Published:Updated:

சின்னச் சின்ன வல்லினங்கள் !

உ.சிவராமன் படங்கள் : வீ.சிவக்குமார்

சின்னச் சின்ன வல்லினங்கள் !

உ.சிவராமன் படங்கள் : வீ.சிவக்குமார்

Published:Updated:

''கோடை விடுமுறை என்றாலே, தெருவுக்குத் தெரு பயிற்சி முகாம்கள் களை கட்டும். நாங்கள் நடத்துவது, ஒரு மாத கால கூடைப்பந்தாட்டப் பயிற்சி. ஒரே ஒரு வித்தியாசம், இது முழுக்க முழுக்க இலவசப் பயிற்சி முகாம்'' என்கிறார் மணிகண்டன்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மைதானத்தில் ஒன்றாம் வகுப்பில் தொடங்கி, கல்லூரி வரையான நூற்றுக்கணக்கான மாணவர்கள், கையில் கூடைப்பந்துடன் பயிற்சியில் இருந்தார்கள்.

'நான் ஸ்கூல்ல படிக்கிறப்ப பேஸ்கட் பால் பிளேயர்.படிப்பை முடிச்சு வேலைக்குப் போன பிறகும் தினமும் நண்பர்களோடு கிரவுண்டுக்குப் போய் விளையாடுவோம். அப்போ, அங்கே விளையாட வர்ற பசங்களுக்கு, சில நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுப்போம். அப்படி ஆரம்பிச்சதுதான் இது. விளையாடும் ஆசையும் திறமையும் இருந்தும், வசதி இல்லாத இந்த மாதிரி பசங்களுக்கு ஒரு பயிற்சிமுகாம் நடத்தலாம்னு நினைச்சோம். இதோ... வெற்றிக்கரமா ஒன்பதாவது வருஷம் நடக்குது. இந்த வருஷம் 140 பசங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம்'' என்றார் மணிகண்டன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்னச் சின்ன வல்லினங்கள் !

இவருடன் அரசுப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கும் கணேசன், தனியார் பள்ளியின் உடற்பயிற்சியாளர் வெண்மணி மற்றும் கலை ஆகியோர் இணைந்து, முன்னாள் கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

''இன்னும் சிலர் எங்களோடு சேர்ந்தாங்க. இங்கே இருக்கிற பயிற்சியாளர்கள், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையில் இருந்தாலும் பயிற்சிக்கு சரியான நேரத்தில் வந்துடுவோம். ஆரம்பத்தில் உள்ளூர் பசங்க மட்டும்தான் வந்தாங்க. இப்போ, வெளியூரில் இருந்தும் வர்றாங்க.  லீவுக்காக சொந்தக்காரங்க வீட்டுக்கு வரும் பசங்களும்  வந்து கேட்பாங்க. அவங்களையும் சேர்த்துப்போம். ஒரே தகுதி, விளையாடும் ஆர்வமும் கூடைப்பந்தாட்டம் பற்றி அடிப்படையான சில விஷயங்களும் தெரிஞ்சிருக்கணும்' என்றார் கணேசன்.

சின்னச் சின்ன வல்லினங்கள் !

காலை 6.15 மணிக்கு பள்ளி மைதானம், சுட்டி கூடைப்பந்தாட்ட வீரர்களால் நிறைந்துவிடுகிறது. சில எளிய உடற்பயிற்சிகள், மைதானத்தைச் சுற்றி ஓட்டம் ஆகியன முடிந்ததும் பந்தைத் தட்டியபடி, களத்தில் இறங்குகிறார்கள் சுட்டிச் சூரர்கள். வயது மற்றும் அனுபவ ரீதியாக குழுக்கள் பிரிக்கப்படுகின்றன.

''இப்போ, பாஸிங் அண்டு மூவ்மென்ட் மட்டும்தான் கொடுப்போம். வியர்க்க வியர்க்க இந்த ப்ராக்டிஸை முடிச்சுட்டு வீட்டுக்குப் போயிடலாம். மாலை 4 மணிக்கு திரும்ப வரணும். சின்ன வார்ம் அப் முடிச்சதும்  விளையாட்டு ஆரம்பிக்கும். அவங்களை நல்லா விளையாடவிடுவோம். விளையாட்டு முடிஞ்சதும், ஒவ்வொருத்தரும் எப்படி விளையாடினாங்க, அவங்களோட ப்ளஸ், மைனஸை சொல்வோம்'' என்கிறார் வெண்மணி.

விளையாட வரும் சுட்டிகளுக்கு, மாலை நேரத்தில்  முட்டை, பால், பயிறு ஆகியன இலவசமாக வழங்கப்படுகிறது. ''எங்கள் பயிற்சியைப் பற்றி கேள்விப்பட்ட முன்னாள் எம்.பி. ஐ.பெரியசாமி, பசங்களுக்குத் தேவையான டிஷர்ட், விளையாட்டுப் பொருள்களை இலவசமாக் கொடுத்திருக்கிறார்'' என்றார் மணிகண்டன்.

சின்னச் சின்ன வல்லினங்கள் !

கடந்த வருடங்களில் இங்கே பயிற்சி எடுத்த சீனியர்களில் சிலர், மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் அசத்திக்கொண்டிருக்கிறார்கள். போலீஸ் டீம், ரயிலே டீம், பேங்க் டீம் போன்றவற்றிலும் இருக்கிறார்கள்.

''போன முறை இந்தப் பயிற்சியில் கலந்துக்கிட்ட மூணு பசங்களும், ரெண்டு பொண்ணுகளும் ஸ்டேட் மேட்ச்சில் விளையாடினாங்க. அவர்கள் பெறும் வெற்றியைத்தான் எங்களுக்கான பெரிய பரிசாக நினைக்கிறோம்'' என்கிற மணிகண்டன் குரலில் மகிழ்ச்சி.

சின்னச் சின்ன வல்லினங்கள் !

அங்கே, பரபர விளையாட்டில் இருந்த பிரபு என்ற சுட்டியை சேஸிங் செய்து நிறுத்தினோம். ''நான் அஞ்சாவது போகப்போறேன்.  ரெண்டு வருஷமா இந்த கேம்புக்கு வறேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், 'ஏண்டா லீவுல ஜாலியா விளையாடி என்ஜாய் பண்ணாம, பயிற்சி, போட்டினு ஓடுறே?’னு கேட்கறாங்க. அதை நான் கண்டுக்க மாட்டேன். இங்கே நல்லா டிரெய்னிங் எடுக்கிறதாலதான் ஸ்கூல்ல விளையாடுறப்ப ஈஸியா இருக்கு. நல்லா விளையாடி, பெரிய பேஸ்கட் பிளேயரா ஆகுறப்ப, இதே ஃப்ரெண்ட்ஸ் என்னையும் இங்கே இருக்கிறவங்களையும் டிவி-யில பார்ப்பாங்க'' என்றார்.

கலக்குங்க பசங்களா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism