Published:Updated:

அறிவியல் கதைகள் சொல்லும் அருங்காட்சியகம் !

ஞா.சுதாகர் படங்கள் : கே.ராஷசேகரன்

அறிவியல் கதைகள் சொல்லும் அருங்காட்சியகம் !

ஞா.சுதாகர் படங்கள் : கே.ராஷசேகரன்

Published:Updated:

உலகில், மனிதனால் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்ட முதல் குரல்,‘Mary had a little lamb! It fleece was white as snow!’என்ற ஆங்கிலப் பாடல். ஆகஸ்ட் 12, 1927-ல் பதிவுசெய்யப்பட்ட இந்தக் குரலைக் கேட்க ஆசையா? ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்துக்கு வாருங்கள். இது, கோவை மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அண்ணா சிலை அருகில் அமைந்துள்ளது. எத்தனையோ ஆச்சரியங்களை வைத்திருக்கும் இந்த அருங்காட்சியகம் பற்றிச் சொல்கிறார், இதன் மேலாளர் பாலகிருஷ்ணன்.

'இந்த அருங்காட்சியகம், ஜி.டி.நாயுடு அவர்களால் தொடங்கப்பட்டது. தனது கண்டுபிடிப்புகளை பலருக்கும் தெரியப்படுத்த, தொழில்நுட்பக் கல்விக் கண்காட்சிகளுக்கு அடிக்கடி ஏற்பாடு செய்வார். அதைப் பார்க்க, அறிஞர்கள் பலர் வருவார்கள். அவர்கள் கூறிய யோசனையின் பேரில், அவரது கண்டுபிடிப்புகளை நிரந்தரக் கண்காட்சியகமாக அமைத்து ஜனவரி 2, 1967-ல் இந்த அருங்காட்சியத்தைத் திறந்தார்.''

அறிவியல் கதைகள் சொல்லும் அருங்காட்சியகம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்று முதல் பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் முனைவோர் எனப் பல்வேறு தரப்பினருக்குத் தொழில்நுட்ப அறிவை வழங்கிவருகிறது. நாயுடுவின் கண்டுபிடிப்புகள், பிற நாட்டினர் அவருக்கு அளித்த விருதுகள், பிற நாட்டுத் தொழில்நுட்பங்கள், வரலாற்றுப் புகைப்படங்கள், கடிதங்கள் என அனைத்தையும் இங்கே கண்டு ரசிக்கலாம்.

'இங்கே சிறுவர்களுக்காக, சிந்தனையைத் தூண்டும் அறிவியல் விளையாட்டுகள் உள்ளன. ஒளி என்பது பல புதிர்களைக் கட்டவிழ்க்காத, இன்னும் ஆராய்ச்சிக்கு உரிய ஒன்று. அந்த ஒளியைப் பற்றி ஒளி விலகல், கோணம் விளையாட்டுகள், ஆடிகள் என அனைத்தையும் இங்கே பார்க்கலாம். பாடப் புத்தகங்களில் புரியாத அறிவியலை, நேரடியாகப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம்'' என்கிறார் பாலகிருஷ்ணன்.

அறிவியல் கதைகள் சொல்லும் அருங்காட்சியகம் !

ஜி.டி.நாயுடு, 10 அடி உயர பருத்தி, சோளம், அதிக சாறு தரும் ஆரஞ்சுகளை அப்போதே உருவாக்கியவர். அந்தப் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட கால்குலேட்டர்கள் முதல் இன்றைய தலைமுறையினர் பயன்படுத்தும் அனைத்து கால்குலேட்டர்களும் உள்ளன.

''ஜி.டி.நாயுடு ஜெர்மன் சென்றபோது, சவரம் செய்யும் கருவிகளின் தொழில்நுட்பத்தைக் கற்று வந்தார். அப்போது  அவர் கண்டுபிடித்த ஒரு பிளேடைக்கொண்டு, 100 ஆண்டுகள் சவரம் செய்யலாமாம். அவர் தயாரித்த முதல் ரேசர் இங்கே உள்ளது'' என்றார் பாலகிருஷ்ணன்.

அறிவியல் கதைகள் சொல்லும் அருங்காட்சியகம் !

பழையத் திரைப்படங்களில் கிராமபோனைப் பார்த்திருப்போம். அதற்கெல்லாம் முந்தைய ஒலிப் பேழைகள் இங்கே உள்ளன. ஜி.டி.நாயுடுவின் யு.எம்.எஸ் நிறுவனத்தில், அவரே தயாரித்த காசு

அறிவியல் கதைகள் சொல்லும் அருங்காட்சியகம் !

போட்டால் பாடும் கருவியும் இருக்கிறது. தொழிலாளர்கள், தங்கள் ஓய்வு நேரத்தில் அதில் காசு போட்டுப் பாட்டுக் கேட்பார்களாம். உலகில் எத்தனையோ ரேடியோக்கள் வந்துவிட்டன. எதிலாவது தமிழ் மொழியில் மெனு உள்ளதா? அப்படி உள்ள ஒரே ரேடியோ, இங்கு உள்ளது. இதுவும் நாயுடு தயாரித்ததுதான்.

''இன்று மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் சொகுசாகப் படம் பார்க்கிறோம். ஆனால், அப்போது பயன்படுத்தபட்ட புரொஜெக்டர்கள், கேமராக்களைப் பற்றிக்  கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இங்கே, ஆளுயர புகைப்படக் கருவி முதல் நவீன கேமரா வரை அனைத்தும் பார்க்கலாம். முதன்முதலில் இந்தியாவில் மின்சாரம் கொண்டு இயங்கும் மின்மோட்டார், மன்னர் காலம் முதல் தற்போது வரை இருக்கும் அனைத்து கைக்கடிகாரங்கள், அந்தக் காலத்து ஊட்டி வரைபடம், ஜி.டி.நாயுடுவின் பாஸ்போர்ட், விசா, இன்ஜின் பாகங்கள், ஜி.டி.நாயுடு பயன்படுத்திய பால்பாயின்ட் பேனா, காந்தி காலத்து பேனா, நவீன பேனா போன்றவையும் உள்ளன'' என்றார் பாலகிருஷ்ணன்.

அறிவியல் கதைகள் சொல்லும் அருங்காட்சியகம் !

மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட சப்பாத்தி, பூந்தி, பூரி, இட்லி தயாரிக்கும் இயந்திரங்கள், இஸ்திரிப்பெட்டி,  இயந்திரவியல் கால்குலேட்டர் என ஒவ்வொன்றும் வியக்கவைக்கிறது.

தற்போது நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களின் எடை நான்கு கிலோகூட இருக்காது. ஆனால், ஐ.பி.எம் 1984-ல் வெளியிட்ட டேபிள்டாப் கணினிகள், மிகப்பெரிதாக இருக்கும். அந்தக் கணினிகளின்

அறிவியல் கதைகள் சொல்லும் அருங்காட்சியகம் !

ஒவ்வொரு படிநிலை மாற்றத்தையும் இங்கே காணலாம். 1984-ல் வந்த ஆப்பிள் கணினியைப் பார்த்தால், இந்த ஆப்பிள்தானா அது? எனக் கேட்பீர்கள். அவ்வளவு பெரியதாக இருக்கிறது. எந்தவொரு கண்டுபிடிப்பும் ஒரே இரவில் நவீனம் அடைவது இல்லை என்பதற்குச் சான்றாகக் காட்சி அளிக்கிறது.

சிறிய விமானம், ரயில் மாதிரிகள், 2 பைசா போட்டால் நிலக்கடலை தரும் கருவி, அந்தக் காலத்து மருத்துவ உபகரணங்கள், இரும்பிலான சிரிஞ்ச் என ஆச்சரியம் தருகின்றன.

''அந்தக் காலத்தில் மேற்கத்திய நாட்டில் வாட்ச்மேன் க்ளாக் என்பது  பிரசித்திபெற்றது. இதை, இரவுக் காவலாளியிடம் முதலாளி கொடுத்துவிடுவார். காவலாளி ஒவ்வொரு குறிப்பிட்ட நேர இடைவெளியிலும் அந்தக் கடிகாரத்தை அழுத்த வேண்டும். அப்படி அழுத்தும்போது, அந்த நேரத்தைக் கடிகாரத்தில் இருக்கும் காகிதம் பதிவு செய்துவிடும். காலையில் வரும் முதலாளி, அந்தக் கடிகாரத்தைப் பிரித்து, காகிதத்தை எடுத்துப் பார்ப்பார். சரியாக அழுத்தியிருந்தால், காவலாளி தூங்கவில்லை என்று அர்த்தம்.  இதைப் பார்த்து ஊதியம் கொடுப்பார்களாம். இதுபோன்று பல சுவையான தகவல்கள், இங்கிருக்கும் ஒவ்வொரு பொருட்களின் மீதும் ஒளிந்திருக்கிறது' என்கிறார் பாலகிருஷ்ணன்.

இந்த அருங்காட்சியத்துக்குச் சென்றால், கால இயந்திரத்தில் ஏறி, அறிவியல் பயணம் சென்றுவந்த உணர்வு கிடைப்பது நிச்சயம்.

அறிவியல் கதைகள் சொல்லும் அருங்காட்சியகம் !

ஜி.டி. நாயுடு எனப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு, தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளைச் செய்தவர். கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் மார்ச் 23, 1893-ல் பிறந்தார். தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராக இருந்தார். பிறகு, தனக்கு விருப்பமான நூல்களை வாங்கிப் படித்து, தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்பட வேண்டும் என்று நினைப்பார். தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக, தொழிலாளர்களைத் திரட்டி, அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். அப்போது, சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன் சேமிப்பு முழுவதையும் கொடுத்தார். சிந்திக்கும் ஆற்றல், அயரா உழைப்பு, சுய முயற்சி ஆகியவற்றால் உலகம் போற்றும் மனிதராக உயர்ந்தார். முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து, முதன்முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கிய பெருமை ஜி.டி.நாயுவையே சேரும்.

- தூரிகை சின்னராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism