்கமே, குழந்தையின் வளர்ச்சி. அது போலத்தான் மிகச் சிறிய விதைக்குள் இருக்கும் உயிர்செல்கள் வளர்ந்து, செடியாக மண்ணைத் துளைத்துக்கொண்டு எழுகிறது. செடி வெளியே வந்த பிறகுதான் அதற்கு சூரிய ஒளி அவசியம். ஆனால், விதைக்கு சூரிய ஒளி இன்றியே வளரும் ஆற்றலை இயற்கை கொடுத்திருக்கிறது.''

''ஹாய் ஜீபா... தேனீக்கள், அமாவாசையின்போது தேன்கூட்டில் இருக்கும் தேனை எல்லாம் உறிஞ்சிவிடும் என்கிறார்களே உண்மையா?''

- சே.நந்தகுமார், விழுப்புரம்.

''மிகத் தவறான தகவல் நந்தகுமார். தேனீக்கள், தேனைச் சேகரித்துவைப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? மலர்கள் பூக்காத காலத்திலும் தங்களுக்கான உணவுக்குப் பிரச்னை வரக் கூடாது என்பதில் தேனீக்கள் கவனமாக இருக்கின்றன. இத்தனைக்கும் தேனீக்கள், ஒரு லட்சம் கிலோமீட்டர்கூட பறக்கும் திறன் கொண்டது. அவற்றால், ஓர் ஆண்டுக்கு 450 கிலோ தேனை சேகரிக்க முடியும். எனவே, தேனீக்களுக்கும் அமாவாசைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism