Published:Updated:

குழந்தைகளின் கூட்டாளிகள் !

வி.எஸ்.சரவணன்

குழந்தைகளின் கூட்டாளிகள் !

வி.எஸ்.சரவணன்

Published:Updated:

''புத்தரிடம் வாழ்க்கையின் விளக்கம் தேடிவந்த ஒருவருக்கு, புத்தர் எவ்வளவு சொல்லியும் மனநிறைவு கிடைக்கவில்லையாம். அப்போது, குயில் கூவும் ஓசையும் குழந்தை அழுகிற சத்தமும் கேட்டது. அதில், பல செய்திகளை உணர்ந்து, மனநிறைவாக சென்றாரம். இந்தக் கதையை எங்களிடம் ஒரு சிறுவன் சொன்னான். இந்தக் கதையின் தாக்கத்தால், 'குக்கூ குழந்தைகள் வெளி’ என்று பெயர் வைத்தோம்'' என்கிறார்கள் குக்கூ குழுவினர்.

இந்த அமைப்பை 13 ஆண்டுகளுக்கு முன் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கினார்கள். ஊர் ஊராக சென்று, குழந்தைகளுக்கு கதைகள், விளையாட்டுகளைச் சொல்லிக்கொடுப்பது, பயணங்களுக்கு அழைத்துச்செல்வது இவர்களின் நோக்கம். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் காட்டுக்குள்  சிறுவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

குழந்தைகளின் கூட்டாளிகள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அது, குழந்தைகளுக்கு உற்சாகமான புதிய உலகத்தைக் காட்டியது. ஜவ்வாது மலை வனச்சரகத்தில் நுழைந்ததும், பசுமையான காட்சிகள், பறவைகளின் ஒலி, சுத்தமான காற்று என வியந்து ரசித்தார்கள். ஒவ்வொரு இடமாகப் பார்த்து, இந்த மரத்தின் பெயர் என்ன? இந்தப் பூச்சி எப்படி கத்தும்? எனக் கேள்விகளை அடுக்க, நம்மாழ்வார் பதில் அளித்துக்கொண்டே வந்தார். நம் முன்னோர்கள் இயற்கையோடு எப்படியெல்லாம் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதையும் சொன்னார்'' என்று அந்த பசுமையான நினைவை அசைபோடுகிறார் குக்கூ அமைப்பைச் சேர்ந்த வினோத் பாலுசாமி.

சிறுவர்கள், காட்டில் தாங்கள் பார்த்த புதுபுது விதைகளை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். ஆலமர விழுதுகளில்  தொங்கி விளையாடினார்கள்.

குழந்தைகளின் கூட்டாளிகள் !

''திருப்பத்தூர் மாவட்ட துணை ஆட்சியராக இருந்த நந்தகுமார் உதவியோடு, ஜவ்வாது மலையில் ஒரு நூலகம் அமைத்தோம். அங்கே குழந்தைகளுக்கான கதை, சுற்றுச்சூழல் புத்தகங்கள் ஏராளமாக உள்ளன'' என்கிறார் பீட்டர் ஜெயராஜ்.

வேலூர் மாவட்டம், பானாவரத்தில் இரண்டாவது நூலகத்தைத் திறந்தார்கள். இந்த நூலகத்தைப் பயன்படுத்துவோர், இலங்கையில் இருந்து வந்த குழந்தைகள். மூன்றாவது நூலகத்தை, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் அமைத்திருக்கிறார்கள்.

''ஊத்துக்குளியில் அமைத்திருக்கும் விதை நாற்றுப் பண்ணைக்கு அழைத்துச்சென்று ஒவ்வொரு விதைக்கும் ஒரு கதை சொல்வோம். ஒவ்வொருவருக்கும் இரண்டு விதைகள் தருவோம். அந்த விதைகளை தங்கள் வீட்டுப் பக்கத்தில் விதைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் எல்லோரும் சந்தித்து, தங்கள் செடி எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பதை ஒரு நோட்டில் எழுத வேண்டும். பனையைத் தேடி நெடும்பயணம், பாரம்பரிய நெல் திருவிழா என்று இயற்கையோடு குழந்தைகளை இணைக்கிறோம்'' என்கிறார் அழகேஸ்வரி.

குழந்தைகளின் கூட்டாளிகள் !

''சிறுவர் புத்தகங்களையும் அதை எழுதியவர்களையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியையும் நடத்துகிறோம். சுட்டி விகடனில் அடிக்கடி கதைகள் எழுதும் ஓவியா, குக்கூ சிறுவர் குழுவில் இருக்கிறார். சிற்பம், ஓவியம், நாடகம், திரையிடுதல் உள்ளிட்டவற்றையும் செய்துவருகிறோம். குமார் அம்பாயிரம் போன்ற இசைக் கலைஞர்கள் பாராம்பரிய இசையைக் கற்றுத்தருகின்றனர். வேலு சரவணன் நாடகம் நடத்தியிருக்கிறார்'' என்கிறார் முத்துகிருஷ்ணன்.

நிலா செந்தில், பிரகாஷ், மாதேஸ்வரன், ஸ்டாலின் உள்ளிட்டோரும் இந்தக் குழுவில் இருக்கிறார்கள், ''இந்த அமைப்பை, ஏராளமான நண்பர்களின் உதவியோடுதான் நடத்துகிறோம். குழந்தைகளுக்கு கற்றுத்தருவதைவிட, அவர்களிடம் நாங்கள் இருந்து கற்றுக்கொள்வதே அதிகம். குழந்தைகள், நம்மைவிட புத்திசாலிகள்'' என்கிறவர்களின் குரலில் மகிழ்ச்சிப் பெருமிதம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism