ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

வலை உலா - வரவேற்கும் அதிசய நகரம் !

சைபர்சிம்மன் படங்கள் : ப.சரவணகுமார்

'மழை வருவது மயிலுக்குத் தெரியும்’ என்று பழமொழி இருக்கிறது. உங்கள் வீட்டு நாய்க்கும் தெரியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுபோன்ற பல ஆச்சர்யங்களைத் தெரிந்துகொள்ள  அதிசய நகர இணையதளத்துக்கு விஜயம் செய்ய வேண்டும். வொண்டர்போலிஸ் (http://wonderopolis.org/).  இதுதான் அதன் இணைய முகவரி. அமெரிக்காவில் உள்ள நேஷனல் சென்டர் ஃபார் ஃபேமிலிஸ் லேனிங் அமைப்பால் நடத்தப்படும் இந்த இணையதளம், புகழ்பெற்ற டைம் பத்திரிகையால் சிறந்த தளமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

அறிவியல், உலக விஷயங்கள் எனப் பல அரிய தகவல்களை இந்தத் தளம் வழங்குகிறது. சிந்திக்க வைக்கும் கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதில்களையும் தருகிறது. அதில் ஒன்று... இடி, மழையின்போது நாய்கள் ஏன் குரைக்கின்றன?

தங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் குரைப்பதன் மூலம் நாய்கள் வெளிப்படுத்துகின்றன.  இடி, மின்னலோடு மழை வரும்போது, நாய்கள் பாதுகாப்பற்ற உணர்வை அடைகின்றன. நம்மைவிட நாய்களால் தூரத்து இடி முழக்கத்தைத் துல்லியமாகக் கேட்க முடியும். எனவேதான், இடி, மின்னல் நம் பகுதியில் தோன்றுவதற்கு முன்பே நாய்கள் தங்கள் குரைப்பின் மூலம் வெளிப்படுத்துகின்றன.

வலை உலா - வரவேற்கும் அதிசய நகரம் !

இப்படி, தினம் ஒரு கேள்விக்கான விரிவான விளக்கத்தைத் தருகிறது, வொண்டர்போலிஸ் தளம். இயல்பாக எல்லோர் மனதிலும் தோன்றும் கேள்விகளைத் தேர்வுசெய்து பதில் அளிப்பது, இந்தத் தளத்தின் சிறப்பு.

இரும்பு போன்ற சில பொருள்கள் ஏன் துருப்பிடிக்கின்றன? மொத்தம் எத்தனை உலகங்கள் இருக்கின்றன? சூடான நீரில் ஏன் புகை வருகிறது?   யானைகளுக்கு ஏன் காதுகள் பெரிதாக இருக்கின்றன? இப்படி விதவிதமான கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் தெரிந்துகொள்ளலாம்.

வலை உலா - வரவேற்கும் அதிசய நகரம் !

மேலும், தினம் ஓர் அதிசயத் தகவலையும் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு தினத்துக்கான அதிசயத் தகவல், முகப்புப் பக்கத்தில் இடம்பெறும். இதில் ஆர்வம் ஏற்பட்டு மேலும் பல தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்பினால்,  ஏற்கெனவே வெளியான தகவல்களின் பட்டியலையும் பார்க்கலாம். எக்ஸ்ப்ளோர் என்கிற தலைப்பின் கீழ் உள்ள இந்தப் பட்டியலில், உங்களைக் கவரும் கேள்வியைத் தேர்வுசெய்தும் படிக்கலாம்.

வலை உலா - வரவேற்கும் அதிசய நகரம் !

கேள்விகளை, அவற்றின் துறை சார்ந்தும் தேர்வு செய்யலாம். அதேபோல, சமீபத்திய கேள்விகள் மற்றும் மிகவும் பிரபலமான கேள்விகள், தனியே அடையாளம் காட்டப்படுகின்றன. அவற்றையும் க்ளிக் செய்து, புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். உங்கள் மனதில் பல கேள்விகள் இருக்கலாம். அத்தகைய கேள்விகளுக்குப்  பதில் அளிக்கும் இடமாகவும் இந்தத் தளம் இருக்கிறது.

இந்த இணையதளத்தை புக்மார்க் செய்யுங்கள். தினம் ஓர் அதிசயத்தை அறிந்து, நண்பர்களிடம் சொல்லி அசத்துங்கள்!

வலை உலா - வரவேற்கும் அதிசய நகரம் !